Published : 28 Mar 2015 11:13 AM
Last Updated : 28 Mar 2015 11:13 AM

கர்நாடகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் முழு அடைப்பு: ஓரளவே பாதிப்பு

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடகம் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு, ராசிமணல் ஆகிய இடங்களில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் 28-ம் தேதி (இன்று) முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுவதாக தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்தது.

அதன்படி, காவிரி டெல்டா பகுதிகள் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்துக்கு திமுக, காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், பாமக, மதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவாக கடைகள் வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும் என வணிகர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என்று அறிவித்தன. இதனை அடுத்து இன்றையக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு கூட்டத் தொடர் வரும் 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், போராட்டத்தின் ஒரு பகுதியாக எழும்பூர் ரயில் நிலையத்தில் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர் ஜோத்பூர் - மன்னார்குடி ரயிலை மறித்துப் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் திமுக, மதிமுக, தமாகா , மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை பங்கேற்றன. சுமார் ஆயிரம் பேர் இந்த போராட்டத்தில் குவிந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸ் கைது செய்தது.

கைதானவர்கள் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு திடலில் வைக்கப்பட்டனர். அவர்களை ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசினார்.

பின்னர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். ''அனைத்துகட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டுவது உறுதி. உணர்வுகளை வெளிக்காட்டும் வகையில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற்றுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். எதிர்க்கட்சிகளின் கருத்தை ஏற்றுக் கொண்டு சட்டமன்றத்தை ஒத்திவைத்ததற்கு சபாநாயகருக்கு நன்றி'' என ஸ்டாலின் கூறினார்.

வழக்கம்போல் பேருந்துகள் இயக்கம்:

சென்னை கோயம்பேட்டில் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்பட்டன. சேலம், திருச்சி, விழுப்புரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட அனைத்து வழித்தடங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டன.

மதுரையில் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன.

திருச்சியில் வழக்கத்தை விட குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டன. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. காந்தி சந்தையிலும் கடைகள் அடைக்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.

அரியலூர், ஜெயம்கொண்டம், ஆண்டிமடம் பகுதிகளில் கடைகள் அடைப்பட்டன.

தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

கரூர் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. ஆனால், பேருந்துகள் இயக்கப்பட்டன.

தருமபுரி மாவட்டம் முழுவதும் 80 சதவீத கடைகள் அடைக்கப்பட்டன.

நீலகிரி, உதகமண்டலத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.

விருதுநகர் மாவட்டத்தில் கடைகள் திறக்கப்பட்டன. பேருந்துகள் இயக்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 75 சதவீத கடைகள் அடைக்கப்பட்டன. ஆனா, பேருந்துகள் இயக்குவதில் எந்த பாதிப்பும் இல்லை.

திருவள்ளூர், திருத்தணி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.

காரைக்காலில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பேருந்துகள் இயக்கப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்து போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை.

ஈரோட்டில் வழக்கம்போல் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கடலூர் மாவட்டத்தில் வழக்கம்போல் பேருந்துகள், ஆட்டோக்கள் இயக்கப்பட்டன.

விருதுநகர் மாவட்டத்தில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பேருந்துகள் இயக்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டத்தில் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்பட்டன.

தமிழக - கேரள எல்லையான குமுளியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன.

சேலத்திலிருந்து கர்நாடகாவுக்கு இயக்கப்படும் தமிழக பேருந்துகள் பாலாறு வரை மட்டுமே இயக்கப்பட்டன.

ஈரோட்டிலிருந்து கர்நாடகாவுக்கு இயக்கப்படும் தமிழக பேருந்துகள் புலிஞ்சூர் சோதனைச்சாவடியில் நிறுத்தப்பட்டன.

ஓசூர் எல்லையில் தமிழகம் மற்றும் கர்நாடக அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

தமிழகம் முழுக்கப் பரவலாக 75 சதவீத லாரிகள் இயங்காமல் நிறுத்தப்பட்டன.

கன்னட அமைப்பினர் போராட்டம்

அத்திப்பள்ளியில் கர்நாடக அமைப்பினர் நடத்திய போராட்டம் படம்: எஸ்.கே.ரமேஷ்

மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழக எல்லையான கிருஷ்ணகிரி அருகே உள்ள அத்திப்பள்ளியில் ஜெய் கர்நாடக அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இதனால், அத்திப்பள்ளியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. ஓசூர் - கர்நாடகா செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

கர்நாடகத்தில் இருந்து சத்தியமங்கலம் வழியாக தமிழகம் வரும் வாகனங்களும், ஊட்டியில் இருது மைசூர் செல்லும் வாகனங்களும் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

ஓபிஎஸ் உருவ பொம்மை எரிப்பு

முதல்வர் ஒ.பன்னீர்செலவத்தின் உருவ பொம்மை எரிப்பு. |படம்: என்.பாஸ்கரன்.

கர்நாடகாவில் மண்டியா, ராம்நகர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்திய இளைஞர் காங்கிரஸை சேர்ந்தவர்கள் ஓபிஎஸ் உருவ பொம்மையை எரித்தனர்.

கர்நாடகாவில் தமிழ் திரைப்படங்களை ஒளிப்பரப்பும் சேனல்கள் நிறுத்தப்பட்டன. தமிழ்த் திரைப்படங்களத் திரையிடும் திரையரங்குகளுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

தமிழர்கள் வாழும் சிவாஜி நகர், அல்சூர், விவேக் நகர் ஆகிய பகுதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

மறியல் செய்தவர்கள் கைது

கும்பகோணம் மீன் அங்காடி அருகே மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில் நிலையத்தில் ரயில் மறியல் செய்ய முயன்ற எஸ்டிபிஐ கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

மன்னார்குடி அருகே நீடாமங்கலத்தில் ரயிலை மறிக்க முயன்ற விவசாயிகள், அனைத்துக் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட முயன்ற முன்னாள் அமைச்சர் அழகு திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டார். இவருடன் அனைத்துக் கட்சியினரைச் சார்ந்த 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

எர்ணாகுளத்தில் இருந்து நாகூர் வந்த ரயிலை மறிக்க முயன்ற 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சையில் ரயில் மறியல் செய்ய முயன்ற திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சியில் ரயிலை மறித்த மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்

காரைக்காலில் விவசாயிகள், அனைத்துக் கட்சியினர் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உளுந்தூர்பேட்டை வாழப்பாடியில் ஆட்டோ சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

மொத்தத்தில் மறியல், பேரணி, ஆர்ப்பாட்டம் தாண்டி எந்த வித அசம்பாவிதங்களும் நிகழவில்லை. இதனால், பொதுமக்களுக்கு ஓரளவே பாதிப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x