Published : 02 Oct 2014 02:50 PM
Last Updated : 02 Oct 2014 02:50 PM

இசை, நடனத்தை இழக்கும் இனம் அடிமைப்படும்: திரைப்பட பாடலாசிரியர் அறிவுமதி பேச்சு

எந்த இனம் இசை, நடனம் ஆகியவற்றை இழக்கிறதோ அந்த இனம் அடிமைப்பட்டுத்தான் கிடக்கும் என திரைப்பட பாடலாசிரியர் அறிவுமதி தெரிவித்தார்.

தேசிய ரத்த தான விழாவை முன்னிட்டு புதன்கிழமை மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் ரத்த தானம் வழங்கியவர்களைக் கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்த ஆண்டில் அதிக ரத்த தானம் செய்த கல்வி நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவன உறுப்பினர்களுக்கு சினிமா பாடலாசிரியர் அறிவுமதி விருதுகளை வழங்கினார். மருத்துவமனையின் மருந்தியல் துறை தலைவர் பி.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.

நிகழ்ச்சியில் அறிவுமதி பேசியது: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இனக்குழுவும் தன்னுடைய மொழியை பேசியும், அவர்கள் உணவை உட்கொண்டும் இருக்கும் வரைதான் உலகின் அழகான நாடாக இருக்கும். அனைத்து மக்களுக்குமான அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும். தாய் மொழிக்குத்தான் பன்முக தன்மையும், சிந்திக்கும் தன்மையும் உண்டு. கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மக்களிடம் கவிஞர்களை மதிக்கும் பண்பு உள்ளது.

ஆனால், தமிழகத்தைப் பொருத்தவரை பாடலாசிரியர்களுக்கு இருக்கும் மரியாதை கவிஞர்களுக்கு இல்லை. எந்த ஓர் இனம் இசையையும், நடனத்தையும் இழந்துவிடுகிறதோ அந்த இனம் அடிமைப்பட்டுத்தான் கிடக்கும். ஒரு இசைப் பள்ளியை திறந்தால் 10 மனநோய் மருத்துவமனைகளை மூடிவிடலாம். 2 ஆடல் பள்ளிகளை திறந்தால் 200 பொது மருத்துவமனைகளை மூடிவிடலாம் என்றார்.

மருத்துவர் காசி விஸ்வநாதன், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி துணை தலைவர் ஜோஸ், மருத்துவர் சம்பத்குமார் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x