Last Updated : 29 Aug, 2014 03:12 PM

 

Published : 29 Aug 2014 03:12 PM
Last Updated : 29 Aug 2014 03:12 PM

ஏளனப் பேச்சுகள் என்னை ஒன்றும் செய்யாது: ஒரு குணவதியின் கதை

ஏளனப் பேச்சுகள் என்னை ஒன்றும் செய்யாது என சொல்கிறார் குணவதி.

திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குச் சென்றால் பிறந்த குழந்தைகளை பாதுகாக்கும் வார்டில் பரபரப்பாக இயங்கும் குணவதியைப் (24) பார்க்கலாம். 2013 மே மாதம் அவர் இந்த வேலையைப் பெற்றிருக்கிறார்.

எம்.ஏ. ஆங்கிலம் பயின்ற குணவதி, பல்வேறு சிரமங்களுக்கு இடையே இந்த வேலையை பெற்றுள்ளார். அவ்வளவு சிரமங்களுக்கும் காரணம் அவர் திருநங்கை என்பதே. (அவர் குற்றம் அல்ல)

'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

"ஒரு வேலைக்காக நான் ஓடாத இடமில்லை. பார்க்காத நபர் இல்லை. மனு மேல் மனு என நீண்ட போராட்டத்திற்குப் பின்னரே இந்த வேலையைப் பெற்றேன்.

எனக்கு இந்த வேலை கிடைத்ததற்கு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வெங்கடாச்சலத்திற்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

அரசு மருத்துவமனையில் குழந்தை திருட்டுப் புகார் அதிகமாக வந்து கொண்டிருந்த நேரம் அது. அப்போதுதான், கலெக்டர் என்னை அழைத்து, தமிழ்நாடு ஊரக சுகாதார திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் எனக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பராமரிப்புப் பிரிவில் பாதுகாவலராக பணி ஒதுக்கப்படுவதாக கூறினார்.

அன்று முதல் இன்று வரை இங்கே இனிதே வேலை பார்க்கிறேன். ஏனென்றால் எனக்கு குழந்தைகள் என்றால் அவ்வளவு இஷ்டம். நான் இங்கு வந்த நாள் முதல் இந்த மருத்துவமனையில் உள்ள சக ஊழியர்கள் என்னை உறவுக்காரர் போலவே பார்க்கின்றனர்.

இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் நூற்றுக் கணக்கானோர் வருகின்றனர். பெரும்பாலோனோர் என்னை வித்தியாசமாக பார்ப்பதில்லை. ஆனால், ஒரு சிலர் என்னை பார்த்ததும் கிண்டலாக சிரிப்பதும், வெறுப்பாக முறைப்பதுமாக இருக்கின்றனர். சில நேரங்களில், மிகவும் தரக்குறைவாக என்னை விமர்சிப்பார்கள்.

அத்தகைய விமர்சனங்கள் என்னை காயப்படுத்தும். ஆனால், எவ்வளவு சிரமத்திற்குப் பிறகு இந்த வேலையை பெற்றிருக்கோம் என்பதை நினைக்கும்போது அந்த அவமான பேச்சுகளை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என தீர்மானித்துக் கொண்டேன்.

இனி, ஏளனப் பேச்சுகள் என்னை ஒன்றும் செய்யாது. என்னைப் போன்ற ஏராளமான திருநங்கைகள் இருக்கின்றனர். ஏளனங்களுக்கு அஞ்சி, அஞ்சியே அவர்கள் இழிவான தொழிலை தேர்ந்தெடுக்கின்றனர். என் துணிச்சல் மூலம் அவர்களுக்கு நான் ஒரு முன் உதாரணமாக இருக்க விரும்புகிறேன்" என்றார்.

நல்லதொரு குடும்பம்:

நான் என்னை திருநங்கையாக உணர்ந்தபோது, அதை தைரியமாக என் பெற்றோரிடம் எடுத்துரைத்தேன். அவர்களுக்கு முதலில் அது பேரதிர்ச்சியாக இருந்தது. பின்னர், நாளடைவில் என்னை புரிந்து கொண்டனர். என்னை ஏற்றுக்கொண்டதற்காக என் குடும்பமும் ஏளனத்துக்குள்ளானது. அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை. எனக்கு அவர்களிடம் இருந்தே அந்த பண்பு வந்தது. என் குடும்பம் போல் நல்லதொரு குடும்பம் என்னைப் போன்ற திருநங்கைகளுக்கு கிடைத்தால் யாரும் தவறான வழியில் செல்ல மாட்டார்கள் என கூறுகிறார் குணவதி.

இலக்கு:

எப்படியாவது ஒரு ஆசிரியர் ஆவதே தன் இலக்கு என கூறும் குணவதி. பி.எட். படிப்பிற்காக ஒரு தனியார் கல்வி நிறுவனத்தை அணுகியதாகவும் ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் வேதனைப்படுகிறார்.

ஆனால், எப்பாடுபட்டாவது பி.எட் படித்து என் லட்சியத்தை நிறைவேற்றுவேன் என உறுதிபட கூறுகிறார்.

திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று எச்.ஐ.வி. குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்கிறார். கூடவே, திருநங்கைகள் மீதான சமூகப் பார்வை மாறவும் குரல் கொடுக்கிறார், இந்த குணவதி.

-தமிழில் பாரதி ஆனந்த்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x