Last Updated : 26 Apr, 2017 06:05 PM

 

Published : 26 Apr 2017 06:05 PM
Last Updated : 26 Apr 2017 06:05 PM

காட்டுக்குள் டாஸ்மாக் அதிகாரிகள் அமைக்கும் மதுக்கடை: போராட்டத்துக்கு தயாராகும் கேரள-தமிழக எல்லை கிராமங்கள்

'பழங்குடியின மக்களின் பொருளாதார நிலைமையையும்,அறியாமையையும் கருத்தில் கொண்டு பக்கத்தில் உள்ள அட்டப்பாடியில் கேரள அரசு அங்கே அந்த மக்கள் வாழும் பகுதிகளில் மதுக்கடைகளை அடியோடு ஒழித்துள்ளது. ஆனால் தமிழக அரசோ இங்கே பழங்குடியின மக்கள் வசிக்கும் ஊருக்குள்ளேயே மதுக்கடையை தேடி வந்து திறக்கிறது. இதை என்னவென்று சொல்வது?' என புலம்பித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த பட்டிசாலை கிராம மக்கள்.

மேட்டுப்பாளையம் வட்டம், தோலம்பாளையம் ஊராட்சிக்குள் வருகிறது பட்டிசாலை என்னும் மலைக்கிராமம். தமிழக வனப்பகுதியின் எல்லையோரத்தில் கேரளத்தின் அட்டப்பாடி காடுகளை ஒட்டியுள்ள பகுதியில் இந்த ஊர் அமைந்துள்ளது. சுற்றிலும் அடர்ந்த வனம் சூழ்ந்த இக்கிராமம் மற்றும் இதனை சுற்றியுள்ள மேல்பாவி, குழியூர், சீங்குழி, கோபனாரி போன்ற பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் இயற்கையோடு இணைந்து வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது பட்டிசாலை கிராமத்தில் தமிழக அரசின் புதிய டாஸ்மாக் மதுக்கடையை திறக்க திட்டமிடப்பட்டு அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டதோடு மதுக்கடை திறப்பிற்கான பணிகளையும் முழு மூச்சாக நடத்தி வருகிறது.

மாவோயிஸ்டுகள் நடமாட்டமும் தாக்குதல்களும் உறுதி செய்யப்பட்ட கேரள வனப்பகுதியான அட்டப்பாடி காட்டையொட்டியுள்ள இந்த கிராமம் எப்போதும் தமிழக போலீஸாரின் தீவிர கண்காணிப்பில் உள்ள இடமுமாகும். அட்டப்பாடி பகுதியில் கேரள போலீஸாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் துப்பாக்கி சண்டை நடைபெறும் போதெல்லாம், அங்கிருந்து தப்பும் மாவோயிஸ்டுகள் சில நிமிட நடைபயணத்தில் பட்டிசாலை வழியாக தமிழகத்தினுள் ஊடுருவுவது மிக சுலபம்.

எனவே இப்பகுதியில் எப்போதும் நக்சல் தடுப்பு அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் தினசரி இப்பகுதி காடுகளில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடத்தப்படுகிறது. அதையொட்டி பட்டிசாலை உள்ளிட்ட இப்பகுதி கிராமங்களில் தேடப்படும் மாவோயிஸ்டுகளின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு இம்மலைக்கிராம மக்களிடம் வீடு வீடாக சென்று புதிய நபர்கள் நடமாட்டம் குறித்து உளவுப்பிரிவு போலீஸார் விசாரிப்பதும் தொடர்கிறது.

'இப்படி தீவிர கண்காணிப்பில் உள்ள பகுதியில் மதுக்கடை திறக்கப்பட்டால் எங்களது அன்றாடப் பணிகள் பாதிக்கப்படும். ஊருக்குள் நிம்மதி குலையும். உள்ளூர் மலைவாழ் மக்களை தவிர புதிய ஆட்கள் நுழைவதும் அதிகரிக்கும். பல்வேறு தீவிரத்தன்மையுள்ள பிரச்சினைகளும் தோன்றும். எனவே இங்கே மதுக்கடை வருவது பாதுகாப்பு ரீதியாகவும் பேராபத்தானது!' என்று இப்பகுதியில் ஊடுருவி விசாரிக்கும் போலீஸாரும் கூட கவலை தெரிவிக்கிறார்கள்.

