Published : 26 Apr 2017 03:32 PM
Last Updated : 26 Apr 2017 03:32 PM

இந்தி கற்பதால் என்ன பிரச்சினை வந்து விடப்போகிறது?- எஸ்.வி.சேகர்

தமிழக மாணவர்கள் இந்தி கற்பதால் என்ன பிரச்சினை வந்து விடப்போகிறது? இது நடிகர் எஸ்விசேகர் முன்வைக்கும் வாதம்.

தமிழக அரசியல் களம் கைது, பேச்சுவார்த்தை என்று விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் எப்போதும் தனக்கான பாணியில் அரசியல் போக்குகளை விமர்சனம் செய்யும் எஸ்.வி.சேகர் இன்றைய நடப்புகள் குறித்து நாம் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.

1. தினகரன் கைது, இரு அணிகள் பேச்சுவார்த்தைன்னு நடக்கும் நிகழ்வுகளை எப்படி பார்க்கிறீர்கள்?

ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அவர் ஆணைப்படி என்று பேசியவர்கள் தற்போது பிரிந்து நிற்கிறார்கள். ஆனால் இவர்கள் பிரிவது ஆனாலும் சரி சேர்வதானாலும் சரி அது எல்லாமே 100 % சுயநலம் தான். பதவி பணம் படுத்தும் பாடு என்பதைத் தாண்டி, இதில் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. அம்மாவின் அரசு என்கிறார்களே, நான் இவர்களை கேட்கிறேன், எந்த ஊழல் குற்றச்சாட்டுக்கும் இறுதி வரை ஆளாகாமல், தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்த எம்ஜிஆரின் வழியில் ஆட்சி என்று ஏன் சொல்வதில்லை. காரணம் அப்போதைக்கு யார் அதிகாரத்தில் இருக்கிறார்களோ அவர்களை துதி பாடுவதே இவர்களின் வழக்கம். அதிமுக என்கிற கட்சி அழிவை நோக்கி நகர்ந்து வருகிறது.

2. அதிக வாக்கு வங்கி, தொண்டர் பலம் என்று உள்ள அதிமுக அழியும் என்று எதை வைத்து சொல்கிறீர்கள் ?

நான் அதிமுக மட்டும் அழியும் என்று சொல்ல மாட்டேன் திமுகவும் சேர்த்து தான் அழிவின் பாதையில் இருக்கிறது என்று சொல்கிறேன்.

3. அதிமுகவில் உட்கட்சி பிரச்சினை, முறையான தலைமை இல்லை இப்படி சிக்கல்கள் இருக்கின்றன, ஆனால் திமுகவில் அப்படி எதுவும் இல்லாத போது எதை வைத்து திமுக அழியும் என்கிறீர்கள் ?

இரண்டும் அழியும் என்று சொன்னாலும், தற்போது திமுக தான் மக்கள் முன் உள்ள அடுத்த வாய்ப்பு. ஆனால் காலப் போக்கில் அங்கும் சிக்கல்கள் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. 2 ஜி வழக்கின் தீர்ப்பும் திமுகவுக்குள் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறேன்.

4. அப்படி உங்கள் கூற்றுப்படி திமுக அதிமுகவுக்கு வாய்ப்பு குறைகிறது என்றால் அந்த இடத்திற்கு பாஜக வரும் என்கிறீர்களா ?

பாஜக தமிழகத்தில் வருவதற்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதற்கு மிக கடுமையாக உழைக்க வேண்டும், பெரிய அளவிலான செயல் திட்டங்களை வேகப்படுத்தி செயல்படுத்திட வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை இந்தி எதிர்ப்பு, கடவுள் மறுப்பு போன்றவை மிக ஆழமாக பரவியுள்ள விஷயங்கள் இதன் தாக்கத்தை தாண்டி பாஜக வர வேண்டும் என்றால் அதற்கு நான் சொன்னது போல கடுமையான முயற்சிகளை செய்ய வேண்டும்.

5. இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் மீண்டும் வெடிக்கும் நிலை தமிழகத்தில் உள்ளதே?

ஆம். திமுக அதை முன் எடுத்துள்ளது. ஆனால் நான் கேட்பதெல்லாம், தமிழகத்தை தவிர பிற தென் இந்திய மாநிலங்களில் எல்லாம் இந்தி பேசுகிறார்கள், புழக்கத்தில் உள்ளது. ஆனால் நாம் மட்டும் 4 தலைமுறைகளாக அதை கற்காமல் இருக்கிறோம். மாணவர்கள் இந்தி கற்பதால் என்ன பிரச்சினை வந்து விடப்போகிறது? அதுவும் ஒரு மொழி என்று நாம் ஏன் ஏற்க கூடாது? மேலும் இந்தி திணிப்பு மட்டுமல்ல விவசாய பிரச்சினை என எதை எடுத்தாலும் மோடியை திட்டுவதற்கு ஒரு கூட்டம் இங்கு இருக்கிறது. மோடியே அடிப்படையில் கடலை சாகுபடி செய்யும் விவசாயி என்பதை இங்கு எத்தனை பேருக்க தெரியும், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது நடைபெற்ற போராட்டங்கள் அனைத்திற்கும் வந்து செவி மடுத்து குரல்களை கேட்டாரா ? மோடி எதை செய்தாலும் எதிர்க்க இங்கு ஒரு கூட்டம் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x