Last Updated : 19 Jun, 2017 09:21 AM

 

Published : 19 Jun 2017 09:21 AM
Last Updated : 19 Jun 2017 09:21 AM

அரசுப் பள்ளிகளுக்கு ஒரு கலங்கரை விளக்கம்: சுனாமியால் பாதித்த பிறகும் வீறுகொண்டு எழுந்தது- நாகை கீச்சாங்குப்பம் நடுநிலைப் பள்ளி

தமிழகத்தில் 2004 சுனாமியின் தாக்குதலால் நிர்மூலமான ஊர்களில் நாகப்பட்டினமும் ஒன்று. அங்கு கடற்கரையோரம் கீச்சாங்குப்பத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி அடியோடு நாசமானது. அப்பள்ளியில் படித்த மாணவர்களில் 80 பேர் மாண்டு போனார்கள். கீச்சாங்குப்பத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளும், பொருள் இழப்புகளும் கொஞ்சமல்ல. மக்கள் ஊரையே காலி செய்து நாகை நகருக்குள் குடிபெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பள்ளிக்கூடமும் மூடப்பட்டது.

அந்தப் பள்ளிக்கூடம்தான் இன்று தமிழ்நாட்டுக்கே முன்மாதிரி அரசுப் பள்ளியாக எழுந்து நிற்கிறது. ஐ.எஸ்.ஓ. தரச் சான்று பெறும் அளவுக்கு கல்வியிலும், கட்டமைப்பு வசதிகளிலும் மேம்பட்டு விளங்குகிறது. மோசமான ஒரு பேரழிவுக்குப் பிறகு இவ்வளவு மகத்தான வளர்ச்சியை எட்ட அந்த மீனவ கிராமத்தின் நாட்டார்கள் எடுத்த முயற்சிகளும், அர்ப்பணிப்பு மிகுந்த ஆசிரியர்களுமே காரணம்.

நாகப்பட்டினம் நகருக்குள் உருவாக்கப்பட்ட தற்காலிக சுனாமி குடியிருப்பு, பின்னர் நிரந்தர குடியிருப்பாக மாறியது. கடற்கரையை ஒட்டியுள்ள பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர் அச்சப்பட்டனர். என்ன செய்வது என ஊர் மக்கள் கூடி விவாதித்தனர். பள்ளிக்கூடம் என்பது ஒரு கிராமத்தின் மிக முக்கிய அடையாளம்; ஆகவே, அழிந்து போன கிராமப் பள்ளியை மீண்டும் புனரமைப்பது என்று முடிவு செய்தனர்.

இதற்கிடையே சுனாமிக்குப் பிறகு ஒரு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் 14 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டித் தரப்பட்டது. எனினும் அதில் போதிய வசதிகள் இல்லை.

இந்நிலையில்தான் கீச்சாங் குப்பம் பள்ளியின் தலைமை யாசிரியராக 2013-ம் ஆண்டு மே மாதம் ஆர்.பாலு பொறுப்பேற்றார். தலைமையாசிரியரும் கிராம மக்களும் கூடி பேசினர். சுனாமிக்கு முன்பு 450 பேர் பயின்ற பள்ளியில் இன்று 92 மாணவர்கள் மட்டுமே உள்ளனர்; பள்ளியை மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்த வேண்டும் என்று பாலுவிடம் கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, பள்ளியின் தோற்றத்தை முற்றாக மாற்றுவது; ஆங்கில வழி வகுப்புகளை தொடங்குவது; கம்ப்யூட்டர் ஆய்வகம் மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகளை உருவாக்குவது என தீர்மானித்தனர். அங்கன்வாடி மையத்தில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை தொடங்கவும் முடிவானது.

மாவட்ட நிர்வாகம் அளித்த சுமார் ரூ.7 லட்சம் தொகையைக் கொண்டு பள்ளி புனரமைப்பு செய்யப்பட்டது. கணினி ஆய்வகம், அறிவியல் ஆய்வகம், நூலகம் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அறைகள் உருவாக்கப்பட்டன. ஒரு வகுப்பறையில் ஸ்மார்ட் கிளாஸ் வசதி உருவாக்கப்பட்டது.

பள்ளி நூலகத்தில் படிக்கும் மாணவ, மாணவிகள்.

