Published : 27 Nov 2014 10:59 AM
Last Updated : 27 Nov 2014 10:59 AM

சிகரெட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும்: அன்புமணி

சிகரெட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என முன்னாள் சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புகைப் பிடிக்கும் வழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் ரமேஷ் சந்திரா குழு அளித்துள்ள பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டிருப்பதுடன் அவை விரைவில் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இளைய தலைமுறையினரைக் காக்க வேண்டும் என்ற நல்ல நோக்குடன் மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மிகவும் சிறப்பானவை. இவற்றை நான் வரவேற்கிறேன்.

ரமேஷ் சந்திரா குழு அளித்துள்ள பரிந்துரைகளில் மிகவும் முக்கியமானது இனி வரும் காலங்களில் சிகரெட் பாக்கெட்டுகளாகத் தான் விற்பனை செய்யப்படும்; சில்லரையில் விற்கப்படாது என்பதாகும். பாக்கெட்டுகளாக விற்கப்படும்போது, சிகரெட்டுகளை வாங்க அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதால், பலரும் அதை வாங்க மாட்டார்கள்; குறிப்பாக பெற்றோர் செலவுக்குத் தரும் சிறிய தொகையைக் கொண்டு இதுவரை சிகரெட்டுகளை வாங்கிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களால் இனி அதை வாங்க முடியாது; இதனால் வெண் சுருட்டு புகைப்பது பெருமளவில் குறையும் என்ற நோக்கம் தான் இந்த பரிந்துரைக்கு காரணம் ஆகும். இந்த வாதம் ஓரளவு சரியானது தான் என்ற போதிலும், இதுவே எதிர்மறையாகி இதுவரை ஒன்றிரண்டு சிகரெட்டுகளை மட்டும் புகைத்து வந்தவர்கள் இனி பாக்கெட் கணக்கில் புகைக்கும் ஆபத்து இருப்பதை ஆட்சியாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், பெட்டிக் கடைகளிலும், தேனீர் கடைகளிலும் சிகரெட்டுகள் மறைமுகமாக சில்லரையில் விற்பனை செய்யப்படுவது தொடரும் என்ற நிலையில் இந்த நல்ல திட்டத்தை நடைமுறைப்படுத்துவது எந்த அளவுக்கு சாத்தியம் என்ற வினாவும் எழுகிறது.

வல்லுனர் குழுவின் பரிந்துரைகள் முழுமையாக செயல்படுத்தப்பட்டால், சிகரெட்டு விற்பனை 10 முதல் 20% வரை மட்டுமே குறையும் என்று மத்திய அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது.

சிகரெட்டு புகைப்பதற்கான சட்டபூர்வ வயதை இப்போதுள்ள 18-லிருந்து 25 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதும் வரவேற்கத்தக்கதாகும். பொதுவாக 25 வயது வரை புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகாதவர்கள் அதன்பின் அப்பழக்கத்திற்கு அடிமையாவதில்லை என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் மாணவர்களும், பதின்வயதினரும் புகைப்பழக்கத்திற்கு அடிமையாவதை இந்த நடவடிக்கை தடுக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை. அதேநேரத்தில் இதுவும் எந்தளவுக்கு நடைமுறை சாத்தியம் என்பது தெரியவில்லை. இத்தகைய சட்டங்களையும், விதிகளையும் மத்திய அரசு இயற்றும் போதிலும் இவற்றை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்குத் தான் உள்ளது. ஆனால், மாநில அரசுகள் பல்வேறு காரணங்களுக்காக இதுபோன்ற சட்டங்களையும், விதிகளையும் செயல்படுத்துவதில்லை என்பது கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

புதிதாக உருவாக்கப்படவுள்ள விதிகளும் அதேபோல் காற்றில் பறக்கவிடப் படாமல் மாநில அரசுகளால் கடுமையாக செயல்படுத்தப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

அதேபோல், பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை தற்போதுள்ள 200 ரூபாயிலிருந்து ரூ.20,000ஆக உயர்த்த வேண்டும் என்ற பரிந்துரையும் சிறப்பானதாகும்.

இந்த பரிந்துரைகள் அனைத்தும் வெண்சுருட்டை மட்டுமே மையமாகக் கொண்டிருக்கின்றனவே தவிர, இன்னும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் பீடிகள் மீது எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.

எனவே, சிகரெட்டுகளுக்கும், பீடிகளுக்கும் தனித்தனி விகிதத்தில் வரி விதிப்பதை விடுத்து இரண்டுக்கும் ஒரே மாதிரியான வரிவிதிப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்; சிகரெட்டு, பீடி உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது 85% பரப்பளவில் எச்சரிக்கைப் படங்களை வெளியிடும் முடிவை உறுதியாக செயல்படுத்துவது உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்து அவற்றை உறுதியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x