Published : 24 Aug 2016 02:30 PM
Last Updated : 24 Aug 2016 02:30 PM

உள்ளாட்சித் தேர்தலை ஜனநாயகப் பூர்வமாக நடத்திட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் தீர்மானம்

உள்ளாட்சித் தேர்தலை ஜனநாயகப் பூர்வமாக நடத்த வேண்டும், பத்திரிகையாளர்களுக்கு கெடுபிடியை நீக்க வேண்டும் ஆகிய 2 தீர்மானங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

தீர்மானம் - 1: உள்ளாட்சித் தேர்தலை ஜனநாயகப் பூர்வமாக நடத்திடுக

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் மாதம் நடத்தி முடிக்கவேண்டியுள்ளது. அதிமுக அரசு தேர்தல் தயாரிப்புகள் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி முறையான தயாரிப்புகள் மேற்கொள்ளப்படாததால் இம்முறையும் தேர்தல் நேர்மையானதாக நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது அரசு நிர்வாகம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பயன்படுத்தப்பட்டதால், மிகக் குறைந்த அவகாசத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்பு மனு தாக்குதலில் இருந்தே அராஜக நடவடிக்கைகள் தொடங்கின. தனித்தொகுதிகள், பெண்கள் தொகுதிகள் அறிவிப்பு கூட வெளிப்படையாக இல்லை. பல இடங்களில் வன்முறை அரங்கேறியது. ஆளும் கட்சியினர் வாக்குப்பதிவு மையங்களுக்குள்ளேயே வன்முறையில் ஈடுபட்ட சம்பவங்களும் நடந்தன. அனைத்திற்கும் மேலாக வாக்கு எண்ணிக்கையின் போது தோல்வியடைந்த ஆளுங்கட்சியினர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்கள்.

இதுபோன்றே 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், தலைநகரிலேயே வன்முறை தாண்டவமாடியது. இந்த வன்முறைகள் குறித்து வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அப்போதைய மாநகராட்சி ஆணையரைக் கண்டித்ததுடன் 99 வார்டுகளில் மறு தேர்தலுக்கு உத்தரவிட்டது. மாநில தேர்தல்களை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டுமென எதிர்பார்க்கும் அதிமுகவும், திமுகவும் - உள்ளாட்சி தேர்தலை எப்படி நடத்துகின்றன என்பதையே மேற்கண்ட நிகழ்வுகள் காட்டுகின்றன.

உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் விபரம் குறித்த அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் மாற்றம் செய்ய வேண்டிய இட ஒதுக்கீடுகள் இப்போது வரை அறிவிக்கப்படவில்லை. தேர்தல் தயாரிப்புகள் குறித்து வெளிப்படைத் தன்மையின்றி ஆளுங்கட்சி மூடுமந்திரமாக செய்து வருகிறது.

கடந்த அதிமுக, திமுக ஆட்சிகளின் அனுபவங்களைப் பார்க்கும்போது, மீண்டும் ஒரு ஜனநாயகப் படுகொலைக்கு அதிமுக அரசு தயாராகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை உடனடியாக அறிவிப்பதுடன், 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலும், சுழற்சி முறையிலும், இட ஒதுக்கீட்டுத் தொகுதிகளை அறிவிப்பு செய்து - உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறையில் நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தீர்மானம் 2: சட்டப்பேரவை வளாகத்திற்குள் பத்திரிகையாளர்களுக்கு கெடுபிடியை நீக்குக

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற அனுமதி மறுக்கப்படுகிறது. சட்டமன்ற வளாகமே காவல்துறையின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு தேவையற்ற கெடுபிடிகள் செய்யப்படுகின்றன. இந்த நிலையில் ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான ஊடகத்துறை தங்களது கடமையை செய்யவிடாமல் தடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறதோ என்ற ஐயப்பாடு எழுகிறது.

சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள செய்தியாளர் அறைக்கு செல்வதற்கு கூட தேவையற்ற கெடுபிடி உருவாக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்கள் பேரவை வளாகத்திற்குள் செல்வதற்கும், வெளியே வருவதற்கும் கூட பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. அதுமட்டுமின்றி வழக்கமாக தலைவர்கள் செய்தியாளர்களை சந்திக்கும் 4-ம் எண் நுழைவு வாயில் அருகே நிற்கவும் கூட செய்தியாளர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்று சட்டப்பேரவையில் முதல்வர் பெருமிதம் பொங்க கூறுகிறார். ஆனால் சட்டப்பேரவை வளாகத்தில் கூட தேவையற்ற கெடுபிடிகள் நுழைக்கப்படுகின்றன. ஊடகவியலாளர்கள் தங்களது பணியை செவ்வனே செய்யும் வகையில் உறுதுணையாக இருக்க வேண்டிய அரசு எதிர்மறையாக நடந்து கொள்வது முறையல்ல. எனவே புதிதாக ஊடகவியலாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கெடுபிடிகளை உடனடியாக நீக்கிக் கொள்ள வேண்டும்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x