Published : 28 Aug 2014 08:14 AM
Last Updated : 28 Aug 2014 08:14 AM

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசால் தீர்வு கிடைக்கும்: தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் நம்பிக்கை

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசால் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்று இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தம் நம்பிக்கை தெரிவித் துள்ளார்.

இலங்கை தமிழ் தேசிய கூட்ட மைப்பின் தலைவரும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பந்தம், பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் இல.கணேசன் ஆகியோரை புதன் கிழமை சந்தித்தார். சந்திப்புக்கு பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்க கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்தேன். முன்னதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜையும் சந்தித்தேன்.

இலங்கையில் சரித்திர ரீதியாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசித்துவரும் தமிழ் பேசும் மக்களுக்கு ஒருமித்த இலங்கையில் நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும். தமிழர்கள், தாங்கள் பிறந்த மண்ணில் நிரந்தரமாக வாழ்வதற்கான உரிமைபெறும் வகையில் அப்பகு தியில் அமைதி ஏற்பட வேண்டும்.

அதற்கு அங்கு 13-வது அரசியல் சாசன திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். சிங்களர்களை தமிழர் பகுதியில் குடியமர்த்துவதை தடுக்க வேண்டும். அப்பகுதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருப் பதை திரும்பப் பெற வேண்டும். இலங்கைத் தமிழர் நலன் கருதி இலங்கை அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இதை இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கும், இலங்கை அரசுக்கும் இணைப்பு பாலமாக இருந்து இந்திய அரசு பெற்றுத் தர வேண்டும்.

ஏற்கெனவே இணைந்திருந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங் களை இணைத்து ஒரே மாநிலமாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இதைத்தான் பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஆகியோரிடம் கோரிக்கையாக வைத்தேன். இந்த சந்திப்பு குறித்து தமிழக பாஜக தலைவர்களை சந்தித்து தெரிவித்தேன்.

இலங்கை அதிபர் ராஜபக்ச வுடனான பேச்சுவார்த்தையின் போது, இலங்கையில் போர்நிறுத் தம் ஏற்பட்டு 5 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இலங்கைத் தமிழர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இது நல்ல தொடக்கம். அதனால் இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்திய அரசால் தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது. இந்த பயணத்தில் தமிழகத்தில் வேறு யாரையும் சந்திக்கும் திட்டம் இல்லை என்றார் அவர்.

ரஜினியை வரவேற்போம்

நடிகர் ரஜினி பாஜகவில் இணைவாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்த ரராஜன் கூறியதாவது: ரஜினி திரைப்பட நடிகர் மட்டுமல்ல. அவர் ஒரு தேசியவாதி. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, நாட்டு நலன் கருதி நதிகள் இணைப்பு திட்டத்தை அறிவித்தபோது, அதை மனப்பூர்வமாக ஆதரித்தவர் ரஜினி. அவர் பாஜகவில் இணைந்தால் நிச்சயம் வரவேற்போம் என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x