Published : 25 Apr 2016 08:39 AM
Last Updated : 25 Apr 2016 08:39 AM

கோடையின் தொடக்கத்திலேயே உச்சத்தை தொட்ட வெப்பம்: மேலும் அதிகரிக்கும் என வல்லுநர்கள் எச்சரிக்கை

தமிழகத்தில் இந்த ஆண்டு கோடையின் தொடக்கத்திலேயே மிக அதிக அளவாக வேலூரில் நேற்று 110.66 டிகிரி ஃபாரன்ஹீட் (43.7 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என்று சுற்றுச்சூழல் சார்ந்த வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

தமிழகத்தில் மார்ச் மாதத்தின் பிற்பகுதியிலிருந்தே வெப்பத்தின் அளவு அதிகரிக்கத் தொடங்கியது. மார்ச் மாத இறுதி வாரத்தில் வேலூர், திருச்சி, சேலம் போன்ற பகுதிகளில் வெப்பநிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட்டை எட்டியது. கடந்த வெள்ளிக்கிழமை மிக அதிக அளவாக சென்னையில் 107.24 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு ஏப்ரல் இறுதி வாரத்தில் தமிழகத்தில் மிக அதிக அளவாக 107.78 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை சென்னையில் பதிவாகியிருந்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் அதே அளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது. வேலூரில் நேற்று 110.66 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது. கடும் வெப்பத்தை சமாளிக்க முடியாத பொதுமக்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

சென்னை வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முன்னாள் பேராசிரியர் எஸ்.ஜனகராஜன் கூறும்போது, “கோடை தொடக்கத் திலேயே வெப்பம் அதிகமாக இருப்பதற்கு பருவநிலை மாற்றம்தான் காரணம் என்று பலர் கூறி வருகின்றனர். அது மட்டுமே காரணமில்லை. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு போலவேதான் இப்போதும் வெப்பம் இருக்கிறது. அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. சூரிய வெப்பத்தை தணிக்கும் தன்மை கொண்ட நீர்நிலைகள், பசுமை போர்வைகள் அப்போது இருந்த அளவுக்கு இப்போது இல்லை. மேலும் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது சென்னையில் கான்கிரீட் கட்டுமானங்கள் அதிகரித் துவிட்டன. இந்த கான்கிரீட்கள், சூரியனிடமிருந்து வரும் வெப்பத்தை உள்வாங்கிக் கொண்டு, உமிழும் தன்மை கொண்டவை. இது மட்டுமல்லாது, கட்டிடங்கள் மற்றும் வாகனங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் குளிர்சாதனங்களால் உமிழப்படும் வெப்பம், இவை எல்லாம்தான் சூரிய வெப்பத்துடன் சேர்ந்து உயர் வெப்பநிலையை உருவாக்குகிறது. இது மேலும் அதிகரிக்கும்” என்றார்.

இது தொடர்பாக சுற்றுச்சூழல் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் கேர் எர்த் அறக்கட்டளை தலைவி ஜெய வெங்கடேசன் கூறும்போது, “கடந்த 20 ஆண்டுகளாகவே தமிழகத்தில் தட்பவெப்பநிலை மாற்றத்துக்கு உள்ளாகி வந்திருக்கிறது. அதற்கு பருவநிலை மாற்றம்தான் காரணம் என யாராலும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. கடலோர மாநகரமான சென்னையில் நல்லது, கெட்டது எது நடந்தாலும் அதற்கு கடல் பகுதியில் ஏற்படும் மாற்றம்தான் காரணம். கடலில் ஏற்படும் வெப்பம் நேரடியாக கடலோர நிலப் பகுதிகளை பாதிக்கிறது.

அதனாலேயே நிலப் பகுதியில் தற்போது வெப்பம் அதிகரித்துள்ளது. கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் இயற்கை அரணாக மேற்கு தொடர்ச்சி மலை இருப்பதால், அரபிக் கடல் பகுதியில் ஏற்படும் வெப்பமானது அம்மாநிலங்களின் உள் பகுதிகளை தாக்கா வண்ணம், அம்மலைத் தொடர் தடுத்துவிடுகிறது. அதனாலேயே அம்மாநிலங்களில் உள் பகுதியில் குளிர்ச்சி நிலவுகிறது. தமிழகத்தில் அதுபோன்ற இயற்கை அரண்கள் இல்லாததால் வெப்பம் அதிகமாக உள்ளது.

மேலும் முன்பெல்லாம் ஆடி மாதம் முதல் கார்த்திகை மாதம் வரை தொடர்ந்து மழை பெய்யும். நிலப் பகுதியில் குளிர்ச்சியான சூழல் இருக்கும். இப்போது குறுகிய நாட்களில் மிக அதிக மழை பெய்துவிடுகிறது. அவை நிலத்தில் ஊறாமல் கடலுக்குச் சென்றுவிடுகிறது. தமிழகத்தில் மழைக்காலம் குறுகி கோடைகாலம் அதிகரித்துவிட்டது. வெப்பநிலை உயர்வுக்கு அதுவும் ஒரு காரணம்” என்றார்.

அண்ணா பல்கலைக்கழக பருவநிலை மாற்றம் மற்றும் தகவமைப்பு ஆராய்ச்சி மைய இயக்குநர் க.பழனிவேலு கூறும்போது, “தமிழகத்தில் நகரமயமாதலால் பசுமை போர்வை குறைந்துவிட்டது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை மாசுவின் அளவு அதிகரித்துவிட்டது. இதனால் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு காற்றில் இருந்த கார்பன் டை ஆக்சைடின் அளவு, மேலும் 50 சதவீதம் உயர்ந்துள்ளது. அதனால் சூரிய ஒளிக் கதிர்கள், உயர் வெப்ப ஆற்றலாக மாற்றப்பட்டு பூமிக்கு அனுப்பப்படுகிறது. அதனாலேயே தமிழகத்தில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. எங்கள் ஆய்வின்படி, சென்னையில் தற்போது 105.8 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ள வெப்பநிலை, இனி வரும் ஆண்டுகளிலோ அல்லது இந்த ஆண்டு மே மாதத்திலோ 113 டிகிரி ஃபாரன்ஹீட்டை எட்டும் என எதிர்பார்க்கிறோம். மேலும் இரவு நேர வெப்பநிலையும் உயரும். வெப்பநிலை உயர்வு தடுக்கப்பட வேண்டுமென்றால், மரங்களை வளர்ப்பது மட்டும்தான் தீர்வாக இருக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x