Published : 26 Apr 2017 07:57 AM
Last Updated : 26 Apr 2017 07:57 AM

ஓபிஎஸ், வைத்திலிங்கம் சாதகமான கருத்து: அதிமுக அணிகள் இன்று பேச்சுவார்த்தை தொடங்க வாய்ப்பு?

அதிமுக அணிகள் இணைப்புக் கான பேச்சுவார்த்தை ஓபிஎஸ் நிபந்தனைகளால் தொடங்கப் படாமல் இருந்தது. இந்நிலை யில், ஓ.பன்னீர்செல்வமும், வைத்தி லிங்கமும் சாதகமான கருத்துகளை கூறியுள்ளதால், அமாவாசை தினமான இன்றே பேச்சுவார்த்தை தொடங்க வாய்ப் புள்ளது.

அதிமுகவின் இரு அணிகளிலும் அமைக்கப்பட்ட குழுவினர் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்தது. ஆனால், ஜெயலலிதா மரணத்துக்கு சிபிஐ விசாரணை, சசிகலா குடும்பம் கட்சியை விட்டு நீக்கம் ஆகிய இரு நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும். வேறு எந்த நிபந்தனைகளும் எங்களிடம் இல்லை என்று ஓபிஎஸ் தரப்பு மீண்டும் அறிவித்தது.

இதைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமி சார்பில் பேசிய ஆர்.வைத்திலிங்கம், ‘‘நிபந்தனை மூலம் முட்டுக்கட்டை ஏற்படு கிறது. மகிழ்ச்சியுடன் அமர்ந்து பேசுவோம். வாருங்கள்’’ என்றார். நேற்று முன்தினம் இரவு வரை பேச்சுவார்த்தை நடக்குமா என்ற நிலை இருந்தது.

இதற்கிடையில், ஓபிஎஸ் அணியின் அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி அவைத்தலைவர் இ.மதுசூதனன், ‘‘அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலா படங்களை அகற்ற வேண்டும்’’ என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ‘‘இந்த கோரிக்கையை ஏற்க வேண்டியதில்லை’’என்று தெரிவித்தார். அமைச்சரின் இந்த கருத்துகளால் இணைப்பில் மீண்டும் சிக்கல் உருவாகும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், ஓபிஎஸ் அணி யின் பேச்சுவார்த்தைக் குழு தலை வர் கே.பி.முனுசாமி தலைமையில் குழுவினர் ஆலோசனையில் ஈடு பட்டனர். அப்போது பன்னீர்செல்வ மும் அங்கு வந்தார். அவர்கள் தொடர் ஆலோசனையின் முடிவில் பன்னீர்செல்வம் செய்தியாளர் களிடம், ‘‘இருதரப்பு பேச்சுவார்த் தைக்கு சுமுகமான சூழல் ஏற்பட்டுள்ளது. பேசி வருகிறோம்’’ என்றார். இது இணைப்புக்கான சூழலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியுள்ளது. நேரடியாக வெளியில் தெரியாவிட்டாலும், இரு தரப்பும் அடிப்படை பேச்சு வார்த்தையை தொடங்கிவிட்ட தாகவே அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒருபுறம் பேச்சுவார்த்தை நடந் தாலும், மற்றொரு புறம் முதல்வர் பழனிசாமி அணியினர், மாவட்ட செயலாளர்களை அழைத்து கூட்டம் நடத்துகின்றனர். நேற்று நடந்த முதல் நாள் கூட்டத்தில் அணிகள் இணைப்பு, நிபந்தனைகள் தொடர்பாகவும் கருத்து கேட்கப்பட்டுள்ளது. கூட்ட முடிவில், பேசிய வைத்திலிங்கம் எம்.பி., ‘‘ இரு அணிகளும் இணைய நிறைய வாய்ப்புள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

எனவே, இன்று அமாவாசை தினமாக இருப்பதாலும், புதிய முயற்சிகளுக்கு உகந்த நாள் என்பதாலும், இன்றே இருதரப்பும் அமர்ந்து பேச வாய்ப்புள்ளதாக அதிமுக நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்.

இது தொடர்பாக நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘கைபேசி, எஸ்எம்ஸ், வாட்ஸ்-அப் மூலம் தகவல் தெரிவிப்பதை விடுத்து, நேரில் இருதரப்பும் பேச வேண்டும். அப்போதுதான் மனம் விட்டு பேச முடியும். பேச்சுவார்த்தை அதிமுக அலுவலகத்தில் நடக்குமா, வெளியில் நடக்குமா என்பதை அவர்கள்தான் முடிவெடுப்பார்கள்’’ என்றார்.

மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை

அதிமுக அம்மா கட்சியைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கட்சியின் அவைத் தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில், முதல்வர் கே.பழனிசாமி முன்னிலையில் நடந்த இக்கூட்டத்தில், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த 15 மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த பாலகங்கா, கலைராஜன் ஆகியோரும் பங்கேற்றனர். டிடிவி தினகரன் ஆதரவாளர்களான தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தங்க தமிழ்செல்வன் இக்கூட்டத்தில் கலந்துகொண்டார். ஆனால், மற்றொரு ஆதரவாளரான சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த வெற்றிவேல் பங்கேற்கவில்லை. நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கிய இக்கூட்டம் 1 மணி நேரத்துக்கு மேல் நடைபெற்றது. இக்கூட்டம் முடிந்து வெளியில் வந்த கட்சி நிர்வாகிகள் உற்சாகமான மனநிலையில் காணப்பட்டனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x