Last Updated : 09 Feb, 2016 08:47 AM

 

Published : 09 Feb 2016 08:47 AM
Last Updated : 09 Feb 2016 08:47 AM

கும்பகோணம் காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் 83 ஆண்டுகளுக்கு பிறகு 10 நாட்கள் உற்சவம்

கும்பகோணத்தில் 83 ஆண்டுக ளுக்கு பிறகு இந்தாண்டு காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் மகாமகத்தை முன்னிட்டு 10 நாள் உற்சவம் நடைபெறவுள்ளது.

திருப்பதிக்கு அருகே உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயில் போன்று, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காஞ்சி சங்கர மடத்துக்கு அருகில் அமைந்துள்ள இத்தலம் ராகு- கேது பரிகாரத் தலமாக விளங்குகிறது. இங்கு ஞானாம்பிகை சமேதராக காளஹஸ்தீ்ஸ்வரர் அருள்பாலித்து வருகிறார்.

மகாமக திருவிழா காணும் சிவன் கோயில்களில் ஒன்றான இக்கோயிலில் தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் காலத்தில் முழுமையாக திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.

இக்கோயிலில் இதற்குமுன் 1933-ல் மகாமகத் திருவிழாவின் போது 10 நாள் உற்சவம் நடைபெற்று, மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.

1945,1956,1968,1980,1992,2004 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மகாமகத் திருவிழாவின்போது ஏக தின (ஒரு நாள்) உற்சவம் மட்டுமே நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மக திருவிழாவின்போது ஏக தின உற்சவமே நடைபெற்றுள்ளது.

போதிய நிதி, மண்டகபடிதாரக்கள் கிடைக் காததால் 10 நாள் உற்சவம் நடைபெறாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டு கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மகாமகத்தையொட்டி இக்கோயிலில் 10 நாள் உற்சவம் நடத்த கோயில் நிர்வாகமும், உபயதாரர்களும் முடிவு செய்தனர். அதன்படி , 83 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வாண்டு மகாமகத்தையொட்டி 10 நாள் உற்சவம் நடத்தப்பட உள்ளது.

இதையொட்டி சுவாமி வீதியுலா செல்வதற்காக பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் இருந்து சேஷ, பூத, சிம்ம, யானை, அன்னபட்சி, ரிஷிப, காமதேனு மற்றும் மயில் வாகனங்கள் காளஹஸ்தீஸ்வரர் கோயிலுக்கு எடுத்துவரப்பட்டுள்ளன.

மகாமகத்தையொட்டி வரும் 13-ம் தேதி இக்கோயிலில் கொடியேற்றம் நடைபெற உள்ளது. உற்சவத்தின் 10 நாட்களும் காலை மற்றும் மாலை நேரங்களில் உற்சவ மூர்த்திகளின் வீதியுலா நடைபெற உள்ளது. 22-ம் தேதி மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெறவுள்ளது.

83 ஆண்டுகளுக்குப் பிறகு 10 நாள் உற்சவம் நடைபெறவுள்ளதால், அதற்கான பணிகளில் கோயில் நிர்வாகத்தினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வியாழ சோமேஸ்வரர் கோயிலிலும்...

மகாமகம் கொண்டாடப்படும் சிவன் கோயில்களில் ஒன்றான, வியாழ பகவான் வழிபட்டு, தனது இஷ்ட சித்திகளைப் பெற்றதுமான வியாழ சோமேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மகத் திருவிழாவின்போது ஏக தின உற்சவம் மட்டுமே நடைபெற்றுள்ளது. 1945-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தாண்டு மகாமகத்தையொட்டி இக்கோயிலில் 10 நாள் உற்சவம் நடைபெற உள்ளது.

கட்சிகளின் கொடிமரங்கள் அகற்றப்பட்டன...

