Published : 25 Nov 2014 01:16 PM
Last Updated : 25 Nov 2014 01:16 PM

கிரானைட் முறைகேடுகள்: மதுரையில் மட்டும் விசாரிக்க சகாயத்துக்கு நீதிமன்றம் உத்தரவு - மற்ற மாவட்டங்கள் பின்னர் பரிசீலிக்கப்படும்

மதுரையில் நடந்த கிரானைட் முறைகேடுகள் குறித்து மட்டும் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மற்ற மாவட்டங்கள் குறித்து பின்னர் பரிசீலிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஏற்கெனவே தாக்கல் செய்த மனுவில், “மதுரையில் கிரானைட் முறைகேடுகள் நடந்தது குறித்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். மதுரை மாவட்டத்தில் மட்டுமல்லாமல் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் தாது மணல் திருடப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் மணல் குவாரி, கல் குவாரி உள்ளிட்ட கனிம வளங்கள் சட்டவிரோதமாக சுரண்டப்படுகின்றன. எனவே, தமிழகம் முழுவதும் கனிமவளம் சட்டவிரோதமாக சுரண்டப்படுவது குறித்து விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.

உயர் நீதிமன்ற முதல் டிவிஷன் பெஞ்ச் அந்த வழக்கை விசாரித்து, கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை சிறப்பு அதிகாரியாக நியமித்து உத்தரவிட்டது. அதன்படி, மதுரை மாவட்டத்தில் உள்ள கிரானைட் குவாரிகளின் முறைகேடுகளை மட்டும் விசாரிப்பதற்காக சகாயம் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசின் தொழில் துறைச் செயலாளர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், கிரானைட் முறைகேடுகள் குறித்து மதுரை மாவட்டத்தில் மட்டும் விசாரிக்க வேண்டுமா அல்லது தமிழகம் முழுவதும் விசாரிக்க வேண்டுமா என்று தெளிவுபடுத்த வேண்டுமெனக் கோரி ஐஏஎஸ் அதிகாரி சகாயம் சில தினங்களுக்கு முன்பு மனுதாக்கல் செய்தார்.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் இந்த வழக்கை நேற்று விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:

மதுரையில் நடந்த கிரானைட் முறைகேடுகள் குறித்து மனுதாரர் ஏற்கெனவே அறிக்கை சமர்ப்பித்துள்ளார். எனவே, அந்த முறைகேடுகள் குறித்து மட்டும் விசாரிக்க வேண்டும். இப்பணிக்கு குறிப்பிட்ட அதிகாரிகளின் உதவி தேவைப்பட்டால், அதுகுறித்து தமிழக அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அந்த அதிகாரிகளைக் கொண்டு விசாரணை நடத்தினால், விரைவாக விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய ஏதுவாக இருக்கும்.

பிற மாவட்டங்களிலும் விசாரணை நடத்துவது குறித்து வருங்காலத்தில் பரிசீலிக்கப்படும் என்று கூறி இவ்வழக்கை முடித்து வைத்தனர்.

இந்த வழக்கில், தங்களையும் சேர்த்துக்கொள்ளுமாறு பசுமை தாயகம் சார்பில் அதன் செயலாளர் அருள் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தனியாக மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு அவரது மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

இன்று விசாரணை தொடக்கம்?

ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மதுரையில் இன்று விசாரணையைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது: சகாயத்துக்குத் தேவையான போலீஸ் பாதுகாப்பு உட்பட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடு தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பான கோப்புகள், காவல்துறை, நீதிமன்ற விசாரணையில் உள்ள கோப்புகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கிரானைட் முறைகேடு நடந்துள்ள மேலூர் பகுதியிலுள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட வருவாய்த் துறையினர் தயாராக இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் 83 கிரானைட் குவாரிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளது. அரசுக்கு சொந்தமான நிலத்தில், அரசுக்குத் தெரியாமல் வெட்டப்பட்ட கிரானைட் கற்களின் சந்தை மதிப்பு ரூ.13,748 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பணத்தை ஏன் உங்களிடமிருந்து வசூலிக்கக்கூடாது எனக் கேட்டு முறைகேட்டில் ஈடுபட்டோருக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன. வரும் டிச. 3-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை இதுகுறித்து விசாரணை நடைபெறவுள்ளது. பிஆர்பி குடும்பத்தினருக்கு மட்டும் 50 நோட்டீஸ்கள் வரை அனுப்பப்பட்டுள்ளன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x