Published : 26 Apr 2015 01:29 PM
Last Updated : 26 Apr 2015 01:29 PM

உலோக அரிமானத்தால் ஆண்டுக்கு ரூ. 2,500 கோடி இழப்பு: தாமரை இலை கற்றுத் தந்த தடுப்பு தொழில்நுட்பம்

உலோக அரிமானத்தால் உலக நாடுகளில் ஆண்டுக்கு ரூ.2,500 கோடியும், இந்தியாவில் ரூ.500 கோடியும் இழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க, தாமரை இலையில் தண்ணீர் நிற்காமல் வழிந்தோடுவதை முன்மாதிரியாகக் கொண்டு, திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகம் புதிய தொழில் நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது.

சுற்றுச்சூழல் மாசு, நீர்த்தன்மை யால் உலோகங்களில் அரிமானம் ஏற்படுகிறது. இதை தடுக்க, காந்தி கிராம பல்கலைக்கழக வேதியியல் துறை, காரைக்குடி மைய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை கூட்டாக ஆய்வு செய்து புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளன.

இது குறித்து வேதியியல் துறை பேராசிரியர் சேதுராமன் கூறியதாவது:

பேராசிரியர் சேதுராமன்

‘‘உலோக அரிமானத்தால் உலக நாடுகளில் ஆண்டுக்கு ரூ.2,500 கோடியும், இந்தியாவில் ரூ.500 கோடி இழப்பு ஏற்படுகிறது. வாகன விபத்துகளும், இந்தியாவில் அதிகம் ஏற்பட உலோக அரிமானம் காரணமாகிறது. பொதுவாக விழிப்புணர்வு இல்லாததே, இதுபோன்ற இழப்புக்கு முக்கிய காரணம்.

மின்துறை டிரான்ஸ்பார்மர்கள், ரசாயனத் தொழிற்சாலை உதிரி பாகங்கள், கனரக வாகன உலோக உதிரி பாகங்கள் அதிகளவு அரிமானத்துக்குட்படுகின்றன. இந்த பொருளாதார இழப்பையும், ஏற்படும் விபத்தையும் இயல்பாக தடுக்க, ஆராய்ச்சியாளர்கள் உலகம் முழுவதும் உலோக அரிமானத்தைத் தடுக்கும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்கும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

உலோகங்களின் மீது பூச்சுகளை உபயோகிப்பதன் மூலமும், மேற்பரப்பின் வேதித்தன்மையை மாற்றுவதன் மூலமும் அரிமானத்தில் இருந்து உலோகங்களை பாதுகாக்க முடியும். ஆனால், அரிமான தடுப்பு தொழில்நுட்பங் களைப் பயன்படுத்த அதிக செலவு ஏற்படாமலும், நச்சுத்தன்மையை ஏற்படுத்தாமலும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்க வேண்டும்.

அதற்காக, மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் வேதிப் பொருட்களைக் கொண்டு, `அதி நீர்விலக்கு பூச்சு’ என்ற ஒருவகை தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளோம். தாமரை இலையின் மேற்பரப்பில் வேதி யியல் தன்மை கொண்ட மெழுகு

இருப்பதால், தண்ணீர் நொடிப் பொழுதுகூட இலையில் நிற்காமல் வழிந்து விடுகிறது. ஒருவகை பட்டாம் பூச்சிகளும் இதுபோன்ற நீர்விலக்கு தன்மையைப் பெற்றுள்ளன. இயற்கையில் காணப்படும் இத்தகைய நிகழ்வுகளை முன் உதாரணமாகக் கொண்டு, உலோக அரிமானத்தை தடுக்கும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டோம்.

காப்பர் மற்றும் அலுமினியம் உலோகங் களின் மீது சிஸ்டியமின் மற்றும் ஸ்டியரிக் அமிலம் என்ற வேதியியல் பொருட்களை மெழுகு கரி சேர்த்து மிகச் சிறந்த அதி நீர் விலக்கு பூச்சுகளைக் கண்டு பிடித்துள்ளோம். இந்த பூச்சுகள் 150 டிகிரிக்கும் மேலான நீர் தொடர்பு கோணத்தைப் பெற்றிருப்பதால் உலோகங்களின் அரிமானத்தைத் தடுக்கிறது. அரிமானத்தை தடுக்கும் இந்த அதி நீர் விலக்கு பூச்சுகளை, தற்போது பரவலாகப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இத்தகைய பூச்சுகள், வாகனங்களின் கண் ணாடிகளில் நீர் விழுந்தாலும் ஒட்டாமல் விலகி ஓடச் செய்கின்றன.

டிரான்ஸ்பார்மர்கள், தொழிற் சாலை உலோக உதிரி பாகங் களுடைய சுய தூய்மை பண்பையும் இந்த பூச்சுகள் காக்கின்றன. இந்த கண்டுபிடிப்பு வெளிநாடுகளின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x