Published : 26 Apr 2015 12:33 PM
Last Updated : 26 Apr 2015 12:33 PM

கருணாநிதி உட்பட எதிர்க்கட்சித் தலைவர்களுடன் விஜயகாந்த் திடீர் சந்திப்பு

கருணாநிதி, வாசன், இளங்கோவன், தமிழிசையுடன் விஜயகாந்த் சந்திப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரை இன்று சந்திக்கிறார்

திமுக தலைவர் கருணாநிதி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மதிமுக தலைவர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று சந்தித்துப் பேசினார்.

காலை 10.55 மணி

கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்கு வந்த விஜயகாந்த், அவருடன் சுமார் 10 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். அப்போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், ஆ.ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் விஜயகாந்த் கூறியதாவது:

மேகேதாட்டுவில் கர்நாடகம் தடுப்பணைகள் கட்டுவது, நிலம் கையகப்படுத்துதல் சட்டம், ஆந்திரத்தில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது, தமிழக மீனவர் பிரச்சினை, முல்லைப் பெரியாறு, காவிரி உள்ளிட்ட நதி நீர்ப் பிரச்சினைகள் குறித்து விவா திப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியை திங்கள்கிழமை (ஏப். 27) பகல் 12.30 மணிக்கு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சந்தித்துப் பேச இருக்கிறேன். இதற்கான ஏற்பாடு களை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்துள்ளார்.

பிரதமரைச் சந்திக்கும்போது அனைத்துக் கட்சித் தலைவர்களும் இருந்தால் தமிழகத்துக்கு வலு சேர்ப்பதாக இருக்கும். எனவே, அதிமுக தவிர மற்ற கட்சித் தலைவர்களை அழைப்பதற்காக வந்துள்ளேன்.

திமுக சார்பில் பிரதிநிதியை அனுப்புவதாக கருணாநிதி உறுதி அளித்துள்ளார். மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் தேமுதிகவுடன் இணைந்து பணியாற்ற கருணாநிதி விருப்பம் தெரிவித்தார்.

சுய நலத்துக்காக பிரதமர் மோடியை, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்துள்ளார். அனைத் துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, அனைவரையும் ஒருங்கிணைத்து பிரதமரை சந்தித்திருக்க வேண்டும். அந்தக் கடமையில் இருந்து அவர் தவறிவிட்டார். பிரதமர் மோடியை சந்தித்த பிறகு அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

பகல் 11.45 மணி

கோபாலபுரத்தில் இருந்து சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த விஜயகாந்த், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங் கோவனை சந்தித்துப் பேசினார்.

அம்பேத்கரின் 125-வது பிறந்த நாள் குழு கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த ப.சிதம்பரம், திருநாவுக்கரசர், குஷ்பு ஆகி யோரையும் அவர் சந்தித்தார்.

பகல் 12.20 மணி

தமிழக பாஜக அலுவலகமான கமலாலயம் சென்ற விஜயகாந்த், அங்கு மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில அமைப்பு பொதுச் செயலாளர் எஸ்.மோகன்ராஜுலு ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

பின்னர் ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து அழைப்பு விடுத்தார்.

பகல் 1.45 மணி

அசோக் நகரில் உள்ள விடு தலைச் சிறுத்தைகள் கட்சி அலு வலகத்தில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனையும் விஜயகாந்த் சந்தித்து பிரதமரை சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்தார். தேமுதிக இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி எம்எல்ஏ ஆகியோர் விஜயகாந்த் உடன் இருந்தனர்.

மாலை 4.30 மணி

பின்னர், விஜயகாந்த் நேற்று மாலை மதிமுக தலைமை அலு வலகமான தாயகம் சென்று அங்கு வைகோவுடன் பேசினார். அவருக்கும் டெல்லி வர அழைப்புவிடுத்தார்.

கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு அழைப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனுடன் விஜய காந்த் தொலைபேசியில் பேசி அழைப்புவிடுத்தார்.

இது குறித்து ஜி.ராம கிருஷ்ணனிடம் கேட்டபோது, ‘பிரதமரை சந்திக்க வருமாறு விஜயகாந்த் தொலைபேசியில் அழைப்புவிடுத்தார். நாகையில் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் நடைபெறுவதால் வர வாய்ப்பில்லை என்பதை தெரிவித்துவிட்டேன்’ என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசனிடம் கேட்டபோது, ‘தேமுதிக எம்எல்ஏ பார்த்தசாரதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு விஜயகாந்த் சந்திக்க விரும்புவதாக தெரிவித் தார். திருப்பூரில் நடைபெறும் கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில் இருப்பதால் அவரைச் சந்திக்க முடியவில்லை’ என்றார்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கருணாநிதி, வைகோ, இளங்கோவன், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களை விஜயகாந்த் சந்தித்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x