Published : 27 Feb 2015 10:38 AM
Last Updated : 27 Feb 2015 10:38 AM

எழுத்தாளரைக் கண்டித்து இரண்டாவது நாளாக கரூரில் சாலை மறியல்; பேருந்து கண்ணாடிகள் உடைப்பு: ஆதரித்துப் பேசியவர் வீடு முற்றுகை; போலீஸார் தடியடி

கரூரில் எழுத்தாளரைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். மேலும், எழுத் தாளருக்கு ஆதரவு தெரிவித்தவர் வீட்டை முற்றுகையிட்டுத் தாக்கினர். அவர்களைப் போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். இதைத்தொடர்ந்து 5-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் கல்வீசித் தாக்கப்பட்டன.

கரூர் அருகேயுள்ள புலியூரைச் சேர்ந்தவர் முருகேசன். எழுத்தாள ரான இவர், ‘பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்குண்டு’ என்ற பெயரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளார்.

இந்தப் புத்தகத்தில் ஒரு பிரிவினர் குறித்து மோசமாகக் குறிப்பிட்டுள்ளதாகப் புகார் தெரிவித்து, அப்பிரிவைச் சேர்ந்த சிலர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

புலியூர் காளியம்மன் கோயி லில் நேற்று முன்தினம் அப் பிரிவினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, சிலர் முருகேசன் வீட்டுக்குச் சென்று, அவரை காரில் கடத்திச் சென்றுள்ளனர். பின்னர், அவரைக் கடுமையாக தாக்கிவிட்டு, வழியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர். இதுகுறித்து பசுபதிபாளையம் போலீஸில் முருகேசன் புகார் அளித்தார். அவர் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒரு பிரிவினர் இரண்டாவது நாளாக நேற்றும் ஆலோசனை நடத்தினர். அதில் பங்கேற்றவர்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாகச் சென்று, எழுத்தாளர் மீது நடவடிக்கை கோரி ஆட்சியர் ச.ஜெயந்தியிடம் மனு அளித்தனர்.

பின்னர், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைச் சமாதானப்படுத்திய எஸ்.பி. ஜோஷிநிர்மல்குமார், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதற்கிடையில், எழுத்தாள ருக்கு ஆதரவாக ஊடகங்களில் கருத்து தெரிவித்த திருக்குறள் பேரவை நிர்வாகி மேலை.பழனியப்பன் வீட்டை சிலர் முற்றுகையிட்டு, கல்வீசித் தாக் கினர்.

இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். பின்னர் அவர்கள் கரூர் பேருந்து நிலையம், வையாபுரி நகர், புறவழிச் சாலை பகுதிகளில் பேருந்துகள் மீது கல் வீசித் தாக்கினர். இதில் 5-க்கும் மேற்பட்ட பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்தன. இது தொடர்பாக 10-க்கும் மேற்பட்டோர் மீது கரூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எழுத்தாளர் முருகேசன் கூறும்போது, “நான் எழுதியது திருநங்கை குறித்த கதை. சில தகவல்களை கற்பனை கலந்து எழுதியுள்ளேன். சாதி அபிமானமோ, எதிர்ப்போ எனக்கு கிடையாது. இதுகுறித்து என்னிடம் கேட்டபோது, நிபந்தனை யற்ற மன்னிப்பு கேட்டுக்கொள் வதாகத் தெரிவித்துள்ளேன்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x