Published : 22 Aug 2014 08:00 AM
Last Updated : 22 Aug 2014 08:00 AM

கோ-ஆப்டெக்ஸில் விரைவில் ‘இ-ஷாப்பிங்’ திட்டம்: அமைச்சர் கோகுல இந்திரா அறிவிப்பு

கோ-ஆப்டெக்ஸ் ஆடை களை ஆன்-லைன் மூலம் விற்பனை செய்யும் திட்டம் விரைவில் தொடங் கப்படும் என கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் கோகுல இந்திரா கூறினார்.

சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி பிரதான சாலை யில் கோ-ஆப்டெக்ஸ் புதிய விற்பனை நிலையம் அமைக்கப் பட்டுள்ளது. இதன் திறப்பு விழா மற்றும் தங்க மழைத் திட்ட பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடந்தது.

விற்பனை நிலையத்தை அமைச்சர் கோகுல இந்திரா திறந்து வைத்தார். முதல் விற்பனையை மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார்.

பின்னர், நிருபர்களிடம் அமைச்சர் கோகுல இந்திரா கூறியதாவது:

இந்தியாவில் உள்ள கைத்தறி நிறுவனங்களில் முதன்மை யானதாக திகழும் கோ-ஆப்டெக்ஸ், தனது 197-வது விற்பனை மையத்தை தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு வேட்டி தினம், கனவு-நனவு திட்டம், தங்க மழைத் திட்டம் ஆகியவற்றின் மூலம் ரூ.301.44 கோடிக்கு விற்பனை ஆனது. நடப்பு ஆண்டில் கோ-ஆப்டெக்ஸின் விற்பனையை அதிகரிப்பதற்காக ரூ.500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் பல்வேறு புதிய சேலைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. குறிப்பாக பரம்பரா பட்டு, கோலம் பட்டு, வரலாற்று பட்டு, மென் பட்டு, பட்டு பூச்சிகளை அழிக்காத வகையில் தயாரிக்கப்பட்ட அகிம்சா பட்டு, பருத்தி சேலைகள் உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கோ-ஆப்டெக்ஸில் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள துணி வாங்கியவர்களுக்கு தங்க மழைத் திட்டத்தின் கீழ் கூப்பன் வழங்கப்பட்டது. இதில், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சிறப்பாக பதிலளித்த நாடு முழுவதும் உள்ள 11 மண்ட லங்களில் 110 வாடிக்கை யாளர்களுக்கு 8 கிராம் தங்க காசும், 110 வாடிக்கை யாளர்களுக்கு 2 கிராம் தங்கக் காசு என மொத்தம் 220 பேருக்கு 1,100 கிராம் தங்கம் வழங்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ‘இ-ஷாப்பிங்’ முறையில் விற்பனை திட்டத்தை கோ-ஆப்டெக்ஸ் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன்மூலம், வாடிக்கையாளர்கள் ஆன்-லைனில் கோ-ஆப்டெக்ஸ் ஜவுளிகளை வாங்கலாம். மேலும் தங்களுக்கு தேவையான புடவை டிசைன்களை அனுப்பி ஆர்டர் கொடுத்தால், அதே டிசைன்களில் புடவைகளை தயாரித்து அளிக்க உள்ளோம்.

இவ்வாறு அமைச்சர் கோகுல இந்திரா கூறினார்.

இந்நிகழ்ச்சியில், மத்திய சென்னை எம்.பி. விஜயகுமார், அரசு கைத்தறி, துணி நூல் மற்றும் கதர்த் துறை முதன்மைச் செயலர் ஹர்மந்தர் சிங், கைத்தறி மற்றும் துணி நூல் துறை இயக்குநர் பிரகாஷ், கோ-ஆப்டெக்ஸ் தலைவர் மனோகரன், துணைத் தலைவர் ஜெயந்தி, மேலாண்மை இயக்குநர் சகாயம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x