Published : 01 Mar 2014 01:45 PM
Last Updated : 01 Mar 2014 01:45 PM

உதகை ஹெச்.பி.எஃப். தொழிற்சாலையை மூட முடிவு- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நீலகிரி மாவட்டத்திலுள்ள ஒரே பொதுத் துறை நிறுவனமும், தெற்காசியாவில் அமைக்கப்பட்ட ஒரே ஃபிலிம் தொழிற்சாலையுமான இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம்ஸ் (எச்.பி.எப்.) ஆலையை மூட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தொழிலாளர்கள் விருப்பு ஓய்வு திட்டத்துக்கு ரூ.181.54 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதால் ஆலை மூடப்படுவது உறுதியாகியுள்ளது.

உதகையில் 1967ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் எச்.பி.எப்., தொழிற்சாலை திறக்கப்பட்டது. இதில், 5000 தொழிலாளர்கள் நேரடியாகவும், 1 லட்சம் பேர் மறைமுகமாகவும் பயனடைந்து வந்தனர். ஆலையை விரிவுப்படுத்த எண்ணிய மத்திய அரசு 500 கோடி ரூபாயில் புதிய எக்ஸ்-ரே தொழிற்சாலையை, உதகை இந்து நகர் பகுதியில் அமைத்து, மேலும் பல தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுத்தது.

கடந்த 1991ம் ஆண்டு புதிய பொருளாதாரக் கொள்கையால் அன்னிய முதலீட்டார்களும், தனியார் பிலிம் நிறுவனங்களும் இந்திய சந்தையில் காலடி எடுத்து வைத்ததால், ஆலை நலிவுற்றது. ஆலையில் பணிபுரிந்து வந்த 5400 தொழிலாளர்களை படிப்படி யாக குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. தற்போது, 660 தொழிலாளர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களுக்கு சம்பளமும் வழங்கப்படுவதில்லை. ஆலையை புனரமைக்க வேண்டி சாகும் வரை போராட்டம், பிச்சை எடுக்கும் போராட்டம் என பல போராட்டங்களை நடத்தினர்.

விருப்ப ஓய்வுக்கு பரிந்துரை

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற பொதுத் துறை நிறுவனங்களுக்கான மறுசீரமைப்பு வாரியக் கூட்டத்தில், இந்த ஆலையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் விருப்ப ஓய்வு வழங்கவும், அதற்காக 2007-ஆம் ஆண்டின் ஊதிய மறுசீரமைப்பின்படி இத் தொகை வழங்கப்படுமெனவும், இதற்கான இறுதி அறிவிப்பை நீதிமன்றம் வெளியிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அனைத்து ஆவணங்களும் கடந்த 14-ஆம் தேதி மத்திய கனரகத் தொழில் துறை அமைச்சகத்தில் இருந்து, அமைச்சரவை மற்றும் பிரதமர் அலுவலகத்துக்கு கொடுக்கப் பட்டது.

தொழிற்சாலையை மூட அச்சாரம்

இச் சூழலில், மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய கடைசி மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், எச்.பி.எப். ஆலையில் பணிபுரியும் 660 தொழிலாளர்களுக்கு 2007ம் ஆண்டு சம்பள விகிதத்தில் விருப்பு ஓய்வு திட்டம் அமலாக்கவும், ரூ.181.54 கோடி ஒதுக்கீடு செய்யவும் ஒப்புதல் அளி்க்கப்பட்டது. இதை, எச்.பி.எப். தொழிற்சாலை அதிகாரிகள் சங்கம் வரவேற்றுள்ளது.

அதிகாரிகள் சங்க பொதுச் செயலர் உமேஷ் கூறுகையில், மத்திய அமைச்சரவையின் முடிவு வரவேற்கத்தக்கது. இதனால் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத் துக்கான தொகை கிடைக்க வழியுண்டு.

மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை சந்தித்து விருப்ப ஓய்வு திட்டத்துக்கான நிதியை அதிகரிக்க வலியுறுத்தினோம். அதனடிப்படையில் பட்ஜெட்டில் ரூ.156 கோடியிலிருந்து ரூ.181.54 கோடியாக நிதி உயர்த்தப்பட்டது. ஏப்ரல் மாதத்திலிருந்து திட்டம் அமலாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதனால், தொழிலாளர் கள் பயன்பெறுவர் என்றார்.

விருப்பு ஓய்வு திட்டத்துக்கு நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள் ளதால், ஆலை மூடப்படுவது உறுதியாகியுள்ளது.

எச்.பி.எப்., தொழிற்சாலை வளாகத்தில் மருத்துவ கல்லூரி துவக்க மாநில அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x