Published : 29 Aug 2014 11:24 AM
Last Updated : 29 Aug 2014 11:24 AM

இதயம் இடம் மாறி இருந்தவருக்கு வால்வு மாற்று அறுவை சிகிச்சை - நாட்டில் முதல்முறை: சென்னை ஜி.ஹெச். மருத்துவர்கள் சாதனை

இதயம் இடம் மாறி இருந்த தொழி லாளிக்கு இந்திய மருத்துவ வரலாற்றில் முதல் முறையாக வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்து சென்னை அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை சார்பில் செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடந்தது. இதில் மருத்துவமனை தலைவர் அ.விமலா, இதய அறுவை சிகிச்சை துறை தலைவர் கே. ராஜா வெங்கடேஷ் கலந்துகொண்டனர். இதய அறுவை சிகிச்சை துறை மருத்துவர் பா.மாரியப்பன் பேசியதாவது:

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி நாகராஜ். கடந்த பல ஆண்டுகளாக நுரையீரலில் நீர் கோர்த்திருந்ததால் மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். பாதிப்பு முற்றி, மூச்சுத் திணறல் அதிகமானதால் கடந்த பிப்ரவரியில் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு வந்தார்.

50 ஆயிரம் பேரில் ஒருவர்..

அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. பொதுவாக எல்லோ ருக்கும் இதயம் இடதுபுறத்தில் இருக்கும். அவருக்கு இதயம் வலது புறத்திலும், கல்லீரல் வழக்கத்துக்கு மாறாக இடதுபுறத்திலும் இருந்தது. இதுபோல மற்ற உறுப்புகளும் இடம் மாறி எதிர்ப்புறத்திலேயே அமைந்தி ருந்தன. 50 ஆயிரம் பேரில் ஒருவருக்கு இப்படி இருக்கும்.

நாகராஜின் இதயத்தில் ரத்த வால்வு களான ஈரிதழ் (mitral) மற்றும் மூவிதழ் (aortic) என்ற ரத்தத்தை சுத்திகரிக்கும் வால்வுகள் மோசமாக பழுதடைந்து பாதிக்கப்பட்டிருந்ததும் பரிசோதனையில் தெரியவந்தது.

இதேபோல வலதுபுறத்தில் இதயம் அமைந்து, அதில் 2 வால்வு குறை பாடுகளுடன் இருந்த துருக்கி நாட்டை சேர்ந்த ஒருவருக்கு ஏற்கெனவே இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இந்திய மருத்துவ வரலாற்றில் அத்தகைய அறுவை சிகிச்சை நடைபெற்றதில்லை.

3 மணி நேர போராட்டம்

முதல் முறையாக கடந்த மே மாதம் இந்த சிக்கலான இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை அரசு பொது மருத்துவமனையில் செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை நிபுணர்கள் 3 பேர், மயக்கவியல் நிபுணர் ஒருவர் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் உட்பட 15 பேர் கொண்ட குழுவினர் 3 மணி நேரம் போராடி மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.

தனியார் மருத்துவமனையில் இந்த வகை அறுவை சிகிச்சைக்கு ரூ. 5 லட்சம் வரை செலவு ஆகும். அரசு மருத்துவ மனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு மருத்துவர் மாரியப்பன் கூறினார்.

அறுவை சிகிச்சை முடிந்து 3 மாதங்கள் வரை நாகராஜ் தொடர் மருத்து வக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருந்தார். தற்போது நல்ல முன்னேற்றம் காணப்படுவதால், டிஸ்சார்ஜ் செய்யப் பட்டு சொந்த ஊருக்குச் செல்லவுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x