Published : 27 May 2016 09:30 AM
Last Updated : 27 May 2016 09:30 AM

சான்றிதழ்களில் ஜாதி, மதத்தை குறிப்பிட பள்ளி நிர்வாகங்கள் நிர்பந்திக்கக் கூடாது என வழக்கு: அரசின் கருத்தை தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவு

மாணவர்களின் கல்விச் சான்றிதழ்களில் ஜாதி, மதத்தைக் குறிப்பிட பள்ளி நிர்வாகங்கள் நிர்பந்திக்கக் கூடாது என தொடரப்பட்ட பொதுநல வழக்கில், தமிழக அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஜி.பாலகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘‘நாட்டின் வளர்ச்சிக்கு ஜாதியும், மதமும் பெரிய தடைக்கற்களாக உள்ளன. நம்முடைய அரசியலமைப்பு ஜாதியற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என கூறுகிறது. அந்த வரிசையில் சமூக நீதியை நிலைநாட்டுவதில் முன்னோடி மாநிலமாக தமிழகம் உள்ளது.

கடந்த 1973-ல் தமிழக கல்வித் துறை சார்பில் பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவில், ‘‘மாணவர்கள் தங்களது ஜாதி, மதத்தை பள்ளி கல்விச் சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்பங்களில் குறிப்பிட விரும்பவில்லை என தெரிவித்தால் அதை பள்ளி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளது. ஆனால் அப்படி ஒரு அரசாணை இருப்பதே பொதுமக்களுக்கு தெரியாது.

இந்த 1973 அரசாணையை வலியுறுத்தும் வகையில் கடந்த 2000-ம் ஆண்டிலும் இதேபோல் ஒரு அரசாணையை மீண்டும் பிறப்பித்தது. ஆனால் பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட கல்வி சான்றிதழ்களில் கண்டிப்பாக ஜாதி, மதத்தைக் குறிப்பிட வேண்டும் என பெற்றோர்களை நிர்பந்தம் செய்கின்றனர்.

இதனால் ஜாதி, மதமே வேண்டாம் என நினைப்பவர்கள் விரக்தியின் விளிம்புக்கு செல்ல வேண்டியுள்ளது. இதுதொடர்பாக கடந்த மே 5-ம் தேதி உயர்கல்வித் துறை செயலாளர் மற்றும் பள்ளிக்கல்வித் துறை செயலர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பினேன். அதற்கு இதுவரை எந்த பதிலும் வரவில்லை. எனவே, இட ஒதுக்கீடு சலுகைகளை பெற விரும்பும் நபர்களை தவிர மற்ற மாணவர்களின் கல்வி சான்றிதழ்களில் ஜாதி, மத விவரங்களை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் என பள்ளி நிர்வாகங்கள் நிர்பந்தம் செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று விடுமுறை கால நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.வி.முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.சத்தியசந்திரன் ஆஜராகி வாதிட்டார். இந்த மனு குறித்து தமிழக அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்கும்படி சிறப்பு அரசு வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் நாராயணனுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 15-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x