அதன் பிறகு படிப்படியாக ஏற்பட்ட வளர்ச்சி பற்றி தலைமை ஆசிரியர் ஆர்.பாலு கூறியதாவது:

இவ்வளவு முயற்சிகளின் பலனாக 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 32 மாணவர்கள் புதிதாக சேர்ந்தனர். இது தவிர கிராம மக்களால் ஆசிரியர் கள் நியமிக்கப்பட்டு நடத்தப்படும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் 60 மாணவர்கள் சேர்ந்த னர். அடுத்த ஆண்டில் 84 புதிய மாணவர்கள் வந்தனர். 2015-ம் ஆண்டில் 8 வகுப்பறைகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் வசதியை ஏற்படுத்தினோம். தமிழகத் திலேயே அனைத்து வகுப்பறைகளிலும் இன்டர் நெட் இணைப்புடன் கூடிய ஸ்மார்ட் கிளாஸ் வசதி ஏற்படுத்தப்பட்ட முதல் அரசுப் பள்ளி என்ற பெருமை கிடைத்தது. கராத்தே, யோகா மற்றும் ஆங்கில உரையாடல் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த ஆண்டில் பள்ளி திறந்த முதல் நாளிலேயே 112 புதிய மாணவர்கள் சேர்ந்தனர். அடுத்தடுத்த நாட்களிலும் சேர்த்து மொத்தம் 134 புதிய மாணவர்கள் வந்தனர்.

2015-ம் ஆண்டு ஜூலை மாதம் எங்கள் பள்ளியை ஆய்வு செய்த மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை இயக்குநர் ஆர்.சீனிவாசன், “தமிழ்நாட்டின் மிகச் சிறந்த பள்ளிகளில் இதுவும் ஒன்று” என்ற பாராட்டு குறிப்புகளை பள்ளி பதிவேட்டில் பதிவு செய்தார்.

இந்த சூழலில் கல்வி, கட்டமைப்பு வசதிகளில் சிறந்த தரத்தை பராமரிக்கும் எங்கள் பள்ளிக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஐ.எஸ்.ஓ. தரச் சான்று கிடைத்தது. இதற்கான விழா கடந்த ஏப்ரல் 17-ம் தேதி அப்போதைய மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. மகிழ்ச்சியில் திளைத்த கிராம மக்கள் மேள தாளத்துடன் ஊர்வலமாக விழா இடத்துக்கு வந்தனர். பள்ளிக்குத் தேவையான ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை சீர் வரிசைகளாக கொடுத்தனர்.

இந்த ஆண்டில் இதுவரை 91 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 380 ஆக அதிகரித்துள்ளது. இது தவிர மழலையர் வகுப்புகளில் உள்ள 70 பேரையும் சேர்த்து 450 மாணவர்கள் என்ற பழைய நிலைக்கு பள்ளி உயர்ந்துள்ளது.

பள்ளியின் வளர்ச்சியில் கீச்சாங்குப்பம் கிராமத்தின் நாட்டார் ஆர்.எம்.பி.ராஜேந்திரன் நாட்டார், கிராமக் கல்விக் குழுத் தலைவர் சி.சவுந்தரராஜன் நாட்டார், பஞ்சாயத்தார்கள் மற்றும் கிராம இளைஞர் மன்றத்தினர் கொண்டிருக்கும் அக்கறையும், ஆர்வமும்தான் இதற்கெல்லாம் உந்து சக்தியாக திகழ்கிறது” என்றார் பாலு. இந்தப் பள்ளியின் வளர்ச்சியானது பிற அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பல செய்திகளை கூறுகிறது.

பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ள: 86082 27549

பள்ளிக்கல்வித் துறை செயலாளர் கருத்து

பள்ளிக்கல்வி துறை செயலாளர் த.உதயசந்திரன் இது பற்றி கருத்து தெரிவித்தபோது, “ஒரு பேரழிவு தந்த அச்சமும், அதிர்ச்சியும் நீங்காத நிலையில் அந்த கிராம மக்கள் நின்றிருந்தனர். அவர்களிடம் தலைமையாசிரியர் பாலு மெல்ல மெல்ல நம்பிக்கையை வளர்த்தார். அதன் பலனாக இந்த பள்ளி இவ்வளவு பெரிய வளர்ச்சியை இன்று எட்டியுள்ளது. எங்கெல்லாம் சமூகத்துக்கும் பள்ளிக்கூடத்துக்குமான பிணைப்பு வலுவடைகிறதோ அங்கெல்லாம் பள்ளி வளர்ச்சி பெறும். இதுதான் கீச்சாங்குப்பம் அனுபவம் கூறும் மிக முக்கிய செய்தி என கருதுகிறேன்” என்று கூறினார்.

பள்ளியில் உள்ள வண்ணமயமான வகுப்பறை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x