Published : 20 Sep 2014 11:11 AM
Last Updated : 20 Sep 2014 11:11 AM

ஆதரவின்றி மனநலம் பாதிக்கப்பட்டவர் காயத்துடன் உயிருக்கு போராடும் பரிதாபம்: அகரம் கிராமத்தில் அவலம்

கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் கிராமத்தில் ஆதரவற்ற நிலையில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவரை மீட்டு, சிகிச்சையளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவேரிப்பட்டணத்தை அடுத்த அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சௌந்தரராஜன்(50). இவருக்கு மனைவி, மகன் மற்றும் உறவினர்கள் உள்ள நிலையில் கடந்த 8 ஆண்டுகளாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு தனியாக மாட்டு கொட்டகையில், இரும்பு சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் உள்ளதாகவும், தற்போது வயிற்றுபோக்கால் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளவரை மீட்டு அரசு சிகிச்சையளிக்க வேண்டும் எனவும் ‘தி இந்து’வின் ‘உங்கள் குரல்’ பகுதியில் அகரம் கிராமத்தை சேர்ந்த வாசகர்கள் சிலர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதுகுறித்து விசாரித்தபோது சௌந்தரராஜனின் குடும்பத்தினர் பெங்களூரில் வசிப்பது தெரிய வந்தது. அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது உறவினர் ஞானம் என்பவர் கூறியதாவது:

டிப்ளமோ படித்த சௌந்தரராஜன் மனைவி, குழந்தை களுடன் வெளியூரில் வசித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது தலையில் அடிபட்டுள்ளது. அதிலிருந்து வலிப்பு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் விரக்தி அடைந்து மனஅழுத்தத்துக்கும் உள்ளானார். நாளடைவில் இவர் தனது இயலாமையை எண்ணி யாரையும் நெருங்கவே விடவில்லை.

யாருடைய ஆதரவும் இன்றி, உணவு கிடைக்காமல், ஒரு வருடத் துக்கு முன்பு ஏற்பட்ட கால் காயத்துடன், உரிய சிகிச்சை பெறவும் முடியாமல் உடல் நலம் பாதித்து நடக்க முடியாமல் ஒலை கொட்டகையில் முடங்கிக் கிடக்கிறார். மேலும் அவரை இரும்பு சங்கிலியால் கட்டி வைத்துள் ளனர். உயிரோடு போராடிக் கொண்டு இருக்கும் அவரை உடனடியாக மீட்டு உரிய மருத்துவ சிகிச்சையளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராஜேஷிடம் தெரிவித்தோம். அவரது உடனடியான உத்தரவின் பேரில் மாற்றுத் திறனாளி நல அலுவலர் மணிமாறன் மற்றும் குழுவினர் விரைந்து வந்து செளந்தர ராஜனை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x