Published : 25 Apr 2017 04:55 PM
Last Updated : 25 Apr 2017 04:55 PM

கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு: இறந்தவர், காயமுற்றவர் செல்போன்கள் தேடும் பணி தீவிரம்

கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில், இறந்துபோன நபர் மற்றும் காயமுற்றவர் ஆகிய இருவரது செல்போன்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

செல்போன்கள் கிடைத்தால் கொலையாளிகளை கண்டறியப்படுவார்கள் என போலீஸார் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் திங்கள்கிழமை அதிகாலை காவலாளி ஓம் பகதூர்(50) கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர்(37) கையில் காயத்துடன் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கொலையாளிகளை பிடிக்க 5 டிஎஸ்பிக்கள் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடக்கி விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், காவலாளி கொலை தொடர்பாக கோத்தகிரி காவல்நிலையத்தில் கூட்டுக்கொலை, அத்துமீறி நுழைதல், கொலை செய்தல் மற்றும் சட்டப்பிரிவு 496 ஆகியனவற்றின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்த வருகின்றனர்.

செல்போன்கள் தேடும் பணி:

பல்வேறு கோணங்களில் நடந்து வரும் விசாரணையில், காயமுற்ற கிருஷ்ண பகதூரை தங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். அவரை கோத்தகிரி காவல்நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

கிருஷ்ண பகதூரை கோடநாடு எஸ்டேட்டுக்கு அழைத்துச் சென்று, கொலையின் போது நடந்த சம்பவங்களை கேட்டறிந்தனர்.

இந்நிலையில், கொலையான ஓம் பகதூர் மற்றும் காயங்களுடன் தப்பிய கிருஷ்ண பகதூரின் செல்போன்கள் மாயமாகியுள்ளன. இது போலீஸாரின் சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.

இதனால், தற்போது செல்போன்களை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

டிஎஸ்பிக்கள் திருமேனி மற்றும் முத்தமிழ் தலைமையில் போலீஸார் எஸ்டேட்டில் செல்போன்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

8-ம் எண் நுழைவு வாயில் அருகே செல்போன் சமிஞ்சைகள் கிடைப்பதால், அப்பகுதியில் செல்போன்களை கொலையாளிகள் வீசியோ, புதைத்தோ சென்றிருக்கலாம் என போலீஸார் கூறினர்..

மேலும், சைபர் கிரைம் போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்த செல்போன்கள் கிடைத்தால், கொலையாளிகள் கண்டறியப்படுவார்கள் என போலீஸார் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

கோடநாடு எஸ்டேட்டில் கொலை நடந்துள்ளதால், இந்த வழக்கின் விசாரணை படுரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணை குறித்து போலீஸார் விரிவான தகவல்கள் தர மறுக்கின்றனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளிரம்பாவும், விசாரணை நடந்து வருகிறது என்று மட்டுமே கூறுகிறார். .

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x