Last Updated : 23 Nov, 2014 04:28 PM

 

Published : 23 Nov 2014 04:28 PM
Last Updated : 23 Nov 2014 04:28 PM

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 14 பேர் சிறைப்பிடிப்பு

கச்சத்தீவு அருகே சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 14 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை சிறைப்பிடித்தனர்.

ராமேசுவரம் மற்றும் ஜெகதாப்பட்டிணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 1000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்குச் சென்றனர்.

சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 'இந்தப் பகுதியில் மீன்பிடிக்கக்கூடாது' என எச்சரித்ததால் 10-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் தங்களின் வலைகளை கடலிலேயே போட்டு விட்டு கரை திரும்பினர்.

இதில் டீசல் தீர்ந்து போனதால் நம்புசேகரன் என்பவரது படகு கச்சத்தீவு அருகே நடுக்கடலில் நின்று கொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை ரோந்து வந்து இலங்கை கடற்படையினர் விசைப்படகை கைப்பற்றி, அதிலிருந்த களஞ்சியம், ஜான்போஸ்கோ, சரவணன், சேவியர் ஆகிய நான்கு பேரை சிறைப்பிடித்துள்ளனர்.

மேலும், ஜெகதாப்பட்டிணத்தை சார்ந்த இரண்டு விசைப்படகுகளையும் சிறைப்பிடித்து, அதிலிருந்த 10 மீனவர்கள் என மொத்தம் 14 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர். சிறைப்பிடிக்கப்பட்ட 14 மீனவர்களையும் தலைமன்னார் மற்றும் காங்கேசன்துறைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.

கடந்த வாரம் தமிழ்நாட்டை சார்ந்த மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் "சர்வதேச கடல் எல்லையை மீனவப் பேச்சுவார்த்தை நடைபெறும் வரையிலும் கடக்க வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க தாங்கள் யாரும் எல்லை தாண்டவில்லை என கரை திரும்பிய ராமேசுவரம் மீனவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

முன்னதாக, யாழ்பாணம் சிறைச்சாலையில் 24 தமிழக மீனவர்களும், கடந்த ஐந்து மாதங்களில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 82 படகுகள் விடுவிக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.

தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 5 தங்கச்சிமடம் மீனவர்கள் வெள்ளிக்கிழமை தாயகம் திரும்பியுள்ள நிலையில், 14 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்திருப்பது தமிழக மீனவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x