Last Updated : 23 Jun, 2017 07:51 AM

 

Published : 23 Jun 2017 07:51 AM
Last Updated : 23 Jun 2017 07:51 AM

ஆதார் இணைக்கப்பட்டதால் 10 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: உணவுத்துறை நடவடிக்கை

பொது விநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைகளுடன் ஆதார் இணைக்கப்பட்டதால் 10 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கப் பட்டுள்ளதாக உணவுத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் உணவு பாதுகாப்புத் திட்டத்துடன், தமிழக அரசின் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டமும் இணைத்து செயல்படுத்தப்படுவதால் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தற்போது அரிசி விருப்ப அட்டைகள், சர்க்கரை விருப்ப அட்டைகள், எப்பொருளும் இல்லாதவை, என 1 கோடியே 90 லட்சத்து75 ஆயிரத்து 778 குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. இவற்றுக்கு பதில் தற்போது மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மின்னணு குடும்ப அட்டைகள் வழங்குவதற்காக முதல்கட்டமாக, பொது விநியோகத் துறை முழுவதுமாக கணினி மயமாக்கப் பட்டது. அதன்பின், கடைகளில் ‘பாயின்ட் ஆப் சேல்’ எனப்படும் விற்பனை முனைய இயந்திரங்கள் வைக்கப்பட்டன. இவற்றின் மூலம் முதல்கட்டமாக ஆதார் எண் இணைக்கும் பணி நடந்தது.

வீட்டுக்கு ஒருவராவது ஆதார் எண்ணை குடும்ப அட்டையுடன் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கைபேசி செயலி, இணையதளம் ஆகியவற்றுடன், நியாயவிலைக் கடைகளிலும் இதற்கான வசதிகள் செய்யப்பட்டன. இருப்பினும், 1 கோடியே 39 லட்சத்து 48 ஆயிரத்து 646 குடும்ப அட்டைகளில் முழு வதுமாகவும், 49 லட்சத்து 47 ஆயிரத்து 173 குடும்ப அட்டை களில் பகுதியாகவும் இணைக்கப் பட்டுள்ளன. இருப்பினும், இதுவரை 1 லட்சத்து 78 ஆயிரத்து 408 குடும்ப அட்டைதாரர்கள் ஆதார் இணைப்பை மேற் கொள்ளவில்லை. மின்னணு குடும்ப அட்டைகள் ஆதார் அடிப்படையில் தயாரிக்கப்படுவ தால், ஆதாரை இணைக்காத குடும்ப அட்டைகளைக் கண் டறிந்து அவற்றை இணைக்கவும், இல்லாவிட்டால் அதற்கான கார ணங்கள் அறியவும் உணவுத் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிடப் பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இதற்கிடையில், ஆதார் இணைக்கப்பட்டதால், 10 லட்சம் குடும்ப அட்டைகள் நீக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழக அரசின் சார்பில் இலவச அரிசி வழங்கப்படுகிறது. சிறப்பு பொது விநியோகத் திட்டத் தின் கீழ் பருப்பு, பாமாயில் ஆகியவை மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இவற்றை தகுதியான குடும்ப அட்டை தாரர்கள் மட்டுமே பெற வேண்டும் என்பது உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி அவசியமாகிறது. இதனால், போலி அட்டைகளைக் களைய, குடும்ப அட்டை வழங்கும் அலுவலர்கள் வீடுவீடாக தணிக்கை செய்ய உத்தரவிடப்பட்டது.

தணிக்கையின்படி கடந்த 2011 முதல் 2016 வரை, 5 லட்சத்து 45 ஆயிரத்து 539 போலி குடும்ப அட்டைகள் கண்ட றியப்பட்டு நீக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, மின்னணு குடும்ப அட்டை பணிகளுக்காக ஆதார் இணைக்கப்பட்டது. ஆதார் விவரங்கள் இணைப்பின் வாயி லாக 10 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கப்பட்டன. ஆதார் இணைக்கப்பட்டதால் சொந்த ஊரிலும், வசிக்கும் ஊரிலும் தனித்தனி குடும்ப அட்டைகள் வைத்திருந்தவர்கள் ஏதேனும் ஒன்றை மட்டும் வைத்திருக்கும் வகையில் ஒன்று நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கொள்முதல் செய் யப்படும் உணவுப் பொருட்களும் கணிசமாகக் குறையும்.

அதே நேரம், உண்மையான குடும்ப அட்டைகள் வேறு ஏதேனும் காரணத்துக்காக நீக்கப் பட்டிருந்தால், உரிய ஆவணங் களை சமர்ப்பித்து அவற்றை மீண்டும் புதுப்பிக்கவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x