Last Updated : 02 Dec, 2013 08:37 AM

 

Published : 02 Dec 2013 08:37 AM
Last Updated : 02 Dec 2013 08:37 AM

அரசு தொடங்கும் குறைந்த விலை மருந்தகங்கள் : சென்னையில் முதல் கிளை

தமிழகத்தில் 6 இடங்களில் குறைந்த விலையில் மருந்து விற்பனை செய்யும் நிலையங்களை மாநில அரசு தொடங்குகிறது. இதன் முதல் கிளை, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒரு வாரத்தில் திறக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 பேர் வசிக்கின்றனர். தமிழகம் முழுவதும் 32 ஆயிரத்து 336 தனியார் மருந்து கடைகள் உள்ளன. 2,230 பேருக்கு ஒரு மருந்து கடை என்ற விகிதத்தில் உள்ளது.

பல விதமான நோய்கள் பரவும் இச் சூழ்நிலையில் விலை அதிகமான மருந்துகளை வாங்க முடியாமல் ஏழை-எளிய மக்கள் பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர். கூட்டுறவுத் துறை மூலம் 7 இடங்களில் டி.யு.சி.எஸ். மருந்து கடைகள் தொடங்கப்பட்டன. இங்கும் தனியார் மருந்து கடைகளில் விற்கப்படும் விலையிலேயே மருந்துகள் விற்கப்பட்டதால் பொதுமக்களுக்கு எவ்விதமான பயனும் ஏற்படவில்லை.

இந்நிலையில், குறைந்த விலை யில் உயர்ந்த உயிர்காக்கும் மருந்து விற்பனையை தொடங்க சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதல் கட்டமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருந்து விற்பனை ஒரு வாரத்தில் தொடங்கப் பட உள்ளது. இதற்காக மருத்துவ மனை, புறநோயாளிகள் பிரிவு அருகில் 200 சதுர அடியில் விற்பனை நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம், மருந்து மாத்திரைகளை கொள்முதல் செய்து அரசு மருத்துவ மனைகள், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கி வருகிறது. ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இந்த மருந்து விற்பனை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த விற்பனை நிலையத் தில் சர்க்கரை நோயாளிகளுக்கான இன்சுலின் மருந்து, சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக் கான விலை உயர்ந்த மாத்திரைகள் உள்ளிட்ட மருந்துகள் குறைந்த விலை யில் விற்பனை செய்யப்பட உள்ளன. தற்போது தேவையான மாத்திரை, மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. அதன்பின், படிப்படியாக மீதமுள்ள 5 இடங்களில் மருந்து விற்பனை நிலையம் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தமிழக அரசு குறைந்த விலையில் மருந்து விற்பனை செய்வதற்கு முழு முயற்சி எடுத்தவர் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை சேர்ந்த ஏ.சுரேஷ்குமார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மருந்துகள் விற்பனை மேலாண்மை குறித்த ஆராய்ச்சியில் ( பிஎச்டி) கடந்த 4 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ள அவரிடம் இதுதொடர்பாக கேட்டபோது அவர் கூறியது:

மருந்துகள் விற்பனை பற்றிய என்னுடைய 4 ஆண்டு ஆராய்ச்சியில், அரசு முயற்சி எடுத்தால் குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்ய முடியும் என்பது பற்றிய விவரங்களை தமிழக முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளருக்கு அனுப்பினேன். இதையடுத்து, தமிழ் நாடு மருத்துவப் பணிகள் கழக நிர்வாக இயக்குநர் ராஜேந்திர ரத்னு, என்னை அழைத்து பேசினார். அரசே குறைந்த விலையில் மருந்து விற்பனை செய் வதற்கான அனைத்து வழிமுறைக ளையும் தெளிவாக எடுத்து கூறினேன். அதன்படி, அரசே குறைந்த விலையில் மருந்து விற்பனையை தொடங்க உள்ளது. இதனை என்னுடைய 4 ஆண்டு உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x