Published : 21 Aug 2014 12:28 PM
Last Updated : 21 Aug 2014 12:28 PM

கேரள வழியில் மதுவிலக்கு: தமிழக அரசுக்கு ராமதாஸ் யோசனை

மது விற்பனை மூலம் வருவாய் ஈட்டுவதை மட்டுமே நோக்கமாக கொள்ளாமல், மக்கள் நலனையும் கருத்தில் கொண்டு கேரளம் வழியில் தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒட்டுமொத்த இந்தியாவிலும் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படாத சூழலில் தமிழ்நாட்டில் மட்டும் மதுவிலக்கை செயல்படுத்த முடியாது என்று தமிழக ஆட்சியாளர்கள் கூறி வருகின்றனர். ஆனால், அண்டை மாநிலமான கேரளம் முழு மதுவிலக்கை நோக்கி விரைவான பயணத்தைத் தொடங்கியுள்ளது.

கேரள மாநிலத்தில் 383 மதுக்கடைகளும், 752 குடிப்பகங்களும் செயல்பட்டு வந்தன. அவற்றில் 418 குடிப்பகங்களை கேரள அரசு அதிரடியாக மூடியது. அதன்பின்னர் மேலும் 18 குடிப்பகங்களும், 45 மதுக்கடைகளும் படிப்படியாக மூடப்பட்டன. இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என்றும், வெகுவிரைவில் முழு மதுவிலக்கை ஏற்படுத்துவது தான் உம்மன்சாண்டி தலைமையிலான கேரள அரசின் நோக்கம் என்றும் கேரள மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் வி.எம்.சுதீரன் தெரிவித்துள்ளார். 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக கேரளத்தில் முழு மதுவிலக்கு ஏற்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. மக்களைக் காப்பதற்கான கேரள அரசின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது.

கேரளத்தில் மதுக்கடைகளும், குடிப்பகங்களும் மூடப்பட்டதற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 418 குடிப்பகங்கள் மூடப்பட்ட பிறகு குற்றச் செயல்கள் 15 விழுக்காடும், சாலை விபத்துக்கள் 10 விழுக்காடும் குறைந்திருப்பதாக கேரள குற்ற ஆவணக் காப்பகம் கூறியுள்ளது. அதுமட்டுமின்றி, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், குடும்ப வன்முறைகள் ஆகியவையும் குறைந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில் மதுவுக்கு எதிராக கேரள அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் அம்மாநிலத்தில் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான சமுதாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால், தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை ஏற்படுத்த தமிழக அரசு மறுத்துவருகிறது. மேலும் எலைட் மதுக்கடைகள், பீர் மட்டும் விற்கும் மதுக்கடைகள் என புதுப்புது பெயர்களில் புதிய மதுக்கடைகளை திறந்து வருகிறது.

இதன் விளைவாக தற்கொலைகள் மற்றும் சாலைவிபத்துக்களில் முதலிடம், பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு, தெருக்களில் பெண்கள் நடமாட முடியாத நிலை என அவலங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. இதேநிலை தொடர்ந்தால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம், ஒழுங்கு சீரழிவு போன்றவற்றில் பீகார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை விட மோசமான நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டு விடும்.

மக்கள் நலனைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், மது விற்பனை மூலம் லாபம் ஈட்டுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுவது தான் தமிழகத்தின் சமூக அவலங்களுக்கெல்லாம் காரணமாகும்.

மது விற்பனை மூலம் ஒவ்வொரு ஆண்டும் ரூ.22,000 கோடி வருவாய் கிடைப்பதை பெரிய சாதனையாக தமிழக அரசு கருதுகிறது.

ஆனால், தமிழ்நாட்டில் மதுப்பழக்கத்தால் ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழக்கிறார்கள். குடிப்பழத்தால் ஏற்படும் சமூக, மருத்துவக் கேடுகளை சரிசெய்ய ரூ.40 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக செலவாகிறது என்று சுகாதார ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதையெல்லாம் தமிழக அரசு உணர மறுப்பது ஏன்? என்பதைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை.

மது விற்பனை குறித்த தமிழக அரசின் அணுகுமுறை உயர்நீதிமன்றத்தில் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை அனைத்து தளங்களிலும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

எனவே, இனியும் மது விற்பனை மூலம் வருவாய் ஈட்டுவதை மட்டுமே நோக்கமாக கொள்ளாமல், மக்கள் நலனையும் கருத்தில் கொண்டு கேரளம் காட்டும் வழியில் படிப்படியாகவோ அல்லது ஒரே கட்டத்திலோ தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்" இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x