Last Updated : 31 Jan, 2015 08:55 AM

 

Published : 31 Jan 2015 08:55 AM
Last Updated : 31 Jan 2015 08:55 AM

கையில் திமுக கொடி; மீண்டும் கரை வேட்டி: கட்சியில் அழகிரி இணையப்போவதற்கு அச்சாரமான பிறந்தநாள் விழா

திமுகவில் மீண்டும் இணையப் போவதை மறைமுகமாக தெரிவிக்கும் வகையில் மு.க.அழகிரியின் பிறந்த நாள் விழா நேற்று மதுரையில் நடத்தப்பட்டது.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கடந்த 2001-ல் கட்சியில் இருந்து முதன் முதலில் தற்காலிகமாக நீக்கப்பட்டதிலிருந்தே மதுரையில் அவரது பிறந்தநாள் விழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இரண்டாவது முறையாக கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டு ஓராண்டு நெருங்கும் நிலையில், மீண்டும் அதேபோன்ற சூழலில் அவரது 64-வது பிறந்த நாள் விழா மதுரையில் கொண் டாடப்பட்டது.

தற்காலிக நீக்கத்தின்போது நடந்த விழாவில், தமிழகம் முழுவதும் இருந்து அந்தந்த மாவட்ட செயலாளர்களுக்கு எதிரானவர்கள் அழகிரிக்கு ஆதரவு தருவதாக திரண்டதால் கூட்டம் அலை மோதியது. இந்த ஆண்டு அவ்வாறு யாரும் வரவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உட்கட்சி தேர்தல் அதிருப்தியாளர்களில் கூட, சொல்லிக்கொள்ளும்படியாக வரவில்லை.

கடந்த ஆண்டு வாழ்த்த வந்த முன்னாள் எம்.பி.க்கள் நெப்போலியன், ஜே.கே.ரித்தீஷ் வேறு கட்சிகளுக்கு தாவிவிட்டனர். கட்சி பொறுப்பில் இருந் தாலும்கூட, கடந்த ஆண்டு சிலர் துணிந்து விழாவில் பங்கேற்றார்கள். இந்த ஆண்டு விவசாய அணி நிர்வாகி கே.பி. ராம லிங்கம் மட்டுமே வந்திருந்தார்.

மீண்டும் திமுகவில்..?

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கோபத்தில் திமுக கரைவேட்டி கட்டு வதையே தவிர்த்து வந்த அழகிரி, நேற்று கரைவேட்டி கட்டியிருந்தார். கேக் வெட்டும்போதும்கூட கருப்பு, சிவப்பு நிற மாலையுடனே மனைவியுடன் காட்சியளித்தார். வீட்டில் இருந்து ராஜாமுத்தையா மன்றத்துக்கு ஊர்வல மாக வந்தபோதும், தொண்டர்களும் குதிரை வீரர்களும் கருப்பு சிவப்புக் கொடியுடன் வந்தனர். பின்னர் திமுக கொடியை வாங்கிய அழகிரி அதை உற்சாகமாக அசைத்தார். தயாநிதி அழகிரியும் அதேபோல கொடியை அசைத்தார்.

பரபரப்பாக ஏதாவது சொல்வார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் எதையும் சொல்லவில்லை. ‘மீண்டும் திமுகவில் அழகிரியைச் சேர்ப்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நேரத்தில் எதையாவது பேசி, அதைக் கெடுத்துவிட வேண்டாம்’ என்று தலைமைக் கழகத்தில் உள்ள அவரது அனுதாபிகளும், குடும்பத்தினரும் கேட்டுக் கொண்டதாலேயே அழகிரி எதுவும் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. கே.பி. ராமலிங்கத்துக்கு கட்சிப் பதவி வழங்கி இருப்பதுகூட அழகிரியை திருப்திப்படுத்தவே என்றும் கூறப்படுகிறது.

இதுபற்றி அவரது நெருங்கிய ஆதர வாளரான மன்னனிடம் கேட்டபோது, “கட்சிக் கொடி, கரை வேட்டியுடன் உற்சாக மாக வந்த அண்ணனிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை நாங்களும் கவனித்தோம். சீக்கிரமே நல்லது நடக்கும்” என்றார்.

தொலைப்பேசியில் வாழ்த்திய ரஜினி!

இந்த ஆண்டு டெல்லியில் இருந்து யாரும் வாழ்த்தவில்லை என்பதால், வாழ்த்தியவர்கள் விவரம் வெளியிடப் படவில்லை. கருணாநிதி, ஸ்டாலின் தவிர அவரது குடும்பத்தினரும், நடிகர் ரஜினியும் போனில் வாழ்த்து தெரி வித்தனர். வழக்கத்துக்கு மாறாக, இந்த ஆண்டு அவரது வீடு பூ மாலை களாலும், தோரணங்களாலும் அலங்கரிக் கப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x