Published : 26 Apr 2017 04:55 PM
Last Updated : 26 Apr 2017 04:55 PM

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் மணற் சிற்பம்

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 143 படகுகளை மீட்க வேண்டும் என வலியுறுத்தி ராமேசுவரம் கடற்கரையில் மணற் சிற்பம் வரைந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரால் இரண்டரை ஆண்டுகளில் 143 படகுகளை கைப்பற்றி 950க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். மீனவர்களின் பல்வேறு கட்டப் போராட்டங்களுக்கு பின்னர் மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகளினால் அவ்வப்போது கைது செய்யப்பட்ட மீனவர்கள் இரண்டு மாத சிறைவாசத்திற்கு பின்னர் விடுதலை செய்யப்படுகின்றனர். தற்போது 143 படகுகள் மட்டும் விடுதலை விடுவிக்கப்படவில்லை.

இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிக்க வலியுறுத்தி புதன்கிழமை ராமேசுவரம் கடற்கரையில் மணற் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர் சரவணன். பொது மக்கள் அதிகம் கூடுமிடங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மணற் சிற்பங்களை வரைந்து வருபவர். சித்திரை அமாவாசை அன்று ராமேசுவரத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடற்கரையில் நீராட வரும் தருணத்தில் தமிழக மீனவர்களின் படகுகளை மீட்போம், தமிழக விவசாயிகளை மீட்போம் என்பதை விளக்கும் வகையிலும் மணல் சிற்பம் உருவாக்கி உள்ளார்.

மணற் சிற்பம் குறித்து சரவணன் கூறியதாவது, ''அமாவாசை தினம் அன்று தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதுமிலிருந்து பக்தர்கள் புனித நீராடுவதற்காக ராமேசுவரம் வருகை தருவார்கள். இந்த தருணத்தில் தமிழக மீனவர்களின் படகுகளை மீட்பதற்காகவும், தமிழக விவசாயிகளை காக்கும் அவசியத்தை மணல் சிற்பம் உருவாக்கி உள்ளேன். இதன் மூலம் தமிழக மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கான ஆதரவு வெளி மாநில மக்களிடமும் ஏற்படும்'' என்று நம்பிக்கை தெரிவித்தார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x