Published : 22 Nov 2014 10:36 AM
Last Updated : 22 Nov 2014 10:36 AM

ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய ‘திண்டுக்கல் வீரபாண்டிய கட்டபொம்மன்’ தூக்கிலிடப்பட்ட நாள் நவ.21

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மறைக்கப்பட்டவர்கள் பலர் உண்டு. அவர்களில் ஒருவர்தான், திண்டுக்கல் விருப்பாட்சி பாளையப்பட்டையை ஆட்சி செய்து ஆங்கிலேயர்களால் நவ. 21-ம் தேதி தூக்கிலிடப்பட்ட, விடுதலைப் போராட்ட வீரர் திருமலை குப்பள சின்னப்பநாயக்கர்.

இவர் மக்களால் ‘திண்டுக்கல் வீரபாண்டிய கட்டபொம்மன்’ என்றும் கோபால் நாயக்கர் என்றும் அழைக்கப்பட்டவர். இவர் குறித்து பழநி தொல்லியல் ஆய்வாளர் ஆ.நந்திவர்மன் கூறியதாவது: 1371-ம் ஆண்டில் விஜயநகரப் பேரரசர் குமாரகம்பனன், மதுரையைக் கைப்பற்றி விஜயநகரப் பேரரசின் ஒரு பகுதியாக மதுரையை இணைத்துக் கொண்டார். அப்போது அவருடைய படைத் தளபதிகளில் ஒருவரான சின்னப்ப நாயக்கர் (1381-1425), தனது குலதெய்வத்தின் பெயரில் திண்டுக்கல் அருகே விருப்பாட்சி என்ற ஊரை ஏற்படுத்தினார்.

விருப்பாட்சியைச் சுற்றி உள்ள பல ஊர்களை இவர் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஆண்டு வந்தார். அவருக்குப் பின்னர், விருப்பாட்சி அரசின் 19-ஆம் பாளையக்காரராக திருமலை குப்பள சின்னப்பநாயக்கர் (கோபால் நாயக்கர்) (1763-1801) பட்டமேற்று, ஆட்சி செய்து வந்தார். இவர் பதவிக்கு வந்தது முதலே வெள்ளையர்களுக்கும், இவருக்கும் பனிப்போர் தொடங்கிவிட்டது.

ஆங்கிலேயர் கோபத்துக்குக் காரணம் `ஆங்கிலேயர் ஆதிக்க எதிர்ப்புக் கூட்டமைப்பு’ என்ற அமைப்பை நிறுவி, துண்டா ஜிவாக், கேரளவர்மா, தீரன் சின்னமலை, திண்டுக்கல் லக்கம நாயக்கர், தளி எதுலப்ப நாயக்கர் உள்ளிட்ட மன்னர்களை இதன் உறுப்பினர்களாக்கியிருந்ததும் கோபால் நாயக்கர் மீது ஆங்கிலேயரின் ஆத்திரத்துக்கு காரணங்களாகும்.

இவர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு மொகரம் பண்டிகை நாளன்று கோவை ஆங்கிலேயக் கோட்டையைத் தகர்க்க திட்டம் தீட்டியிருந்ததை தனது ஒற்றர்கள் மூலம் அறிந்த ஆங்கிலேயர்கள், இந்தப் புரட்சிக்குக் காரணமான கோபால் நாயக்கர் மேல் கடுஞ்சினம் கொண்டிருந்தனர்.

1772-ல் சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதரை ஆங்கிலேய அரசு படுகொலை செய்தபோது, ஆதரவிழந்த அவரது மனைவி வேலுநாச்சியாரையும், மகள் வெள்ளச்சியையும் விருப்பாட்சி அரண்மனையில் சகோதரி போல பாதுகாத்து வந்ததும், கோபால் நாயக்கரை கைது செய்ய ஆங்கிலேயர் பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் அதனை அலட்சியப்படுத்தினார். மேலும் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பின், அவரது சகோதரர் ஊமைத்துரை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

கோபால் நாயக்கர், 1801 பிப். 21 அன்று, அவரை மீட்பதற்காக தன்னுடைய படைவீரன் பொட்டிப் பகடை தலைமையில் 300 வீரர்களை அனுப்பி, ஊமைத்துரை, துரைசிங்கம் ஆகியோரை மீட்டார். இந்தச் செயலும் வெள்ளையருக்கு கோபால் நாயக்கர் மீது மேலும் கடுங்கோபத்தை ஏற்படுத்தியது. ஆங்கிலேயர்கள் சம்மனை ஏற்க மறுப்பு கோபால்நாயக்கரை கைது செய்யும் முனைப்புடன் 1801 மார்ச் 17-ம் நாள் லெப்டினட் கின்னஸ் தலைமையில் ஆங்கிலப் படை விருப்பாட்சியைத் தாக்கியது. கோட்டையை முற்றுகை இட்டு, 72 வயதான கோபால் நாயக்கரை சரண் அடையுமாறு ஆங்கிலேயர் வற்புறுத்தினர்.

அதனை ஏற்க மறுத்து, சுரங்கப்பாதை வழியாக கருமலைக் காட்டுக்குள் மறைந்துவிட்டார். அரண்மனை முன் தூக்கிலிடப்பட்டார் தலைமறைவான கோபால்நாயக்கரின் தலைக்கு, ஆங்கிலேயர் 2,000 ரூபாய் விலை வைத்தனர். கருமலைக் குன்றுகளில் தங்கியிருந்த கோபால் நாயக்கரை அவரது உள்நாட்டு எதிரிகளே காட்டிக் கொடுக்க, 1801-ம் ஆண்டு மே 4-ம் நாள் கோபால்நாயக்கர் கைது செய்யப்பட்டார். விசாரணை என்கிற பெயரில் சித்திரவதை செய்யப்பட்டார். 1801-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி விருப்பாட்சிக் கோட்டை முன்பு ஆங்கிலேய அரசால் தூக்கிலிடப்பட்டார். அவரது வீர வரலாறு தெரியாதவாறு அவரது கோட்டை முற்றிலும் அழிக்கப்பட்டது’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x