Published : 28 Nov 2014 02:19 PM
Last Updated : 28 Nov 2014 02:19 PM

கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்க கூடாது: ராமதாஸ்

கல்வி, சுகாதாரம், ஊரக வேலைவாய்ப்பு போன்ற துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைப்பது ஏழை மக்களை கடுமையாக பாதிக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில்,"நாட்டின் நிதிப்பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் நோக்குடன் கல்வி, சுகாதாரம், ஊரக வளர்ச்சி ஆகிய துறைகளுக்கு நடப்பு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. மனிதவள மேம்பாட்டுக்கு தடை போடும் இந்நடவடிக்கை வருத்தமளிக்கிறது.

நாடாளுமன்றத்தில் கடந்த ஜூலை 10 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பொது நிதிநிலை அறிக்கையில் ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.80,043 கோடியும், கல்வித்துறைக்கு ரூ.77,307 கோடியும், சுகாதாரத்துறைக்கு ரூ.30,645 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிதி ஒதுக்கீடுகள் மிகவும் குறைவானவை என்று அப்போதே குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில் ஊரக வளர்ச்சித் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் சுமார் ரூ.20,000 கோடியும், கல்வித்துறைக்கு ரூ.11,000 கோடியும், சுகாதாரத்துறைக்கு சுமார் ரூ.7,000 கோடியும் குறைக்கப்பட இருப்பதாக நிதித்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இது நடைமுறைப்படுத்தப்பட்டால் சமூகத் துறைகள் கடுமையாக பாதிக்கப்படும்.

2013-14 ஆம் ஆண்டில் ஊரக வளர்ச்சித்துறைக்கு மொத்தம் ரூ.80,194 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இது முந்தைய ஆண்டைவிட 46% அதிகம் ஆகும். ஆனால், நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் ஊரக வளர்ச்சித்துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, கடந்த ஆண்டைவிட சுமார் ரூ.150 கோடி குறைவாகவே ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில் மேலும் ரூ.20,000 கோடி குறைக்கப்பட்டால் கிராமப்புற வளர்ச்சி அடியோடு பாதிக்கப்படும். இதேபோல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான நிதியும் ரூ.33,350 கோடியிலிருந்து சுமார் ரூ.9,000 கோடி குறைக்கப்படவுள்ளது. ஏற்கனவே ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான நிதியும் குறைக்கப்பட்டால் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு குறைந்து வறுமையும், தற்கொலைகளும் அதிகரிக்கும் வாய்ப்பிருப்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 6 விழுக்காட்டை கல்வித்துறைக்காக மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது தான் கோத்தாரி குழுவின் பரிந்துரை ஆகும். ஆனால், அதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளவில்லை என்பதுடன், கோத்தாரி குழு அமைக்கப்பட்டதன் 50 ஆண்டு கொண்டாடப்படும் நிலையில் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை குறைப்பது சரியா? என மத்திய அரசு சிந்திக்க வேண்டும். 12ஆவது ஐந்தாண்டு திட்டத்திற்கான இலக்குகளை நிர்ணயிப்பதற்காக, கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக்குழு கூட்டத்தில் சுகாதாரத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை வரும் 2017 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 2.5% ஆக உயர்த்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

இந்த இலக்கை எட்ட வேண்டுமானால் ஒவ்வொரு ஆண்டும் சுகாதாரத்துறைக்கான நிதி ஒதுக்கீடு கணிசமான அளவில் அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு செய்வதற்குப் பதிலாக 2013&14 ஆம் ஆண்டில் சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.37,330 கோடி நிதி நடப்பாண்டில் ரூ. 30,645 கோடியாக குறைக்கப்பட்ட நிலையில், இப்போது மேலும் ரூ. 7,000 கோடியை குறைத்து எதிர்மறையான திசையில் பயணிப்பது மக்கள் நல அரசுக்கு அழகல்ல.

இந்திய பொருளாதாரம் மந்தமான நிலையில் இருப்பதையும், நிதிப்பற்றாக்குறையை கட்டுப்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு இருப்பதையும் மறுக்க முடியாது. திட்டமில்லா செலவுகளுக்கு ரூ. 12 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் சிறு பகுதியை குறைப்பதன் மூலமோ, சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துவதன் மூலமோ நிதிப்பற்றாக்குறையை ஓரளவு குறைக்க முடியும். நிதி ஒதுக்கீட்டை குறைப்பதாக இருந்தால் அதனால் எந்த துறையும் கடுமையாக பாதிக்கப்படாத வகையில், அனைத்து துறைகளுக்கும் சீராக நிதி வெட்டு செய்யப்பட வேண்டும். அதை விடுத்து சமூகத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை மட்டும் குறைப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உட்கட்டமைப்பு வசதிகள் முக்கியம் என்பதால், அத்துறைகளின் நிதி ஒதுக்கீடு குறைக்கப்படாது என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. பொருளாதார வளர்ச்சிக்கு உட்கட்டமைப்பு வசதிகள் உடனடியாக உதவும் என்றால், கல்வி மற்றும் சுகாதாரத்தை உள்ளடக்கிய மனித வளம் தொலைநோக்கில் பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும். எனவே, ஒரு சார்பான நிதி வெட்டு சரியான அணுகுமுறையல்ல. அதுமட்டுமின்றி, உட்கட்டமைப்பு வசதிகள் நகர்ப்புறங்களை மையமாக வைத்து மேற்கொள்ளப்படும் நிலையில், சமூகத் திட்டங்கள் கிராமப்புறங்களை மையமாகக் கொண்டவை ஆகும். இத்தகைய சூழலில் சமூகத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை மட்டும் குறைப்பது நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் இடையிலான இடைவெளியை அதிகரித்து விடும்.

எனவே, கல்வி, சுகாதாரம், ஊரக வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்கும் முடிவை கைவிட்டு, அனைத்து துறைகளும் சம அளவில் வளர்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x