Published : 31 Mar 2015 07:41 AM
Last Updated : 31 Mar 2015 07:41 AM

‘கொம்பன்’ திரைப்படத்தில் ஆட்சேபகரமான வசனங்கள்? - 10 பேர் குழு படத்தை பார்த்து அறிக்கை அளிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

‘கொம்பன்’ திரைப்படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் உட்பட 10 பேர் கொண்ட குழுவினர் சென்னையில் அந்தப் படத்தை பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘கொம்பன்’ திரைப்படம் ஏப். 2-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் ஒரு சம்பவத்தை வைத்து இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் கதாநாயகன் ஒரு சமூகத்தை சேர்ந்தவராகவும், வில்லன் மற்றொரு சமூகத்தை சேர்ந்தவராகவும் காட்டப்பட்டுள் ளது. வேறு இரு சமூகங்களுக்கு எதிரான வசனங்கள், காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்தப் படம் வெளியானால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக தென் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்.

‘கொம்பன்’ படத்துக்கு இதுவரை மண்டல தணிக்கை குழு தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை. படத்தை மத்திய தணிக்கை குழுவுக்கு மண்டல தணிக்கை குழு அனுப்பியுள்ளது. மத்திய குழுவானது தணிக்கை வாரியத்தின் சீராய்வு குழுவுக்கு படத்தை அனுப்பியது. கொம்பன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கூடாது, படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபகரமான காட்சிகள், வசனங்களை நீக்க உத்தரவிட வேண்டும். அதுவரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் பீட்டர் ரமேஷ்குமார், பாஸ்கர் மதுரம் ஆகியோர் வாதிடும்போது, இப்படத்துக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றார்.

கொம்பன் திரைப்பட தயாரிப்பாளர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விடுதலை வாதிடும்போது, ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவரிடம் நிலவும் மோதல் குறித்த படம்தான் கொம்பன். மனுதாரர்கள் கூறுவது போன்ற ஆட்சேபகரமான வசனங்கள், காட்சிகள் எதுவும் கொம்பன் படத்தின் இல்லை என்றார். மத்திய அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜி.ஆர்.சுவாமிநாதன் இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றார்.

இதையடுத்து, உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதிகள் இருவர், மனுதாரர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி, அவர் தரப்பு வழக்கறிஞர்கள் 3 பேர், தயாரிப்பாளர், அவரது தரப்பு வழக்கறிஞர்கள் 3 பேர் ஆகியோர் சென்னையில் இன்று கொம்பன் படத்தை பார்க்க வேண்டும். பின்னர், பேக்ஸில் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். இன்று மாலை தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x