Published : 28 Oct 2014 02:04 PM
Last Updated : 28 Oct 2014 02:04 PM

சகாயம் நியமனத்தை எதிர்த்த மனு தள்ளுபடி: வழக்கு செலவாக ரூ.10 ஆயிரம் செலுத்த தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

குவாரிகள் முறைகேடு தொடர்பாக ஆய்வு நடத்த ஐஏஎஸ் அதிகாரி சகாயம் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் வழக்கு செலவாக ரூ.10 ஆயிரம் செலுத்தவும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழகத்தில் செயல்படும் சட்ட விரோத குவாரிகள் தொடர்பாக சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருந்ததாவது:

அரசு அனுமதித்த அளவுக்கும் அதிகமாக மாநிலம் முழுவதும் குவாரி உரிமையாளர்கள் பலர் சட்ட விரோதமான முறையில் கனிம வளங்களை தோண்டி எடுக்கின்றனர். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்காக வழங்கப்பட்ட பூமிதான நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட தனியார் பட்டா நிலங்கள் என பல இடங்களில் சட்ட விரோதமான முறையில் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன.

தமிழகத்தில் நடக்கும் சட்ட விரோத கனிம குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறேன். எனினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கிடையே, மதுரை மாவட்ட ஆட்சியராக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பணியாற்றியபோது, அந்த மாவட்டத்தில் உள்ள கிரானைட் குவாரிகள் பற்றி ஆய்வு செய்தார். அந்த ஒரு மாவட்டத்தில் செயல்படும் குவாரிகளால் மட்டும் அரசுக்கு ரூ.16 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் அறிக்கை அனுப்பியிருந்தார்.

ஆகவே, தமிழகம் முழுவதும் செயல்படும் சட்ட விரோத குவாரிகள் பற்றி ஆய்வு நடத்தி, அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை நீதிமன்றம் நியமனம் செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் டிராஃபிக் ராமசாமி கோரியிருந்தார்.

இந்த மனு மீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், தமிழகத்தில் உள்ள குவாரிகளின் செயல்பாடுகள் பற்றி ஆராய்வதற்காக ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை சட்ட ஆணையராக நியமனம் செய்து கடந்த செப்டம்பர் 11-ம் தேதி உத்தரவிட்டது. மேலும், 2 மாதத்துக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல் செய்தது. அரசின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், மீண்டும் உயர் நீதிமன்றத்தையே அணுக அறிவுறுத்தியது. இதையடுத்து, சகாயம் நியமனம் குறித்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘சட்ட விரோதமாக செயல்படும் குவாரிகள் குறித்து மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், குவாரிகளின் செயல்பாடு பற்றி ஆய்வு செய்வதற்காக ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை நீதிமன்றம் நியமனம் செய்துள்ளது. மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்காமலேயே இந்த நியமனம் நடந்துள்ளது. இது மாநில அரசின் அதிகாரத்தை பறிப்பதாக உள்ளது’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீது தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் நேற்று விசாரணை மேற்கொண்டனர். தமிழக அரசு சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகி, சகாயம் நியமனம் குறித்து நீதிமன்றம் மறுஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி வாதாடினார்.

இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், தமிழக அரசு வழக்குச் செலவாக ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

“குவாரிகள் பற்றி ஆய்வு செய்ய ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கேட்கும் வசதிகள் அனைத்தையும் தமிழக அரசு 4 நாட்களுக்குள் செய்து தரவேண்டும். தனது பணிக்கு ஏதேனும் தடங்கல் இருப்பதாக கருதினாலோ, அரசிடமிருந்து உரிய உதவி கிடைக்காவிட்டாலோ உயர் நீதிமன்றத்தை சகாயம் நாடலாம்” என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

விசாரணை குழுவை செயல்படுத்த அரசாணை பிறப்பிக்க வேண்டும்:கருணாநிதி

கிரானைட் முறைகேடுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான விசாரணைக் குழுவை செயல்படுத்த தமிழக அரசு உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: கிரானைட் கற்களை வெட்டி எடுப்பதில் ஏராளமான முறைகேடுகள் நடப்பதாகவும் அதுபற்றி அரசு சார்பில் நடவடிக்கை எடுக்காததால், ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து, உடனடியாக விசாரணையை முடித்து அக். 28-ம் தேதிக்குள் அறிக்கை தர கடந்த மாதம் 11-ம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக அரசு, தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 18-ம் தேதி தள்ளுபடி செய்தது. அதன்பிறகும், சகாயம் தலைமையிலான குழு விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. கிரானைட் முறைகேட்டில் பல உண்மைகள் வெளிவந்துவிடுமோ என ஆளும் அதிமுக அரசு அஞ்சுகிறது. சகாயம் நியமனம் தொடர்பாக மறுசீராய்வு செய்ய வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதியை கொண்ட அமர்வு, தமிழக அரசை கடுமையாக கண்டித்துள்ளது. அத்துடன், அரசுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ஆட்சியாளர்களின் இப்படிப்பட்ட செயல்பாடுகளால் நீதிமன்றம் எந்த அளவுக்கு வேதனைப்பட்டு தீர்ப்பளித்துள்ளது என்பதை எண்ணிப் பார்த்து, உடனடியாக சகாயம் தலைமையிலான விசாரணைக் குழுவை செயல்படுத்துவதற்கான ஆணைகளை அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x