Published : 26 May 2015 06:19 PM
Last Updated : 26 May 2015 06:19 PM

ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஜூன் 27-ல் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு - ஜெயலலிதா போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பால் பரபரப்பு

சென்னை ஆர்.கே.நகர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு ஜூன் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 3-ம் தேதி தொடங்குகிறது. முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுவார் என்பதால் இந்த இடைத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தமிழகத்தின் ஆர்.கே.நகர் உட்பட 5 மாநிலங்களில் காலியாக உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஜூன் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் நேற்று மாலை அறிவித்தது. திரிபுராவில் 2 (பிரதாப்கர் - தனி, சுர்மா - தனி), தமிழ்நாடு (டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்), கேரளம் (அருவிக்கரா), மத்தியப் பிரதேசம் (கரோத்), மேகாலயா (சாக்பாட் - தனி) ஆகிய மாநிலங்களில் தலா ஒன்று என மொத்தம் 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 3-ம் தேதி தொடங்கி 10-ம் தேதி வரை நடக்கிறது. ஜூன் 11-ல் வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. மனுக்களை வாபஸ் பெற 13-ம் தேதி கடைசி நாளாகும். ஜூன் 27-ம் தேதி சனிக்கிழமை காலை 8 முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும். வாக்குகள் 30-ம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி முதல்வர் மற்றும் எம்எல்ஏ பதவிகளை ஜெயலலிதா இழந்தார். ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உட்பட 4 பேரையும் விடுதலை செய்து கடந்த 11-ம் தேதி தீர்ப்பளித்தார். சட்டரீதியான தடை நீங்கியதையடுத்து, கடந்த 23-ம் தேதி தமிழக முதல்வராக 5-வது முறையாக ஜெயலலிதா பதவியேற்றார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

முதல்வர் ஜெயலலிதா தற்போது எம்எல்ஏவாக இல்லை. எனவே, 6 மாதங்களுக்குள் ஏதேனும் ஒரு தொகுதியில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்காக, அவர் பதவியேற்பதற்கு முன்பாகவே கடந்த 17-ம் தேதி சென்னை ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) தொகுதி அதிமுக எம்எல்ஏ வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா ஏற்கப் பட்டு, உடனடியாக அந்த தொகுதி காலியாக இருப்பதாக சட்டப் பேரவை செயலர் அறிவித்தார். இந்த தகவல் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா மூலம் தேர்தல் ஆணையத்துக்கும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னையில் நேற்று மாலை 6 மணி முதல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள் ளதால், சென்னை நகர் முழுவதும் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இது ஜூலை 2-ம் தேதி வரை அமலில் இருக்கும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் தமிழக அரசுக்கும் நடத்தை விதிகள் பொருந்தும். மத்திய அரசும் சம்பந்தப்பட்ட தொகுதிகளில் நடத்தை விதிகளை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

208 வாக்குச்சாவடிகள்

இடைத்தேர்தல் நடக்கும் ஆர்.கே.நகர் தொகுதி தண்டை யார்பேட்டை, கொருக்குப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, கொடுங்கையூர், ராயபுரம் ஆகிய சென்னையின் பின்தங்கிய பகுதிகளைக் கொண்ட தொகுதி யாகும். இந்தத் தொகுதியில் 208 வாக்குச்சாவடிகள் உள்ளன. கடந்த ஜனவரி 5-ம் தேதி தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி, இத்தொகுதியி்ல் மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரத்து 543 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் 2,548 பேர் அதிகம் உள்ளனர்.

ஆர்.கே.நகரில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த இடைத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகிவிட்டது. திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளும் போட்டியிடுவது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.

இடைத்தேர்தல் அட்டவணை

வேட்புமனு தாக்கல் தொடக்கம் - ஜூன் 3

மனு தாக்கல் நிறைவு - ஜூன் 10

மனுக்கள் பரிசீலனை - ஜூன் 11

மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் - ஜூன் 13

வாக்குப்பதிவு - ஜூன் 27

வாக்கு எண்ணிக்கை - ஜூன் 30

அதிமுக 5 முறை வெற்றி

கடந்த 1977-ம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதி உருவாக்கப்பட்டது. அன்று முதல் 2011 வரை நடந்துள்ள 9 தேர்தல்களில் அதிமுக 5 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தலா 2 முறை வென்றுள்ளன. 1977-ம் ஆண்டு எம்ஜிஆர் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியபோது சென்னை மாநகரில் அதிமுக வென்ற ஒரே தொகுதி ஆர்.கே.நகர் மட்டுமே.

கடந்த 2011 தேர்தலில்..

பி.வெற்றிவேல் (அதிமுக) - 83,777

பி.கே.சேகர்பாபு (திமுக) - 52,522

கே.ஆர்.விநாயகம் (பாஜக) - 1,300

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x