Published : 26 Oct 2016 09:14 AM
Last Updated : 26 Oct 2016 09:14 AM

காரில் வலம் வந்து கைவரிசை: சென்னையில் திருடிய பைக்குகளை பெரம்பலூரில் விற்ற கும்பல் கைது

சென்னையில் பைக் திருடும் கும்பலை கைது செய்ய சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டார். தியாகராய நகர் துணை ஆணையர் சரவணன் மேற் பார்வையில் அசோக் நகர் உதவி ஆணையர் அரிக்குமார் தலைமை யில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர், நேற்று முன்தினம் உறவினர்களான 2 பைக் திருடர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 22 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், இன்ஸ்பெக்டர்கள் தங்கராஜ், சங்கர் தலைமையிலான போலீஸார் கே.கே நகர் பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, விலை உயர்ந்த கார் ஒன்று அந்த பகுதியை சுற்றி வந்தது. சந்தேகம் அடைந்த போலீஸார் அந்த காரை மடக்கினர். அதில், இருந்த டிப்டாப் உடையணிந்த 2 பேரிடம் விசாரித்தனர். அப்போது, இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

இதனால், அவர்கள் மீது போலீஸாருக்கு சந்தேகம் வந்தது. இதைத் தொடர்ந்து தனி இடத்தில் வைத்து விசாரித்தபோது அவர்கள் கே.கே.நகரைச் சேர்ந்த மெக்கானிக் மகேந்திரன் மற்றும் மகி என்பது தெரிந்தது. தாங்கள் பைக் திருடும் கும்பலை சேர்ந்தவர்கள் என்று அவர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர். இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில் மாங்காடு ராஜேஷ்குமார் , தள்ளு வண்டியில் வியாபாரம் செய்யும் ஜாபர்கான்பேட்டை லட்சுமணன், தொழுதூர் பகுதியைச் சேர்ந்த ரவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான 5 பேரும் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று போலீஸார் தெரிவித்தனர்.

18 பைக் பறிமுதல்

இவர்கள் சென்னையில் பைக்கு களை திருடி பெரம்பலூர் மாவட்டம் கீரனூர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு பாதி விலைக்கு விற்றுள்ளனர். பைக் திருடும் வேலைகளை மெக்கானிக் மகேந்திரனும், வண்டியின் எண் களை மாற்றுவதை ராஜேசும், இடத்தை தேர்வு செய்யும் பணிகளை லட்சுமணனும் செய்துள்ளனர் என்று தனிப்படை போலீஸார் தெரிவித்துள்ளனர். இவர்களிடம் இருந்து 18 பைக் 1 கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x