Published : 28 Sep 2016 12:13 PM
Last Updated : 28 Sep 2016 12:13 PM

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் கோவை அதிமுக தலைமை அலுவலகம் முற்றுகை

சுயேச்சையாக களம் இறங்கப்போவதாக அறிவிப்பு

*

கோவை மாநகராட்சியில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகள் தன் விண்ணப்பத்தை கொடுக்கிறார்களோ இல்லையோ, ‘எங்கள் வார்டில் குறிப்பிட்ட நிர்வாகிக்கு போட்டியிட வாய்ப்பு தரவேண்டாம்’ என்று தெரிவித்தே அதிகம் பேர் விண்ணப்பம் அளித்திருந்தனர். மாநகராட்சிக்கு வேட்பாளர் பட்டியல் அறிவித்த நிலையில் இப்பிரச்சினை எழுந்துள்ளது.

அதிருப்தி வேட்பாளர்கள் மீது போட்டி ஆட்கள் மேலிடத்துக்கு மனுக்களை அனுப்பத் தொடங்கி விட்டனர் என்பதை ‘தி இந்து’-வில் பதிவு செய்திருந்தோம். தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

வேட்பாளர்களை மாற்றக்கோரி நேற்று முன்தினம் இரவு 50-க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கோவை மாநகராட்சியின் 69, 71 மற்றும் 73 வார்டுகளைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சாவித்திரி, கோமதி நாயகம், ரேஸ்கோர்ஸ் ரகுநாத் ரதி போன்றவர்கள் தலைமையில் இந்த முற்றுகைப் போராட்டம் நடந்தது. 20-க்கும் மேற்பட்ட போலீஸார் விரைந்து சென்று, போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். எனினும் சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்களை, கோவை தெற்கு எம்எல்ஏ அம்மன் அர்ச்சுனன் சமாதானப்படுத்தினார். ஆனால், ‘அமைச்சர் வராமல், மாவட்டச் செயலாளர் வராமல் இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம்’ என்றனர்.

உள்ளாட்சித் தேர்தலில் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு ‘சீட்’ கொடுக்காமல் புதிதாக வந்தவர்களுக்கு போட்டியிட வாய்ப்பளித்துள்ளதாக அவர்கள் புகார் தெரிவித்து பின்னர், கலைந்து சென்றனர். 2-வது நாளாக நேற்றும் முற்றுகைப் போராட்டத்தை நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முந்தைய நாளை விட கூட்டம் மிகுதியாக காணப்பட்டது.

கோவை மாநகராட்சியில் இராமநாதபுரம் பகுதிக்கு உட்பட்ட 68, 70, 71, 73, 75 ஆகிய வார்டுகளில் அறிவித்துள்ள வேட்பாளர்களை மாற்ற கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்ட காலமாக அதிமுகவுக்காக உழைத்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் உள்ளூர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர் ஆகியோர் ஏமாற்றிவிட்டதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் தெரிவித்தனர்.

வெற்றி பாதிக்கும்?

வேட்பாளர்களை கட்சித் தலைமை மறுபரிசீலனை செய்யவில்லை என்றால் அதிமுகவின் வெற்றிவாய்ப்பு பாதிக்கப்படும். கட்சிக்காக பாடுபட்டவர்களுக்கு வாய்ப்பளிக்க கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

கட்சியில் நீண்டகாலமாக உழைத்தவர்களுக்கு ‘சீட்’ கொடுக்காமல் வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு 49-வது வார்டில் சீட் வழங்கி இருப்பதாகக் கூறி இரத்தினபுரி பகுதியில் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக அதிமுக கட்சி தலைமை அலுவலகம் மற்றும் இரத்தினபுரி பகுதிகளில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் கூறும்போது, ‘தொடர்ந்து ஒருத்தருக்கே ‘சீட்’ வழங்குவது, மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு ‘சீட்’ வழங்குவது, திமுகவினரின் உறவினர்களுக்கு ‘சீட்’ வழங்குவது என நிறைய குளறுபடிகள் இந்த பட்டியலில் நடந்திருக்கிறது. இவர்கள் போட்டியிட்டால் கட்சி தோற்பது உறுதி. வேட்பாளர்களை மாற்றி அறிவிக்காமல் இருந்தால், அந்த வார்டுகளில் சுயேச்சையாக களம் இறங்குவோம்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x