Published : 24 Aug 2016 04:54 PM
Last Updated : 24 Aug 2016 04:54 PM

சட்டப்பேரவை ஜனநாயகம் காத்திட வலியுறுத்தி இந்திய கம்யூ. தீர்மானம்

மத்திய தொழிற்சங்க அமைப்புகளின் சார்பில் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு, சட்டப்பேரவை ஜனநாயகம் காத்திட வேண்டும் என்பவை உள்ளிட்ட 5 தீர்மானங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,மாநில நிர்வாகக்குழு கூட்டம், ஆகஸ்ட் 22,23 ஆகிய இரு தினங்கள், மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் வை.செல்வராசு தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசிய செயலாளர் டி.ராஜா.எம்.பி கலந்து கொண்டனர்.

நிறைவேற்றப்பட்ட 5 தீர்மானங்கள்

1. கமல்ஹாசனுக்கு பாராட்டு

தமிழகத்தின் மிகச் சிறந்த திரைப்பட கலைஞர் கமல்ஹாசனுக்கு, செவாலியே விருது கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது. நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்குப் பிறகு இவ்விருதினை கமல்ஹாசன் பெற்றுள்ளார். சிறுவயது முதல் கடந்த அரைநூற்றாண்டிற்கும் மேலாக கலைத்துறையில், காட்டிய ஆர்வமும் கடின உழைப்பிற்கும் கிடைத்திட்ட விருதாகும். கமலுக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்வதுடன் மேலும் அவரது கலைப்பணிகள் தொடர வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

2. செப்டம்பர் 2 வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு

மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்தும் விலைவாசி உயர்வுக்கு எதிராகவும், குறைந்த பட்ச மாத ஊதியம் ரூ.18ஆயிரம், ஓய்வூதியம் மாதம் ரூபாய் மூன்றாயிரம் பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்பது, அந்நிய முதலீட்டை தவிர்த்தல் உட்பட 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, மத்திய தொழிற்சங்க அமைப்புகளின் சார்பில் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொள்ள விடுத்துள்ள அழைப்பை வரவேற்கிறது. தொழிலாளி வர்க்கம் மேற்கொள்ளும் வேலை நிறுத்த போராட்டதிற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.

3. காவிரி நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு தேவை

காவிரி நதிநீர்ப் பிரச்சனையில் நடுவர் மன்ற தீர்ப்பின் படி கர்நாடக அரசு தமிழகத்திற்குரிய தண்ணீர் கொடுக்க தொடர்ந்து மறுத்துவருகின்றது. இதன் விளைவாக டெல்டா மாவட்டங்களில் கடந்த ஐந்தாண்டு காலமாக குறுவை சாகுபடி மேற்கொள்ள இயலவில்லை. இவ்வாண்டு சம்பா சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளது.

கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் பெறவும் காவிரி மேலாண்மைக்குழு ஒழுங்காற்றுக் குழுக்களை மத்திய அரசு அமைத்திட வலியுறுத்தியும் கடந்த ஆகஸ்ட் 19 அன்று டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்றுள்ளனர். மக்களின் உணர்வுகளுக்கு மத்திய மாநில அரசுகள் உரிய மதிப்பளித்து கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் பெற்று சம்பா சாகுபடி நடைபெற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

4. சிறையில் இருப்போரை விடுதலை செய்க

தமிழக சிறைச்சாலைகளில் எவ்வித குற்றச் சாட்டும் கூறப்படாமல் விசாரணை என்ற பெயரில் பல ஆண்டுகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களையும் தண்டனை பெற்று தண்டனை காலம் முடிந்த நிலையிலும் பத்து ஆண்டுகளுக்கு மேல், 20,25 ஆண்டுகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களையும் மனிதாபிமானத்துடன் விடுதலை செய்திட வேண்டும்.

கடந்த 2008ம் ஆண்டு ஏழு ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த ஏறத்தாழ 1400 சிறைவாசிகளை தமிழக அரசு விடுதலை செய்தது, இதனை முன்னுதாரணமாகக் கொண்டு, வரும் செப்டம்பர் 15 ஆம் நாள் அண்ணா பிறந்தநாளையொட்டி நீண்டகாலமாக சிறையில் வாடும் சிறைவாசிகளை தமிழக அரசு விடுதலை செய்திட வேண்டும்.

5. சட்டப்பேரவை ஜனநாயகம் காத்திடுக

தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகள் மிகுந்த ஏமாற்றத்தை அளித்து வருகின்றது. ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சி ஆகிய இரண்டும் மக்கள் பிரச்சனைகள் குறித்து சிறிதும் கவலைப்படாமல் தங்களின் போட்டி அரசியலை பயன்படுத்திக் கொள்ள பேரவையை பயன்படுத்துவது கவலை அளிக்கின்றது. எதிர்க் கட்சியே இல்லாமல் ஆளும் கட்சி மட்டுமே பங்கு பெறக்கூடிய நிலை ஏற்கதக்கது அல்ல. திமுக உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதை உடன் ரத்து செய்திடவும், அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.

சட்டமன்ற ஜனநாயக நெறிமுறைகளை பின்பற்றி மக்கள் பிரச்சினையில் பேரவை உறுப்பினர்கள் கவனம் செலுத்திட வேண்டும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x