Last Updated : 18 Feb, 2017 08:19 AM

 

Published : 18 Feb 2017 08:19 AM
Last Updated : 18 Feb 2017 08:19 AM

கொறடா உத்தரவை மீறினால் என்ன நடக்கும்? - சட்ட நிபுணர்கள் விளக்கம்

சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் தன் உத்தரவை மீறினால், தகுதி நீக்கம் செய்ய பேரவைத் தலைவருக்கு பரிந்துரைக்கும் அதிகாரம் கட்சிக் கொறடாவுக்கு உள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை எம்எல்ஏக்களுடன் ஆட்சியமைக் கும் கட்சியில் இருந்து, ஒரு எம்எல்ஏ தேர்வு செய்யப்பட்டு, அவர் அரசு கொறடாவாக அறிவிக்கப்படுவார். அதேபோல், எதிர்க்கட்சிகளின் சார்பிலும், ஒவ்வொரு கட்சியிலும் ஒரு கொறடா தேர்வு செய்யப்படுவார். கொறடா என்பவர், கட்சிக்கும், ஆட்சிக்கும் இடையில் பாலமாக செயல்படுவார். அரசு தீர்மானத்தின் மீது பேசுவதற்கும், மானிய கோரிக்கை மீது பேசுவதற்கும் எம்எல்ஏக்களை அனுமதிப்பது, அதை பேரவைத் தலைவருக்கு தெரிவிப்பது கொறடாவின் பணியாகும். கொறடாவின் உத்தரவை மீறி எம்எல்ஏக்கள் செயல்படும் பட்சத்தில், அவர்களை தகுதி நீக்கம் செய்வதற்கு பேரவைத் தலைவருக்கு கொறடா பரிந்துரைக்கும் அதிகாரம் உள்ளது. அரசு கொறடா என்பவர், மாநில அமைச்சருக்கு இணையான அந்தஸ்து பெற்றவர். அவருக்கு அமைச்சருக்கு உண்டான வாகனம், தனி அறை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும்.

சட்ட நிபுணர்கள் விளக்கம்

கொறடா பிறப்பிக்கும் உத்தரவுப்படி சட்டப்பேரவைக்கு வராவிட்டாலோ, சட்டப்பேரவைக்கு வந்து கொறடாவின் உத்தரவுக்கு எதிராக வாக்களித்தாலோ அந்த உறுப்பினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என சட்ட நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர்.

முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.வில்சன்:

சட்டப்பேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கொறடாவின் உத்தரவை மீறி சட்டப்பேரவைக்கு எம்எல்ஏக்கள் வராமல் இருந்தால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பத்தாவது அட்டவணை பிரிவு 2-ன் படி வராமல் இருக்க அந்த கட்சியிடம் முன்னரே அனுமதி வாங்கியிருக்க வேண்டும். மேலும், வாக்கெடுப்பின்போது வராமல் இருப்பவர்களை அன்றையே தினமே தகுதி நீக்கம் செய்ய முடியாது. வாக்கெடுப்பு நடைபெற்ற தேதியிலிருந்து 15 நாட்களுக்குள், வராமல் இருந்ததற்கான காரணத்தை உறுப்பினர்கள் தெரிவித்தால் கட்சி அந்த காரணத்தை ஏற்று மன்னிக்கலாம் அல்லது தகுதி நீக்கம் செய்யலாம்.

சட்டப்பேரவையை பொறுத்த மட்டில், கட்சி கொறடா உத்தரவு தான் அதிகாரப்பூர்வ உத்தரவு. கொறடாவுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் உத்தரவிடுவார். அதிமுக-வில் தற்போது சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதே கேள்விக் குறியாக உள்ளதால், அவர் பிறப் பிக்கும் உத்தரவு எந்த அளவுக்கு செல்லும் என்பது நீதிமன்றத்தில் தான் முடிவாகும். மேலும், கட்சி யில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் எதிராக வாக்களித் தால் அவர்கள் மீது தகுதியிழப்பு நடவடிக்கை எடுக்க முடியாது. ஒருவேளை, சட்டப்பேரவைக்கு வந்து கொறடா உத்தரவை மீறி உறுப்பினர்கள் வாக்களித்தால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார். இவ்வாறு உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யும் விஷயத்தில் பேரவைத் தலைவரின் முடிவே இறுதியானதாக இருக்கும்.

தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன்:

என்னுடைய கணிப்பின்படி நாளை (இன்று) அனைத்து உறுப் பினர்களும் சட்டப்பேரவைக்கு வந்துவிடு வார்கள். ஒருவேளை வராமல் இருந்தால் சபாநாயகர் விளக்கம் கேட்டு உறுப்பினர் களுக்கு நோட்டீஸ் அனுப்பலாம். அதற்கு உரிய காரணத்தை உறுப்பினர்கள் தெரிவிக்க வேண்டும். மருத்துவ ரீதியிலான காரணம் எனில் மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள் ளாததும் சபாநாயகரின் அதிகாரத்துக்கு உட்பட்டது.

கொறடாவின் உத்தரவுக்கு எதிராக வாக்களித்தால் கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி அவரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்வார். அதையும் உடனடியாக செய்ய இயலாது. முறையாக நோட்டீஸ் அனுப்பிய பிறகே அந்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x