Published : 22 Nov 2014 02:23 PM
Last Updated : 22 Nov 2014 02:23 PM

சட்டப்பேரவைக்கே வராத கருணாநிதிக்கு பேரவை கூட்டம் பற்றி பேச தகுதியில்லை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில்

சட்டப்பேரவைக்கே வராத திமுக தலைவர் கருணாநிதிக்கு, பேரவையை கூட்டுவது குறித்து பேச எந்தத் தகுதியும் இல்லை என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு சட்டப்பேரவையை கூட்டாதது வருத்தம் அளிக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. சட்டப்பேரவைக்கே வராதவர், பேரவை கூட்டப்படுவது பற்றி பேசத் தகுதியில்லை. பேரவைக்கு வர வேண்டும் என்றால், தான் முதல்வராக இருக்க வேண்டும் என்று கருதுபவர் கருணாநிதி. எனவேதான் திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போதெல்லாம், அவர் தன்னை எதிர்க்கட்சித் தலைவராக, ஏன் ஒரு உறுப்பினராகக்கூட கருதிக் கொண்டதில்லை.

கருணாநிதியைப் பொறுத்தவரை, சட்டப்பேரவை உறுப்பினர் என்ற பதவி இருக்க வேண்டும். அதற்குரிய பலன்கள் மற்றும் சலுகைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். பதவிக்கான உரிமைகள் கிடைக்க வேண்டும். ஆனால், பேரவை உறுப்பினர் என்ற முறையில் ஆற்றவேண்டிய கடமைகள் எதையும் செய்ய இயலாது.

சட்டப்பேரவை வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுவது தான் இந்த உறுப்பினரின் ஒரே பணி; ஒரே கடமை. அதுவும் உறுப்பினர் பதவி பறிபோய்விடக்கூடாதே என்ற ஆதங்கத்தால்தான். சட்டப் பேரவை உறுப்பினரின் கடமையே பதிவேட்டில் கையொப்பம் இடுவதோடு முடிந்து விடுகிறது என்ற திடமான கொள்கை கொண்டுள்ள கருணாநிதி, பேரவையைக் கூட்ட வேண்டும் என்று எதற்காக குரல் கொடுக்கிறார் என்பதை அவர்தான் நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.

சட்டப்பேரவை கூட்டப்படுவது குறித்து ஏற்கெனவே தெளிவாகத் தெரிவித்துள்ளேன். இந்திய அரசியலமைப்பின்படி ஒரு கூட்டத் தொடரின் கடைசி அமர்வுக்கும், அடுத்த கூட்டத் தொடரின் முதல் அமர்வுக்கும் என குறிப்பிடப்படும் தேதிக்கு இடையே உள்ள கால அளவு 6 மாதங்களுக்கு குறைவாக இருக்க வேண்டும். எனவே, சட்டப்பேரவை கூட்டத் தொடர் எப்போது கூட்டப்பட வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்.

சட்டப்பேரவை கூட்டத் தொடர்களில் நடக்கும் விவாதங்களில் எவ்வாறு பங்கெடுப்பது என்பதற்கு திமுக தனி இலக்கணமே வகுத்துள்ளது. பொய் குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே செல்வது, அதற்கு அமைச்சர்கள் பதிலளிக்கும்போது குழப்பம் விளைவிப்பது, வெளிநடப்பு செய்வது அல்லது பேரவையின் கண்ணியத்துக்கும் மாண்புக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டு வெளியேற்றச் செய்வது என்பதுதான் கடந்த 3 ஆண்டுகளாக சட்டப்பேரவையில் திமுகவினர் பங்கேற்ற வரலாறு.

இதுபோன்ற நாடகங்களை மீண்டும் அரங்கேற்றுவதற்குத்தான் ஸ்டாலின் துடிக்கிறாரா என்பதை அவர்தான் விளக்க வேண்டும் என்று நான் ஏற்கெனவே அளித்த விளக்கம் கருணாநிதிக்குப் புரியவில்லை என்றால் அதை மீண்டும் ஒருமுறை படித்து புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x