'காட்டு யானைகள், கரடி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட பிற வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியாகும் இது. இந்த இயற்கை வளம் மிக்க பகுதியில் மதுபானக்கடை திறக்கப்பட்டால் காட்டின் சூழல் கடுமையாக பாதிக்கப்படும். புதிய நபர்களின் வருகையால் மனித விலங்கின மோதல்கள் அதிகரித்து உயிரிழப்புகள் ஏற்படும்!' என்பது இங்கு வலம் வரும் வனத்துறையினரின் எச்சரிக்கையாகவும் உள்ளது.

'கேரளாவில் அட்டப்பாடி பிரதேசத்தில் 191 பழங்குடியின கிராமங்கள் உள்ளன. அவர்கள் கள், சாராயம் குடித்துக் குடித்து மேலும் பாதிக்கப்படுகிறார்கள். அச்சமூக பெண்கள் வதைபடுகிறார்கள். எனவே மாநிலம் முழுக்க கள்ளுக்கடைகள் திறக்கப்பட்டிருந்தாலும் இங்கே அது இருக்கவே கூடாது என்று போராடினார்கள். அதற்காகவே அந்த அரசு மாநிலம் முழுக்க கள்ளுக்கடைகளை திறந்திருந்தாலும் அட்டப்பாடியில் மட்டும் 50 கிலோமீட்டர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள்ளுக்கடைகளை 15 வருடங்களுக்கு மேலாக அறவே ஒழித்திருக்கிறது. மதுபானங்கள் இல்லா கேரள பிரதேசம் என்றும் அட்டப்பாடி புகழ்பெற்று விளங்குகிறது.

அது மட்டுமல்லாது அட்டப்பாடியின் தமிழக எல்லையான ஆனைகட்டி பகுதியில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுபானக்கடை இருந்தது. கேரள பகுதிகளில் இருந்து வரும் ஆதிவாசி மக்கள் இங்கே வந்து மது அருந்தி கிடந்தார்கள். அதனாலும் அவர்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. எனவே தமிழக எல்லையில் இருக்கும் மதுபானக்கடையையும் எடுக்க வேண்டும் என போராடினார்கள். தமிழக அரசு அதற்கு துணை நிற்கவில்லை. எனவே அதை எதிர்த்து மாதக்கணக்கில் உண்ணாவிரதம் இருந்தார்கள் அட்டப்பாடி மக்கள். அதன் விளைவாக அங்கே சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது. பிறகு கேரள அதிகாரிகள் தமிழக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அந்த மதுக்கடையை 10 கிலோ மீட்டருக்கு அப்பால் கொண்டு போனது.

இது கடந்த வருடம் தேர்தலின் போது நடந்த சங்கதி. அப்படியிருக்க, அதே கேரள எல்லையில் உள்ள இந்த பட்டிசாலை கிராமத்தில் மதுபானக்கடையை தமிழக அதிகாரிகள் திறக்க இருப்பது எந்த வகையில் நியாயம்?' என கேள்வி எழுப்புகிறார்கள் பட்டிசாலை சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள்.

இங்கே மதுக்கடை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களும் கொடுத்துள்ளனர். அதையும் மீறி இங்கே மதுக்கடை வருமானால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று எச்சரிக்கவும் செய்கிறார்கள். ஆனால் இவற்றையெல்லாம் புறந்தள்ளி மதுக்கடையை இங்கே திறப்பதில் அவசரம் காட்டி வருகிறார்கள் டாஸ்மாக் மதுபானக்கடை விரிக்கும் அதிகாரிகள்.

'அரசின் முக்கிய துறைகளான காவல்துறை மற்றும் வனத்துறையினரின் கருத்தையும், உள்ளூர் பழங்குடியின மக்களின் கோரிக்கைகளையும் புறந்தள்ளிவிட்டு தமிழகத்தின் எல்லையோர வனச்சோதனை சாவடி அருகிலேயே மதுக்கடையினை திறக்க டாஸ்மாக் அதிகாரிகள் தொடர்ந்து தீவிரம் காட்டி வருவது நல்லதல்ல. இது தமிழகத்திலேயே டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு எதிராக ஒரு முன்மாதிரி போராட்டம் உருவாவதற்கே வழிவகுக்கும்' என்கிறார்கள் பொதுநோக்கர்கள்.

பட்டிசாலையில் மதுபானக்கடை அமைவது குறித்து டாஸ்மாக் மண்டல அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது, ''பட்டிசாலையில் புதிய மதுக்கடை அமைக்க இடமும் கடையும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் காவல்துறை மற்றும் வனத்துறையினரின் கருத்துகளும், பழங்குடியின மக்களின் கோரிக்கைகளும் கேட்கப்பட்டுள்ளது. அதை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களின் வழிகாட்டுதலின்படியே இதில் முடிவு எடுக்கப்படும்'' என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x