Last Updated : 30 Oct, 2014 10:43 AM

 

Published : 30 Oct 2014 10:43 AM
Last Updated : 30 Oct 2014 10:43 AM

கடலூர் மாவட்டத்தில் செயல்படும் அங்கீகாரமற்ற பள்ளி விழாவில் ஆளுநர் பங்கேற்கலாமா?- சமூக ஆர்வலர் கேள்வி

கடலூர் மாவட்டத்தில் 2011-ம் ஆண்டு முதல் அரசின் அனுமதி பெறாமலேயே 22 பள்ளிகள் இயங்கி வருவதாகவும், அவ்வாறு அங்கீகாரம் இல்லாத ஒரு பள்ளியின் வெள்ளி விழா நிகழ்ச்சிக்கு ஆளுநர் வருகை தரவிருப்பது சரியான செயலா எனவும் மக்கள் சட்ட விழிப்புணர்வு மற்றும் நுகர்வோர் நலச்சங்கத் தலைவர் ராஜ்மோகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: ‘கடலூர் மாவட்டத்தில் 112 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் இயங்குகின்றன. இதில் 23 பள்ளிகள் 2011-ம் ஆண்டுக்குப் பின் அரசின் அங்கீகாரம் பெறவில்லை.

கடலூர் நெல்லிக்குப்பம் மெயின் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி 31-05-2011க்கு பிறகு அங்கீகாரம் பெறப்படாமலேயே இயங்கிவருகிறது. இப்பள்ளியின் அங்கீகாரம் தொடர்பான கோப்பு கடலூர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆய்வாளர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது.

இப்பள்ளியின் கட்டிடங்களுக்கு உள்ளூர் திட்டக்குழுவின் வரைபட அனுமதி பெறப்படவில்லை. இப்பள்ளியின் நடுவே நகராட்சிக்குச் சொந்தமான சாலை உள்ளது, அரசு வகுத்துள்ள விதிகளை பின்பற்றாமல் இப்பள்ளி இயங்கி வருவதால் இப்பள்ளிக்கு இதுவரை அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் இப்பள்ளியின் வெள்ளிவிழா ஆண்டு நடைபெறுவதை ஒட்டி தமிழக ஆளுநர் கலந்துகொள்வதாக செய்தி வெளியாகியுள்ளது. அரசின் அங்கீகாரமில்லாத பள்ளிக்கு ஆளுநர் வருகை தருவது பல தவறான முன்னுதாரணங்களுக்கு வழிகோலும். எனவே ஆட்சியர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என ராஜ்மோகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக கடலூர் மாவட்ட மெட்ரிக் பள்ளியின் ஆய்வாளர் பிச்சையப்பனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அப்பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தார். அங்கீகாரப் பிரச்சினைத் தொடர்பாக பள்ளியின் முதல்வர் நடராஜனை தொடர்புகொண்டு போது, அவர் தனது கைப்பேசி இணைப்பை துண்டித்துவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x