Published : 01 Dec 2015 09:32 AM
Last Updated : 01 Dec 2015 09:32 AM

காவல், தீயணைப்பு, சிறைத்துறைக்கு ரூ.150 கோடியில் புதிய அலுவலகங்கள், குடியிருப்புகள்: முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்

தமிழகம் முழுவதும் ரூ.150.37 கோடி செலவில் கட்டப்பட்ட காவல், தீயணைப்பு, சிறைத்துறை அலுவலக கட்டிடங்கள், குடியிருப்புகள் மற்றும் சிறை வளாகங்களை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருச்சி ஆயுதப்படை வளாகத்தில் இரண்டு தளங்களுடன் ரூ.5.98 கோடியில் கட்டப்பட்ட 55 காவல் துறை குடியிருப்புகளை முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செய லகத்தில் இருந்து நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

நெல்லை, வேலூர், தஞ்சை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ரூ.83 கோடியே 26 லட்சத்தில் காவல்துறையினருக்கு 958 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. கடலூர், விழுப்புரம், மதுரை, நீலகிரி, நெல்லை, புதுக்கோட்டை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ரூ.18.02 கோடி மதிப்பில் 33 காவல் நிலையங்களுக்கான கட்டிடப் பணிகள் முடிந்துள்ளன. விழுப்புரம், மதுரை, நெல்லை, நீலகிரி மாவட்டங்களில் 5 மகளிர் காவல் நிலையங்கள் ரூ.2.22 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

சென்னை எழும்பூரில் 500 காவலர்களுக்கான தங்குமிடம், புதுப்பேட்டையில் ஆயுதப்படை நிர்வாக அலுவலக கட்டிடம், அண்ணாசதுக்கத்தில் கடலோர காவல் நிலைய தங்குமிடம் உட்பட ரூ.27 கோடியே 83 லட்சத்தில் பல்வேறு மாவட்டங்களில் 26 காவல்துறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

ஊழியர் குடியிருப்புகள்

இதுதவிர, ரூ.1.12 கோடி மதிப்பில் 13 தீயணைப்புத்துறை அலுவலர் குடியிருப்புகள், நெல்லை, கடலூர், திருச்சி, கோவை சிறை வளாகங்களில் ரூ.11.94 கோடியில் 100 சிறை ஊழியர் குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

காவல்துறை, தீயணைப்பு மற்றும் சிறைத்துறையினருக்காக மொத்தம் ரூ.150 கோடியே 37 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா நேற்று திறந்துவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச் சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலு மணி, தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், உள்துறை செயலாளர் அபூர்வ வர்மா, டிஜிபி அசோக்குமார், சென்னை காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன், சிறைத்துறை தலைவர் எஸ்.ஜார்ஜ், தீயணைப்புத்துறை இயக்குநர் ஆர்.சி.குடாவ்லா, காவலர் வீட்டு வசதிக் கழக தலைவர் முகமது ஷகில் அக்தர் ஆகியோர் பங்கேற்றனர்.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x