Published : 16 Apr 2015 02:20 PM
Last Updated : 16 Apr 2015 02:20 PM

ஐஆர்எஸ் அதிகாரி ஆன குழந்தைத் தொழிலாளி: கல்லூரி பட்டமளிப்பு விழாவில் நம்பிக்கைத் தகவல்

குழந்தை தொழிலாளியாக இருந்த ஒரு சிறுவன், சிரமப்பட்டு உழைத்து பின்னாளில் வருமானவரித் துறை அதிகாரியாக உயர்ந்ததை நினைவுகூர்ந்தார் திருச்சி மண்டல வருமானவரித் துறை இணை ஆணையர் வி.நந்தகுமார்.

திண்டுக்கல் ஜிடிஎன் கல்லூரியில் 47-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. கல்லூரிச் செயலாளர் வி. ஆதிநாராயணசாமி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் நா. மார்க்கண்டேயன் முன்னிலை வகித்தார்.

விழாவில் திருச்சி மண்டல வருமானவரித் துறை இணை ஆணையர் வி. நந்தகுமார், இளங்கலை மற்றும் முதுகலைப் பிரிவைச் சேர்ந்த 691 மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர், அவர் பேசியதாவது:

குழந்தைத் தொழிலாளி என்ற சொல் இன்றைய சமூகத்தில் சாதாரணமாகிவிட்டது. நானும், ஒரு குழந்தைத் தொழிலாளியாக வாழ்ந்தவன்தான். குடும்பச் சூழ்நிலையால் 6-ம் வகுப்புடன் பள்ளியை விட்டு நின்று கூலி வேலைக்குச் சென்றேன்.

மற்ற குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை பார்க்கும்போது, கற்றலின் முக்கியத்துவம் எனக்கு புரிந்தது. அதனால், படிப்பை விடவே கூடாது என்ற வைராக்கியத்துடன், கூலி வேலைக்குச் சென்றுகொண்டே தனித்தேர்வாக எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 எழுதி தேர்ச்சி பெற்றேன்.

பின்னர் கல்லூரியில் சேர முயன்றபோது, பள்ளிகள் மூலம் நேரடியாக தேர்ச்சி பெறவில்லை என்ற காரணம் கூறி புறக்கணித்தனர். 12 தனியார் கல்லூரி படிக்கட்டுகளில் ஏறியும், அவர்கள் என்னைச் சேர்க்க மறுத்ததால், ஒரு குழந்தைத் தொழிலாளியாக நான் படிக்க முயன்றபோது ஏற்பட்ட வேதனையை மறக்க முடியாது. கடைசியில் அரசுக் கல்லூரி ஒன்றில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. வைராக்கியத்துடன் பட்டப்படிப்பை முடித்தேன்.

குழந்தைத் தொழிலாளியாக இருந்த நான், இன்று ராணுவம், கூட்டுறவு இணைப் பதிவாளர் என அரசின் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்து விட்டேன்.

2013ஆம் ஆண்டு மத்திய அமைச்சக செயலாளராக இருந்தபோது, குடியரசுத் தலைவருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

குழந்தைத் தொழிலாளியாக இருந்த என்னால் சாதிக்க முடிந்தபோது உங்களால் ஏன் முடியாது. விடாமுயற்சியும், கற்கும் ஆர்வமும் இருந்தால் யாராலும் சாதனைகள் படைக்க முடியும்" என்று அவர் பேசினார்.

விழாவில் ஜிடிஎன் கல்லூரி முதன்மை செயல் அலுவலர் க.ரெத்தினம், தனி அலுவலர் இரா.ஆறுமுகம், துணை முதல்வர் என்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x