Last Updated : 28 Sep, 2016 12:21 PM

 

Published : 28 Sep 2016 12:21 PM
Last Updated : 28 Sep 2016 12:21 PM

அருப்புக்கோட்டையில் திமுகவின் பலத்தை அதிமுக முறியடிக்குமா?

திமுக வசம் உள்ள அருப்புக் கோட்டை நகராட்சியை இம்முறை அதிமுக கைப்பற்றுமா அல்லது திமுக தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ளுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழக அரசியல் வரலாற்றில் அருப்புக்கோட்டைக்கு என்றுமே முக்கியத்துவம் உண்டு. இத் தொகுதியில் 1977-ம் ஆண்டு போட்டியிட்டு எம்.ஜி.ஆர். முதல்வர் ஆனார் என்பது குறிப்பி டத்தக்கது. அதைத் தொடர்ந்து அருப்புக்கோட்டையில் பலர் அரசியல் களம் கண்டுள்ளனர்.

2011-ல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் அருப்புக் கோட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வைகை செல்வன் அமைச்சர் ஆனார். ஆனாலும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றியை தட்டிச் சென்றது. திமுக சார்பில் போட்டியிட்ட சிவப்பிரகாசம் நகர்மன்றத் தலை வரானார்.

இருப்பினும், அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வைகைச் செல்வனை பின்னுக்குத் தள்ளி திமுக சார்பில் போட்டியிட்ட கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். ஆனாலும், அருப்புக்கோட்டை நகர் பகுதி யில் திமுகவுக்கு வாக்கு சற்று குறைவாகவே இருந்ததும் குறிப் பிடத்தக்கது.

இந் நிலையில், நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் நகராட்சியை திமுக தக்க வைத்துக் கொள்ளுமா அல்லது அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே தொற்றிக்கொண்டுள்ளது. அதோடு, அருப்புக்கோட்டை நகர மக்களை வாட்டி வதைக்கும் முக்கிய பிரச்சினை குடிநீர் தட்டுப்பாடு. காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் கொண்டுவரப்பட்டும் அது நகர மக்கள் அனைவருக்கும் முழுமையாக கொண்டு சேர்க்கப்படவில்லை என்பதும், சுகாதாரப் பணிகளை சரிவர மேற்கொள்ளாதது எனப் பல்வேறு பிரச்சினைகள் தொடர்கின்றன.

இவற்றை எதிர்கொண்டு நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி வாகை சூட அதிமுகவும் திமுகவும் திட்டமிட்டு பணியாற்றி வருகின்றன. திமுக வடக்கு மாவட்டச் செயலரும் அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ.வுமான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் மகன் ரமேஷ் அண்மையில் அதிமுகவில் இணைந்ததால் திமுகவுக்கு சற்று பின்னடைவு என்றே கூறப்படுகிறது.

மேலும் அருப்புக்கோட்டையில் 1-வது வார்டு உட்பட சில வார்டுகளில் திமுக நேரடியாகப் போட்டியிடாமல் மதிமுக வேட் பாளரை நிறுத்தி அவருக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும், நகர்மன்றத் தலைவரை தேர்ந் தெடுக்கும்போது திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று நிபந்தனை கூறி பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் 4 முறை கவுன்சிலராகப் பொறுப்பு வகித்த திமுக நகரச் செயலர் ஏ.கே.மணி இம்முறை போட்டியிடாமல் இருப்பதும் திமுகவுக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

அருப்புக்கோட்டை நகர்மன்றத் தலைவர் பதவி தற்போது பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக நிர்வாகி செல்வேந்திரன் என்பவரது மனைவியையோ, முன்னாள் நகரப் பொருளாளர் தர்மரின் மனைவி சுந்தரஆனந்தவள்ளியையோ நிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும், திமுகவில் தற்போதைய நகர்மன்றத் தலைவர் சிவபிரகாசத்தின் மனைவி சுந்தரலட்சுமியை நிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து நகர்மன்றத் தலை வர் சிவபிரசாகம் கூறிய தாவது:

அருப்புக்கோட்டை நகராட்சியில் மக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. குடிநீர் பற்றாக்குறையை சரிசெய்ய 10 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட 2 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. டிசம்பரில் அவை பயன்பாட்டுக்கு வந்துவிடும். அஜீஸ் நகர், ரயில்வே பீடர் ரோடு, வசந்தம் நகரில் சிறப்பான முறையில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் நேஜாஜி பூங்கா பணிகளும், திருச்சுழி சாலையில் பூங்கா அமைக்கும் பணிகளும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

பைபாஸ் சாலைக்குச் செல்ல 3 சார்பு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தெரு விளக்குகள், மின் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மார்க்கெட் பகுதியில் சேரும் குப்பைகளை அன்றிரவே அள்ளப்பட்டு வரு வதோடு, வாரம் ஒருமுறை மாஸ் கிளீனிங் முகாமும் நடத்தி வருகிறோம். இதனால் மக்களிடம் திமுகவுக்கு நல்ல ஆதரவு பெருகியுள்ளது என்றார்.

அதிமுக நகரச் செயலர் கண்ணன் கூறியதாவது:

அருப்புக்கோட்டையில் பாதி பகுதிக்கு தாமிரபரணி தண்ணீர் கிடைக்கவில்லை. தாமிரபரணியில் இருந்து அருப்புக்கோட்டைக்கு தனியாக பைப்லைன் அமைத்து அனைத்து பகுதிகளுக்கும் தடையின்றி குடிநீர் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற் காக முதல்வர் ஜெயலலிதா முதல் கட்டமாக ரூ.68 கோடி ஒதுக்கீடு அளித்தார். அதைத் தொடர்ந்து பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் சாலை வசதிகள், சுகாதாரத்திலும் கவனம் செலுத்து வோம் என வாக்குறுதியுடன் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறோம். இதற்கு மக்களிடம் வரவேற்பு உள்ளதாகத் தெரி வித்தார்.

இருப்பினும், அருப்புக் கோட்டையில் கட்சியைத் தவிர ஜாதி ரீதியான பிரச்சினைகளும் எழுவது வழக்கம்.

கடந்த முறை திமுவுக்கு வாய்ப்பளித்த குறிப்பிட்ட சமூகத்தினர் இம்முறை அதிமுகவுக்கு வாக்களிக்கத் திட்ட மிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x