Published : 31 Aug 2014 01:52 PM
Last Updated : 31 Aug 2014 01:52 PM

ஆசிரியர் தினம் குரு உத்சவ் ஆவது தமிழை வீழ்த்தும் சூழ்ச்சி: கருணாநிதி

ஆசிரியர் தினம் என்பதை இனி 'குரு உத்சவ்' என்றுதான் அழைக்க வேண்டும் மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆணை, நம் மொழியை வீழ்த்துவதற்காக பின்னப்பட்ட சூழ்ச்சி வலைக்கு உதாரணம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழக சட்டப் பேரவை முன்னாள் செயலாளர் எம்.செல்வராஜ் இல்லத் திருமண விழாவில் ஞாயிற்றுக்கிழமை கருணாநிதி பேசியது:

"இன்றையதினம் தமிழ்ச் சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள படிப்படியான தீமைகளையெல்லாம் நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இன்று நம்முடைய கையிலே தமிழுக்கு ஏற்றம் தரக் கூடிய எந்த சக்தியையும் நாம் படைத்திருக்கவில்லை. என்னால் உங்களுக்கு ஒன்றைச்

சொல்ல முடியும். நான் தமிழகத்தின் முதலமைச்சராக ஐந்து முறையும், தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினராக பன்னிரண்டு முறையும், சட்டப் பேரவை உறுப்பினராக ஏறத்தாழ 50 ஆண்டுக் காலம் இருந்தவன் என்ற முறையில் உங்களோடு பழகியவன், பழகிக் கொண்டிருக்கிறவன், மேலும் பழகப் போகிறவன் என்ற வகையில் சில அபாய அறிவிப்புகளை நீங்கள் மனதிலே பதிய வைத்துக் கொள்ள வேண்டுமென்பதற்காகச் சொல்கிறேன்.

நம்முடைய தமிழ்ச் சமுதாயம் வாழ்வதற்காகப் பாடுபட்டவர்களில் நாவலர் சோமசுந்தர பாரதியார் என்று ஒருவர் இருந்தார். அவர் தமிழ் நெறி, தமிழ் முறை, தமிழ் நலன், தமிழ் இயக்கம், இதற்காக தன்னையே ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்தவர். அவர் நம்முடைய இல்லங்களிலே நடைபெறுகின்ற விழா வானாலும், நாம் நடத்துகின்ற பெரு விழாக்களானாலும், அந்த விழாக்களில் எல்லாம் தமிழைப் போற்றுங்கள், தமிழை வாழ்த்துங்கள், தமிழர்கள் இலக்கியங்களை மறவாமல் அவற்றைப் பின்பற்றுங்கள் என்பதைச் சொல்லிச் சொல்லி மக்கள் மனதிலே பதிய வைப்பார்.

அப்படிப்பட்ட அந்தப் பாரதியார், நாவலர் பாரதியார் ஒன்றைச் சொல்வார். நம்மை இன்றைக்கு சீரழிக்க வந்துள்ள மொழி ஆதிக்கத்திற்குப் பெயர் 'சஞ்சுகிருதம்' என்று சொல்லுவார். அதாவது சமஸ்கிருதத்தை அவ்வளவு கிண்டலாக, கேலியாக, 'சஞ்சுகிருதத்தை' யாரும் பின்பற்றாதீர்கள் என்று சொல்லுவார். அப்படிப்பட்ட பெரியவர்கள், தியாகச் செம்மல்கள், தமிழ்ச் சான்றோர்கள் வாழ்ந்த தமிழ் நிலத்தில் இன்றைக்கு தமிழ்த் திருமணத்தை நடத்திக் கொள்கின்ற நேரத்தில் ஒன்றை நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

அவர் சொன்ன அந்த 'சஞ்சுகிருதம்' - அவர் கேலியாகச் சொன்ன, ஏளனமாகச் சொன்ன, அந்த சஞ்சுகிருதம் இன்றைக்கு தமிழ்நாட்டில் சமஸ்கிரத வாரமாகக் கொண்டாடப்பட வேண்டுமென்று சொல்கிற அளவுக்கு ஓங்கி வளர்ந்திருக்கின்றது.

அது மாத்திரமல்ல; இன்றைக்கு காலையிலே நான் பத்திரிகையிலே படித்த ஒரு செய்தியில், என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால், இனிமேல் 'ஆசிரியர் தினம்' என்பதற்குப் பதிலாக 'குரு உத்சவ்' என்ற பெயரில் அதைக் கொண்டாட வேண்டுமென்று மத்திய அரசு அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது.

ஆசிரியர் தினம் என்பதை நாம் ஆண்டாண்டு காலமாகக் கடைப்பிடித்து வருகிறோம். அந்தச் சொல்லை மாற்றி இன்றைக்கு வந்துள்ள மத்திய புதிய அரசு வெளியிட்டு ஆணை, இனிமேல் அனைத்துப் பள்ளிகளிலும் 'குரு உத்சவ்' என்றுதான் ஆசிரியர் தினத்தை அழைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இப்படி நம்முடைய மொழியில் முதலில் கை வைத்து, அதை வீழ்த்தி விட்டு, அதற்குப் பிறகு இந்த மொழிக்குரியவர்களை, இந்த மொழியால் உயர்ந்தவர்களை, இந்த மொழியால் தங்களை வருத்திக் கொண்டவர்களை வீழ்த்தி விட கொஞ்சம் கொஞ்சமாக, சிறிது சிறிதாக சூழ்ச்சி வலை பின்னப்படுகிறது என்பதற்கு இதை விட வேறு எந்த உதாரணமும் தேவையில்லை.

ஆகவே தான் நாம் இந்தத் திருமணத்தை தமிழர் முறைப்படி நடத்திக் கொண்டாலுங்கூட, இந்தத் தமிழர் முறைகளுக்கு வேட்டு வைக்கின்ற அளவுக்கு மெல்ல மெல்ல ஆரியம் தமிழகத்திலே தன்னுடைய சித்து வேலைகளைத் தொடங்கி விட்டது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சமுதாயத் துறையிலே திராவிட முன்னேற்றக் கழகம் ஈடுபாடு கொண்டு இத்தகைய செய்திகளையெல்லாம் வெளியிடாவிட்டால், தமிழன் மேலும் அடிமைப்பட்டுப் போய் விடுவான் என்பதை ஞாபகத்திலே வைத்துக் கொண்டு, அந்த ஞாபகத்தை சிறிதும் மறவாமல் தமிழர்களுக்காக, தமிழன் வாழ வேண்டும், தமிழ்ச் சமுதாயத்திற்காக உழைக்க வேண்டும், பாடுபட வேண்டும் என்ற அந்த உணர்வோடு செயல்படுங்கள் என்று நான் இந்தத் திருமண விழாவிலே அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்" என்றார் கருணாநிதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x