Published : 02 Sep 2014 03:40 PM
Last Updated : 02 Sep 2014 03:40 PM

குளத்தில் பிடிக்கப்பட்ட பச்சைக் கிளிகள் மீட்பு

கோவையில் குளத்தில் இருந்து பறவை கடத்தல்காரரால் வலைவீசி பிடிக்கப்பட்ட ரோஸ்ரிங் வகை பச்சைக் கிளிகளை பறவை மீட்பு அமைப்பினர் திங்கள்கிழமை மீட்டனர்.

கோவை மாவட்டம், வீரகேரளம் அருகே வரதராஜபுரம் குளத்தில் பச்சைக் கிளிகள் வலைவீசி பிடிக்கப்படுவதாகப் பறவை மற்றும் விலங்குகள் மீட்பு அமைப்பினருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த அமைப்பின் உறுப்பினர்களும், பறவைகள் பாதுகாவலர்களுமான கண்ணன், ஜோசப், வின்னிபீட்டர் ஆகியோர் நேரில் சென்றனர்.

அப்போது, குளத்தில் இருந்து பிடிக்கப்பட்ட ரோஸ்ரிங் பச்சைக் கிளிகளை இரு பைகளில் வைத்து எடுத்து வந்தவரைப் பிடித்தனர். அந்த நபர் ஒரு பையை விட்டுவிட்டு, மற்றொரு பையுடன் தப்பினார். அந்த பையில் இருந்த 24 ரோஸ்ரிங் பச்சைக்கிளிகளை அவர்கள் பாதுகாப்பாக மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து அந்த அமைப்பின் நிர்வாகி வின்னி பீட்டர் கூறியதாவது:

மீட்கப்பட்ட பச்சைக் கிளிகளின் இறக்கை, அலகுகள் உடைக்கப்பட்டுள்ளன. அக்கிளிகளை சிகிச்சை அளித்து பராமரிக்க வேண்டியுள்ளது. இதனால், வனத்துறை அலுவலகத்தில் வைத்து நாங்களே பராமரிக்க உள்ளோம்.

பறவைகளைப் பிடித்த நபர் வைத்திருந்த மற்றொரு பையில் இதே எண்ணிக்கையில் பச்சைக் கிளிகள் இருந்தன. அவற்றையும் மீட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளோம்.

தப்பியோடியவர் இதற்கு முன்னதாக எங்களிடம் இருமுறை பிடிபட்டுள்ளார்.

வனத் துறையால் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பறவைகளை தொடர்ந்து பிடித்து கடத்தி வரும் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திள்ளோம். பறவை கடத்தல்காரர்களால் அழிந்து வரும் பச்சைக் கிளி வகைகளைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x