பக்தர்களுக்கு போக்குவரத் தில் எந்தவித இடையூறும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக சாலையோரம், ரவுண்டானாக்கள், முக்கிய அலுவலகங்கள் உள்ளிட்ட 467 இடங்களில் வைக்கப் பட்டிருந்த அனைத்து அரசியல் கட்சிகளின் கொடிமரங்களில் 174 ஏற்கெனவே அகற்றப் பட்டுவிட்டன. இந்நிலையில் அசூர் பைபாஸ், பாலக்கரை, கும்பேஸ்வரர் கோயில் மேல வீதி, தெற்கு வீதி, 60 அடி சாலை, பெசன்ட் ரோடு, பக்தபுரி ரவுண்டானா ஆகிய இடங்களில் இருந்த 42 கொடிமரங்களை நேற்று கும்பகோணம் வட்டாட் சியர் பிரபாகரன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீஸார் அகற்றினர். மீதமுள் ளவை விரைவில் அகற்றப்பட உள்ளன.

இருசக்கர வாகனங்களுக்கு தடையில்லை...

மகாமகப் பெருவிழாவை யொட்டி கும்பகோணம் நகரில் பாதுகாப்பு பணிகள் போலீஸாரால் பலப்படுத்தப்பட் டுள்ளது. கும்பகோணத்தில் பல்வேறு அலுவல் பணியில் ஈடுபட்டுள்ளவர்களும், பொதுமக்களும் அன்றாடம் பயன்படுத்தும் இரு சக்கர வாகனங்கள் செல்வ தற்கு தடையில்லை என்று போக்குவரத்தை ஒழுங்குப டுத்தும் டிஎஸ்பி.மகேசன் தெரிவித்துள்ளார். எனினும், மக்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும் பகுதிகளிலும், தீர்த்தவாரி நடைபெறவுள்ள 22-ம் தேதியும் இரு சக்கர வாகனங்களைப் பயன் படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அறநிலையத் துறை இணையதளம்...

மகாமகம் தொடர்பான பல்வேறு தகவல்களை பொதுமக்கள் தெரிந்துகொள் வதற்காக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் www.mahamaham2016.in என்ற புதிய இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் மகாமகம் தோன்றிய வரலாறு, மகாமகம் நடைபெறும் கோயில்களின் வரலாறும், மகாமகம் தொடர்புடைய கோயில்களில் நடைபெற்ற கும்பாபிஷேகம் ஆகியவை வீடியோவுடன் இடம் பெற்றுள் ளது. மகாமகக் குளத்துக்கு சுவாமிகள் சென்றடையும் வழி அனிமேஷனில் வழங்கப்பட் டுள்ளது.

இந்த இணைய தளம் தொடங்கப்பட்டதிலிருந்து நேற்று முற்பகல் வரை 25 ஆயிரம் பேர் பார்வையிட் டுள்ளனர் என இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் டி.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்தை ஒழுங்குபடுத்த 2 ஆயிரம் இரும்பு தடுப்புகள் தயார்...

போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி பக்தர்கள் சிரமமின்றி சென்றுவருவதற்காக நகரில் ஆங்காங்கே வைக்க 2 ஆயிரம் இரும்பு தடுப்புகள் (பேரி கார்டு) தயாரிக்கப்பட்டு உள்ளது. இவற்றை தற்காலிக பேருந்து நிலையங்கள் உள்ள சாலைகள், மகாமகக் குளம், பொற்றாமரைக் குளம், காவிரி ஆறு ஆகிய பகுதிகளில் வைக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். மேலும், போக்குவரத்து பிரிவு போலீஸாருக்கென 80 வாக்கி டாக்கிகள் வழங்கப்பட உள்ளது. 120 இடங்களில் வைக்கப்பட்டுள்ள ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கும்பகோணம் நகரத்தில் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் போக்குவரத்துப் பிரிவு போலீஸாரால் கண்காணிக்கப்பட்டு, கூட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம் நகராட்சிப் பகுதியில் வசிப்பவர்களுக்கு ரெசிடென்ட் பாஸ்...

கும்பகோணம் நகரின் 45 வார்டுகளிலும் வசிப்பவர்கள் மகாமகப் பெருவிழா நடைபெறும் 10 நாட்களிலும் வீட்டை விட்டு வெளியே சென்று வர பெரும் சிரமமாக இருக்கும் என பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து கும்பகோணம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காவல் நிலையங்கள் மூலம், எந்தெந்த தெருவில், எத்தனை பேர் வசிக்கிறார்கள் என கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடுகளில் வசிப்பவர்களுக்கு காவல் துறை சார்பில் ‘ரெசிடென்ட் பாஸ்’ வழங்கப்படும் என நகர்மன்றத் தலைவர் ரத்னா சேகர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x