Last Updated : 28 Aug, 2015 08:44 AM

 

Published : 28 Aug 2015 08:44 AM
Last Updated : 28 Aug 2015 08:44 AM

கோவையில் விற்கப்படும் ரசாயன அமிலம் கலந்த பால்: அதிர்ச்சி தகவல் தெரிவித்த ‘உங்கள் குரல்’ வாசகர்

‘தி இந்து’ ‘உங்கள் குரல்’ மூலம் வாசகர் ஒருவர் தொடர்புகொண் டார். தனது பெயரை வெளியிட வேண்டாம் என்ற வேண்டு கோளுடன் அவர் கூறியதாவது:

பீளமேடு, விளாங்குறிச்சி சாலை பிளேக் மாரியம்மன் கோயில் பின்புறத்தில் தினமும் டெம்போ வேனில் கேன்களில் பால் கொண்டு வரப்படுகிறது. அங்கு வரும் பால் வியாபாரிகள் அந்தப் பாலை வாங்கிச் செல்கின்றனர்.

அந்தப் பால், பால் பண்ணை நிறுவனங்களால் பால் பொருட்கள் தயாரிப்பதற்காக புரதச்சத்து உட்பட அனைத்து சத்துகளும் உறிஞ்சப்பட்ட, பயன்படுத்த முடி யாத கழிவாக கீழே கொட்ட வேண்டிய பால் ஆகும். இதனை சக்கைப் பால் என்பார்கள். இதை, பால் வியாபாரிகளுக்கு லிட்டர் ரூ.10-க்கு விற்பனை செய்கின்றனர். இந்த சக்கைப் பாலை வாங்கிச் செல்பவர்கள், அதனை வீட்டுக்கு எடுத்துச் சென்று சூடாக்கி, பெரிய டப்பாக்களில் அடைத்து தண்ணீரில் போட்டுவிடுவார்கள். அதற்குப் பிறகு 200 லிட்டர் சக்கைப் பாலில் வெறும் 50 லிட்டர் நல்ல பால், ஜிலேபி பவுடர், நுரை வருவதற்குத் தேவையான ஒரு வகை ரசாயன அமிலத்தை கலக்கி ரூ.40-க்கு நல்ல பால் போல் விற்பனை செய்கின்றனர்.

இந்த சக்கைப் பால் விற்பனை கோவையில் பல இடங்களில் படுஜோராக நடக்கிறது. அந்த வாசகர் குறிப்பிட்ட இடத்தில் நின்று கண்காணித்தபோது அவர் சொன் னது உண்மை எனத் தெரியவந்தது. இதையடுத்து டெம்போ டிரை வரிடம் பேசியபோது, வாகராயன் பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பால் பொருட்கள் தயாரித்ததுபோக மீதமுள்ள சக்கைப் பாலை லிட்டருக்கு ரூ.10 விலை வைத்து மொத்த விலையில் விற்பனை செய்வ தாகத் தெரிவித்தார். குறிப்பிட்ட இந்த இடத்தில் மட்டும் காலை, மாலை தினமும் 800 லிட்டர் வரை விற்பதாக குறிப்பிட்டார்.

இதுகுறித்து கோவை மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு அலுவலர் கதிரவனி டம் கேட்டபோது, ‘சாதாரணமாக 3.5 சதவீதம் அளவுக்கு பாலில் கொழுப்பு இருக்க வேண்டும். தற்போது கொழுப்பு குறைக்கப் பட்ட பாலாக, 1.5 சதவீதம் முதல் 2.5 சதவீதம் அளவுக்கு முழுவதுமாக கொழுப்பு நீக்கப்பட்டு கால்சியம் சத்து மட்டும் இருக்கும் பால் என விற்பனைக்கு கொண்டு வரப் படுகிறது.

இதனால் சாதாரண பாலை விட இதன் விலை கூடுதலாக இருக்கும். ஆனால் நீங்கள் சொல்லும் பாலில் தவறு நடக்கிறது என்பது தெளிவாகிறது. அதுகுறித்த விவரங்களைக் கொடுங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம். பொதுமக்கள் பாக்கெட் பாலையே பயன்படுத்த வேண்டும். கேன்களில் கொண்டு வந்து விற்கும் பாலில் கலப்படமும், காலாவதியான பாலும் இருப்பதற்கு வாய்ப்புகள் மிக அதிகம்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x