Published : 29 Aug 2014 01:18 PM
Last Updated : 29 Aug 2014 01:18 PM

ஆளுங்கட்சியின் அராஜகங்களை கண்டித்து உள்ளாட்சி இடைத் தேர்தலை புறக்கணிக்க தி.மு.க. முடிவு: கருணாநிதி அறிவிப்பு

தமிழகத்தில் நடக்க உள்ள உள்ளாட்சி இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

வேட்பாளரை தேர்தெடுக்க எதிர்க்கட்சிகளுக்கு போதிய நேரம் வழங்கப்படாதது உள்பட ஆளுங்கட்சியின் அராஜகங்களை கண்டித்து தேர்தலை புறக்கணிப்பதாக கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்..

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: " கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி மேயர் பதவி உட்பட, ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தல் செப்டம்பர் 18-ம் தேதி அன்று நடைபெறும் என்றும், அதற்கான மனு தாக்கல், தேர்தல் அறிவிக்கப்பட்ட 28ஆம் தேதியன்றே தொடங்கும் என்றும் மனு தாக்கல் செய்ய இறுதி நாள் 4-9-2014 என்றும் மாநிலத் தேர்தல் ஆணையம் நேற்றையதினம் திடீரென அறிவித்துள்ளது.

தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்ய 28ஆம் தேதி முதல் துவக்கம் என்று 29ஆம் தேதிய நாளேடுகளில் வெளிவருகின்ற இந்த ஒன்றே இந்த ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல்கள் எவ்வாறு நடைபெறும் என்பதற்குத் தக்க உதாரணமாகும்.

அது மாத்திரமல்ல; எதிர்க்கட்சிகள் சார்பில் இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை எப்போது அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள், எப்போது அறிவிப்பார்கள் என்பதற்கே நேரம் கொடுக்காமல், இவ்வாறு மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மனு தாக்கல் செய்ய இறுதி நாள் 4-9-2014 என்கிற போது, மற்ற எதிர்க்கட்சிகள் அங்கே போட்டியிட வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க நேரம் இருக்கிறதா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

சட்டப் பேரவைக் கூட்டம் முடிந்த பிறகுகூட, கடந்த ஒரு வார காலமாக அன்றாடம் முதல் அமைச்சர் உள்ளாட்சிகளுக்கு பல கோடி ரூபாயில் பல திட்டங்களை நிறைவேற்றப் போவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

உதாரணமாக, தற்போது தேர்தல் நடைபெறவுள்ள கோவை மாநகராட்சிக்கு 2,377 கோடி ரூபாய்க்கான திட்டங்களும், தூத்துக்குடி, நெல்லை மாநகராட்சிகளுக்கு 800 கோடி ரூபாயில் பாதாள சாக்கடைத் திட்டங்களும் நிறைவேற்றப்படுமென்று முதல் அமைச்சர் அறிவித்துள்ளார்.

அவசர அவசரமாக பல கோடி ரூபாய்க்கு தேர்தல் நடைபெறவிருக்கின்ற மாநகராட்சிகளுக்கு திட்டங்களை முதல் அமைச்சர் அறிவிப்பது முறை தானா? இது தேர்தல் விதிகளுக்கு உட்பட்டது தானா என்பதை மாநிலத் தேர்தல் ஆணையம் தான் விளக்க வேண்டும்.

ஆளுங்கட்சியின் அராஜகங்கள், பல கோடி ரூபாய்க்கு பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிற விதிமுறை மீறல்கள், தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை குறிப்பிட்ட சில இடங்களுக்கு மாற்றுதல், வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு போதிய நேரம் எதிர்க்கட்சிகளுக்கு வழங்காமல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள கொடுமை ஆகியவற்றைக் கண்டிக்கின்ற வகையில், நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்ற இடைத் தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகம் கலந்து கொள்வதில்லை என்றும், புறக்கணிப்பது என்றும் முடிவு செய்து அறிவிக்கின்றது" .இவ்வாறு கருணாநிதி விளக்கமளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x