Published : 17 Sep 2014 09:07 AM
Last Updated : 17 Sep 2014 09:07 AM

சகாயம் தலைமையிலான ஆய்வுக் குழுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

தமிழ்நாட்டில் செயல்படும் கிரானைட், மணல் குவாரிகள் உள்ளிட்ட கனிம குவாரிகள் தொடர்பாக ஆய்வு நடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் தலைமையிலான குழுவை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு செவ்வாய்க்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழ்நாட்டில் செயல்படும் கிரானைட், மணல் குவாரிகள் உள்ளிட்ட கனிம குவாரிகள் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 11-ம் தேதி பிறப்பித்தது.

தமிழக அரசின் மனு விபரம்:

'தமிழ்நாட்டில் நடந்த கிரானைட், மணல் கொள்ளை தொடர்பாக தமிழக அரசு வழக்குகள் பதிவு செய்து உரிய விசாரணை நடத்தி வருகிறது. அரசு சட்டவிரோதமாக செயல்பட்ட 88 சுரங்கங்களின் உரிமங்களை ரத்து செய்துள்ளது. சட்டவிரோத சுரங்கப் பணிகள் மேற்கொண்டது தொடர்பாக 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிரானைட் ஏற்றுமதிக்கும் அரசு தடை விதித்துள்ளது.

தமிழக வருவாய்த் துறைச் செயலர் ககன்தீப் சிங் தலைமையிலான குழு இந்த விவகாரத்தை விசாரித்து வருகிறது. இந்நிலையில், சகாயம் தலைமையிலான குழுவை உயர் நீதிமன்றம் நியமித்து, தனியாக விசாரணை நடத்தப்படுமானால், இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே நடைபெற்று வரும் விசாரணையில் தாமதமும், குழப்பமும் ஏற்படும்.

சகாயத்தை நியமிப்பதற்கு முன்னர் தமிழக அரசிடம் சென்னை உயர் நீதிமன்றம் உரிய ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். எனவே, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு இன்னும் ஒரு வார காலத்திற்குள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

தமிழ்நாட்டில் செயல்படும் சட்ட விரோத குவாரிகள் தொடர்பாக சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்யநாராயணா ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாட்டில் உள்ள கனிம குவாரிகளின் செயல்பாடுகள் பற்றி ஆராய்வதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயத்தை சட்ட ஆணையராக நியமனம் செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x