Published : 01 Aug 2014 11:47 AM
Last Updated : 01 Aug 2014 11:47 AM

சரவண பவன் மீது முதல்வர் தனிப்பிரிவில் புகார் மனு: உரிமையாளர் மகன் மறுப்பு

‘சரவண பவன் ஹோட்டல் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று ஜானகிராமன் என்பவர் முதல்வர் தனிப்பிரிவில் புகார் மனு ஒன்றை வியாழக்கிழமை அளித்துள்ளார்.

இந்த மனு தொடர்பாக ஜானகி ராமன் கூறியதாவது:

நான் சென்னை நெசப்பாக்கம் பகுதியில் ப்ரியம் டிராவல்ஸ் சர்வீஸ் நிறுவனம் நடத்தி வருகிறேன். அதன் மூலம் பல வருடங்களாக வெளிநாடுகளுக்கு சட்டப்படி ஆட்களை அனுப்பி வருகிறேன். சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலின் மகன் சிவக்குமார், வெளிநாட்டில் உள்ள சரவண பவன் கிளைகளுக்கு ஆட்களை அனுப்ப விசா மற்றும் அரசாங்க அனுமதிகளைப் பெற்றுத் தர வேண்டும் என்று என்னை அணுகி னார். அதன்பேரில் கடந்த 4 வருடங்களாக வெளிநாடுகளுக்கு அவர்களின் ஊழியர்களைச் சட்டப்படி தூதரங்கள் மூலம் அனுப்பி வருகிறேன். ஆரம்பத்தில் சரியாகப் பணம் செலுத்தி வந்த சரவண பவன் நிறுவனத்தினர், கடந்த 19 மாதங்களாக ஆள் அனுப்பியதற்கான தொகையை தரவில்லை. எனக்குத் தர வேண்டிய ரூ.3,73,500-ஐ தர வேண்டுமென்று கேட்டேன். ஆனால், சிவக்குமாரின் தூண்டுதலின் பேரில் அவருடைய மேலாளர் மார்ஷல் மற்றும் அடையாளம் தெரியாத சிலர் மூலம் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

எனவே, சட்டத்துக்கு உட்பட்டு தொழில் செய்து வரும் எனது உயிருக்கும் எனது குடும்பத்தார் உயிருக்கும் பாதுகாப்பளிக்க வேண்டும். எனக்கு சேர வேண்டிய பணத்தைத் திருப்பித் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஜானகிராமன் கூறினார்.நிர்வாகம் விளக்கம்

இந்த புகார் குறித்து சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபாலின் மகன் சிவக்குமார், ‘தி இந்து’விடம் கூறியதாவது:

எங்கள் நிறுவனத்தின் வெளிநாட்டுக் கிளைகளில் 2 ஆயிரத்துக் கும் அதிகமான ஊழியர்கள் பணி புரிகின்றனர்.

எங்கள் நிறுவனம் 3 லட்சம் ரூபாயை கொடுக்காமல் இழுத்தடிக்கிறது என்பது சுத்தப் பொய். என் மீது புகார் அளித் துள்ள அந்த நபர், எங்கள் ஊழியர்கள் 12 பேரின் பாஸ்போர்ட்டுகளை முடக்கி வைத்துள்ளார். தூதரகத்தில் அவர் ஏதோ பிரச்சினையில் சிக்கி கொண்டதால் அவரது டிராவல் ஏஜன்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

எங்கள் ஊழியர்களின் பாஸ்போர்ட்டை திருப்பி தராதது தொடர்பாக எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். அதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை திசை திருப்பவே புகார் அளித்துள்ளார். மேலும் அவர் முன்ஜாமீன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். எந்த தவறும் செய்யாதவர் எதற்கு முன்ஜாமீனுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு சிவக்குமார் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x