Published : 02 Oct 2015 02:08 PM
Last Updated : 02 Oct 2015 02:08 PM

கைது செய்ய போலீஸ் முன்வராததைக் கண்டித்து திருடியபோது சிக்கிய இளைஞருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த மக்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் குறிஞ்சி நகரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் பகுதி - 16 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. நேற்று இப்பகுதியில் கட்டுமானப் பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகள், வயர்களை ஒரு இளைஞர் திருடிக் கொண்டிருந்தார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அந்த இளைஞரைப் பிடித்து மரத்தில் கட்டி வைத்து தாக்கினர்.

தகவலறிந்து வந்த ஓசூர் நகர போலீஸார், பிடிபட்டவர் காயங்களுடன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். “அந்த இளைஞரை, ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து விடுங்கள். நாங்கள் கைது செய்து கொள்கிறோம்” என போலீஸார் தெரிவித்தனர்.

இதைக்கேட்ட பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். காவல்துறையை கண்டிக்கும் வகையில் அந்த இளைஞருக்கு மாலை அணிவித்து, பழங்கள் கொடுத்து மரியாதைவுடன் ஊர்வலமாக அழைத்துச் சென்று காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அவரை போலீஸார் அரசு மருத்துமனையில் அனுமதித்தனர்.

சிகிச்சைக்கு பின் அவரிடம் போலீஸார் விசாரித்தனர். இதில் அவர், உத்தனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (26) என்பதும், இவர் ஏற் கெனவே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, அதே பகுதியில் 4 செல்போன்களை திருடியபோது பொதுமக்கள் கையும், களவுமாக பிடித்து போலீஸில் ஒப்படைத் ததும் தெரிய வந்தது. சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சீனிவாசன், நேற்று முன்தினம் வெளியே வந்துள்ளார். பின்னர், மீண்டும் அதே பகுதியில் திருடச் சென்ற போது பொதுமக்களிடம் சிக்கியது தெரியவந்தது. இதையடுத்து சீனிவாசனை போலீஸார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது:

குறிஞ்சி நகரில் அடிக்கடி திருட்டுச் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனைத் தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை. ஏற்கெனவே அவர் இப்பகுதியில் திருடிய போது, நாங்கள் தான் பிடித்து கொடுத்தோம். தற்போதும் திருட வந்தவரை பிடித்து வைத்தால், போலீஸார் கைது செய்யாமல் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என அலட்சியமாக பதிலளித்தனர். மருத்துவமனைக்கு கொண்டு சென்றால், போலீஸார் கூறாமல் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, காவல்துறையினரின் அலட்சிய போக்கை கண்டிக்கும் வகையில் பிடிபட்ட திருடனுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தோம், என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x