Published : 19 Feb 2017 09:43 AM
Last Updated : 19 Feb 2017 09:43 AM

சசிகலாவின் சபதம் நிறைவேறியது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மேற்கொண்ட சபதம் நிறைவேறியுள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்கள், அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மற்றும் எம்எல்ஏக்கள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்று மாலை அஞ்சலி செலுத்தினர். பின்னர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அதிமுக ஆட்சி மலர்ந் துள்ளதால் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் மகிழ்ச்சி யோடு உள்ளனர். ரகளை செய்து வாக்கெடுப்பை தடுத்து நிறுத்தும் நோக்கில் திமுகவினர் சட்டப்பேரவைக்கு வந்தனர். அவர்கள் எண்ணம் ஈடேறவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட கனவை நிறைவேற்றுவதுதான் எங்கள் லட்சியம். மேலும், அதிமுக ஆட்சி மலர வேண்டும் என பொதுச்செயலாளர் சசிகலா எடுத்த சபதம் இன்று (நேற்று) நிறை வேறியுள்ளது.

கடந்த 5-ம் தேதி சசிகலா கூறியது போல, அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் திமுகவினருடன் சேர்ந்து, அதிமுக அரசை கலைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட்டார்கள். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை பேரவைத் தலைவர் முடிவு செய்வார். சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்து இன்று (நேற்று) திமுகவைச் சேர்ந்தவர்கள் கடுமையாக சட்டப் பேரவையில் விமர்சனம் செய்த போது, அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற ஒருவர்கூட எதிர்த்துப் பேசவில்லை. எனவே, அதிமுக விலிருந்து பிரிந்து சென்ற வர்கள் திமுகவோடு ஐக்கியமாகி விட்டார்கள். அதிமுகவை அழிக்க முற்பட்டவர்களின் முகத்திரை இன்று கிழிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், எந்த பிரச்சினைக்கு அரசு முன்னுரிமை அளிக்கும் என நிருபர்கள் கேட்டதற்கு, “கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி தமிழகத்தில் நிலவி வருகிறது. பருவமழை இல்லாததால் நீர்நிலைகள் வறண்டுள்ளன. எனவே, குடிநீர் பிரச்சினையை தீர்க்க முன்னுரிமை வழங்கப்படும். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வார்தா புயல், வறட்சி பாதிப்புக்கு தேவையான நிவாரண நிதியை பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்வோம். நீட் தேர்வை தமிழகத்தில் அமல்படுத்த கூடாது என்ற நிலைப்பாட்டில் அரசு உள்ளது. மேலும், நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது தொடர்பான சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். பிரதமரை சந்திக்கும்போது இந்த கோரிக்கையையும் முன்வைக்க உள்ளோம்” என முதல்வர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x